காரைக்கால், நவ. 17- காரைக்கால் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16-11-2025 அன்று கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, காரைக்கால் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
கடவுள் மறுப்பு சொல்லி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், காரைக்காலில் 08.12.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் பரப்புரைப் பயண பொதுக் கூட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துவது, திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி கொடுப்பது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்கினார்கள்.
கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர், துரை. சந்திரசேகர் பேசும்போது, தமிழர் தலைவர் ஆசிரியரின் பெருங் கனவாக திருச்சி சிறுகனூரில் உருவாகி வரும் பெரியார் உலகத்தை விரைவில் கட்டமைக்க, மாவட்டம் தோறும் 10 லட்சம் நிதி வழங்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல மாவட்டங்களில் 10 லட்சத்தைக் கடந்து 15 லட்சம் 17 லட்சம் என வழங்கி வருகிறார்கள் அதேபோல் காரைக்காலிலும் 10 லட்சத்திற்கும் அதிகமாக நிதி திரட்டி ஆசிரியர் அவர்களிடம் வழங்க வேண்டும். ஆசிரியரின் பெருங் கனவை நாம் எல்லோரும் சேர்ந்து நனவாக்குவோம் அதற்கான பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என்றும், நிதி எப்படி திரட்டுவது என்ற சம்பந்தமாகவும் மிக விளக்கமாகவும் விரிவாகவும் பேசினார்.
ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
தீர்மானங்கள்
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடைபெற்ற உலக பன்னாட்டு அமைப்பு நடத்திய கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணியை பாராட்டி பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
08.12.2025 அன்று காரைக்காலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது, காரைக்கால் வருகை தரும் ஆசிரியருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு காரைக்கால் மாவட்டம் சார்பாக ரூ.10 லட்சம் நிதி திரட்டி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது.
விடுதலை சந்தாக்களை அதிக அளவில் சேர்த்து வழங்குவது.
காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் தொடர்வண்டி வழித்தடம் போடப்பட்டு தொடர்வண்டி சோதனை ஓட்டம் நடந்து ஆறு மாதம் ஆன பிறகும் இதுவரை தொடர்வண்டிகளை இயக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. விரைவில் இந்த வழித்தடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்வண்டிகளை விரைவில் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்த என்.ஆர். காங்கிரஸ், பாஜக, மக்கள் விரோத கூட்டணி அரசு அடிமையாக இருந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த மக்கள் விரோத கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பி வருகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து வெற்றி பெற வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளைஞர் அணி துணைத்தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றியுரை கூறினார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்
ஜெ. செந்தமிழன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ. லூயிஸ் பியர். வடலூர் இந்திரஜித். ஆகியோர் கலந்து கொண்டனர்.
