சிறுநீரகப் பாதுகாப்பு முறைகள்!

5 Min Read

மருத்துவம்

மரு. நா.மோகன்தாஸ்
சிறுநீரக மருத்துவர். (இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் மேனாள் தலைவர், தஞ்சாவூர்)

உலகத்திலேயே மிகச் சிறந்த மிக நுண்ணிய துப்புரவு சாதன சுத்திகரிப்பு தொழிற்சாலை நமது உடலிலுள்ள சிறுநீரகங்கள் ஆகும்.

பொதுவாக இதயத்திற்குக் கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை நாம் நமது சிறுநீரகத்திற்கு கொடுப்பதில்லை. ஆணுறுப்பின் விதைகளையே சிறுநீரகம் என்று நினைத்துக்கொண்டு மருத்துவரிடம் எனக்கு கிட்னி வீங்கி இருக்கிறது என்று ஆணுறுப்பின் விதைகளையே காண்பித்துச் சொல்லக்கூடிய நிலையில் உள்ளோம். ஏனெனில், சிறுநீரகத்தினைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் மிக, மிகக் குறைவாக இருப்பதுவே இதற்குக் காரணமாகும்.

கரு முதல் மரணம் வரை

தாயின் கர்ப்பப் பையில் கரு உருவாகிய நான்காவது மாதத்திலிருந்து தொடங்கி மனிதனின் மரணம் வரையிலும் இடைவிடாது இயங்கி நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான மிக முக்கியமான பணிகளை இச்சிறுநீரகங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன.

சிறுநீரக பாதுகாப்புக் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சிறுநீரகம் தொடர்பான சில கேள்விகளும் அதற்கான பதில்களும் வருமாறு:

அடிக்கடி சிறுநீர் பிரிவது ஏன்?

கேள்வி: முதுமையில் அடிக்கடி சிறுநீர் பிரிவது ஏன்?

பதில்: முதுமையில் ஆண்கள் இரவில் படுக்கையில் இருந்து எழுந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய் ‘பிராஸ்டெட் சுரப்பி’ வீக்கமடைதல் போன்ற காரணங்களால் முதுமையில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது தடை இருந்தாலோ மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும்.

நுண்கிருமித் தொற்று

கேள்வி: சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தா?

பதில்: சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையில் தேங்குகின்ற சிறுநீர் சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்யும். இப்படி விரிவதால் முதலில் அடிவயிற்றில் வலி உண்டாகி சிறுநீர் வெளியேறும் உணர்வும் உந்துதலும் ஏற்பட்டுச் சிறுகச் சிறுக சிறுநீர் வெளியேறும். நாளடைவில் இந்த வலி ஏற்படுவது மறைந்து சிறுநீர்ப்பை தனக்குரிய செயல் தன்மையை மெல்ல மெல்ல இழந்துவிடும்.

இவ்வாறு சிறுநீர்ப்பையில் தேங்கும் சிறுநீரினால் நுண்கிருமிகள் தொற்று ஏற்படும். பொதுவாகச் சிறுநீரை அடக்கும் தன்மை ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலைமையில் அவ்விடங்களில் சிறுநீர் கழிப்பதை முடிந்தளவிற்கு தவிர்க்கின்றனர்.

பள்ளி, கல்லூரி அலுவலங்கள் ஆகிய இடங்களில் கழிப்பறைகள் இருந்தாலும் பெரும்பாலும் பெண்கள் இடையிடையே சென்று சிறுநீர் கழிப்பதில்லை.

சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை பழுதடையும் வாய்ப்புள்ளது. சிறுநீரை அடக்கி வைக்காமல் உணர்வு ஏற்பட்டவுடன் கழித்துவிடுவதே நல்லது.

சிறுநீரகச் செயலிழப்பு

கேள்வி: சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படக் காரணம் என்ன?

பதில்: நமது உடலில் பல முக்கியமான பணிகளை இடைவிடாது செய்து கொண்டிருப்பது சிறுநீரகங்கள். சிறுநீரகத்தினுள் மில்லியன் அளவில் சிறுநீர் நுண்குழாய்கள் வேலை செய்து கொண்டுள்ளன. அவற்றில் 70 விழுக்காடு பழுதுபட்டிருந்தாலும் 30 விழுக்காடு சிறுநீரக நுண் குழாய்கள் தொடர்நது உடலுக்குத் தேவையான வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தவை. அந்த 30 விழுக்காடு நெப்ரான்கள் – நுண் குழாய்களும் பழுதுபடத் தொடங்குகின்றபோதுதான் சிறுநீரகம் செயலிழப்பின் அறிகுறிகள் தெரியத் தொடங்குகின்றது.

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அதனுடைய பணிகள் பாதிக்கப்படுவதால் சிறுநீரகங்களால் வெளியேற்றப்பட வேண்டிய யூரியா, கிரியாடினின், பொட்டாசியம் போன்றவைகளும் தேவையற்ற திரவங்களும் உடலிலேயே தங்கி விடுகிறபோதுதான் சிறுநீரகங்களின் செயலிழந்த தன்மை வெளியே தெரிய வருகிறது.

கேள்வி: சிறுநீரகச் செயலிழப்புக்கான  காரணம் என்ன?

பதில்: நீண்ட நாள் இரத்தக் கொதிப்பு, நீண்ட நாள் நீரிழிவு, பரம்பரைக் குடும்ப வழி மரபணுக்கள், நாள்பட்ட சிறுநீரகக் குழாய் அடைப்பு, வலி நிவாரணிகள் மற்றும் இரசாயனத் தாதுப் பொருள்களைத் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு போன்ற பல காரணங்களால் சிறுநீரகம் செயலிழக்கும் நிலை உருவாகிறது.

கேள்வி: சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள் என்ன?

பதில்: நீரிழிவு நோயினைப் போலவே சிறுநீரக செயலிழப்பும் நமது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. எரித்ரோபாய்டின் உற்பத்திக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது.

வாந்தி, விக்கல், பசியின்மை சிலருக்கு இரத்த வாந்தி ஏற்படும். அதிக இருமல், படுக்க முடியாத அளவிற்கு மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஏற்படும். சளியுடன் இரத்தம் கலந்து வரும்.

யூரியாவின் அளவு அதிகரிக்கின்றபோது குழப்பமும், ஆழ்நிலை மயக்கமும், கைகளில்  நடுக்கமும், நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு மண்டலப் பாதிப்பும் ஏற்படுகின்றன.

பாதுகாப்பு முறைகள்

கேள்வி: சிறுநீரகப் பாதுகாப்பு முறைகள்?

பதில்: சிறுநீரகங்கள் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல் மட்டுமல்லாமல் நாம் சாப்பிடுகின்ற மருந்து மாத்திரைகள் உலோகத் தாதுப் பொருள்கள் கலந்த லேகியம், பஸ்பம் போன்றவற்றையும் வெளியேற்றுகின்றன.

நம்முடைய அறியாமையால் அல்லது தகுதி வாய்ந்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கேட்காத செயல்பாடுகளே பெரும்பாலும் நமது சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

மருந்துகள் சாப்பிடும்பொழுது சிறுநீர் குறைவாகப் போனாலும், கால்வீக்கம், உடம்பு வீங்கி இருந்தாலும் உடனே மருந்துகளை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுவர்களுக்குச் சிறுநீர்த் துவாரம் சிறிதாக இருந்தாலோ, தோலால் மூடியிருந்தாலோ சிறுநீர் வெளியேறாமல் இருந்தாலோ நாளடைவில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே, ஆரம்ப நிலையிலேயே  மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்குப் ‘பிராஸ்டேட் சுரப்பி’ வீங்கி விடுவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது சிறுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் போவது குறைந்து போகும். அப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீரிழிவு, இரத்தக் கொதிப்பு ஆகிய இரண்டுமே சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணங்களாகும். இவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சையினை மேற்கொள்ளுதல் வேண்டும்.

சிறுநீரகத்திலிருந்து புரதம் அதிகம் வெளியாவதற்கு நீரிழிவு நோய் ஒரு காரணமாகும். ஆகவே, மருத்துவரின் அறிவுரையின்படி நீரிழிவு நோய்க்குரிய மாத்திரைகளை மாற்றித் தேவைக்கேற்ப இன்சுலின் ஊசியினைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

சாதாரண வயிற்றுப் போக்கு, வாந்தி, குளிர்காய்ச்சல் என்று அலட்சியப் படுத்திவிடாமல் மருத்துவரை அணுகி அறிவுரையும் ஆலோசனையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், அவையே கூடச் சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொண்டால் சிறுநீரகம் காத்து, சீரிய வாழ்வு பெறலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *