சிறீநகர், நவ.17 காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்துச்சிதறியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
வெடிபொருள் வெடித்தது
டில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமதுவின் கூட்டாளிகள் 8 பேரை காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்தனர். 3 டாக்டர்கள் அடங்கிய இந்த கும்பல் அரியானாவின் பரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியிருந்தனர்.
அப்போது பரீதாபாத்தில் ‘இருந்து பெரும் வெடிபொருள் குவியலையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் 360 கிலோ வெடிபொருளை காஷ்மீரின் தலைநகர் சிறீநகரின் புறநகர் பகுதியான நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் திறந்த வெளியில் மிகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் வைத்திருந்தனர்.
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த வெடிபொருளின் மாதிரிகளை பிரித்தெடுக்கும் பணி நடந்தது. அப்போது இந்த வெடி பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
9 பேர் சாவு
கடந்த 14-ஆம் தேதி இரவு 11.20 மணியளவில் நடந்த இந்த கோர சம்பவத்தில் தடயவியல் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் உள்பட 32 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தடயவியல் ஆய்வுக்கூட அதிகாரிகள் குழு மற்றும் தேசிய பாதுகாப்புப்படை எலைட் பிரிவு நிபுணர்களும் நேற்று (16.11.2025) சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
அதிக வெளிச்சம்
இந்த சம்பவம் முழுக்க முழுக்க விபத்துதான் எனவும், இதில் பயங்கரவாதம் உள்ளிட்ட எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:-
வெடிபொருட்களின் மாதிரி சேகரிக்கும் பணியின் இறுதியில் தடயவியல் நிபுணர்கள் கடைசி சில பெட்டிகளில் இருந்த திரவ வேதிப்பொருளின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். அதில் அசிட்டோ பினோன், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் சல்ப்யூரிக் அமிலம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் இருந்தன. அதை தெளிவாக ஆய்வு செய்வதற்காக வெளிச்சத்தை அதிகரித்து இருக்கிறார்கள். இதுவே விபத்து நிகழக்காரணம் ஆகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த சம்பவம் விபத்துதான் எனவும், இதில் எந்தவித யூகத்துக்கும் இடமில்லை என்றும் காஷ்மீர் போலீஸ் காவல்துறை தலைமை இயக்குநர் நலின் பிரபாத்தும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
