தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர்

அனைத்து மாநகராட்சி, நகராட்சிக்கும் டிசம்பர் 6 முதல் விரிவாக்கம்!

சென்னை, நவ.16 – தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர்; அனைத்து மாநகராட்சி, நகராட்சிக்கும் டிசம்பர் 6 முதல் இத்திட்டம் விரிவாக்கப்படும் என்றார் .

Contents

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.11.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை வருமாறு:–

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடி யிருப்புகளுக்கான வீடுகள்மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கக்கூடிய, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாநகரின் தூய்மைக்கு – கடுமையாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களே காரணம்!

தினமும் காலையில் விடிகின்ற போது நம்முடைய சென்னை, முந்தைய நாள் குப்பைகள் இல்லாமல், தூய்மையாக இருக்கிறது என்றால், அதற்குக்காரணம், இரவு முழுவதும் கடுமையாக உழைக்கின்ற, தூய்மைப் பணியா ளர்களாக இருக்கக்கூடிய நீங்கள்தான்!

அப்படிப்பட்ட உங்களுக்கு உணவு வழங்கும் இந்த ‘முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை’ தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே பெருமை அடைகிறேன்!

என்னதான், சத்தான உணவு – டயட் – எக்சர்சைஸ் என்று இருந்தாலும், நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், அதற்கு அடிப்படை என்னவென்று கேட்டால், தூய்மைதான்!

பேரிடரிலிருந்து மக்கள் மீண்டிட தூய்மைப் பணியாளர்களின் தூய பணி!

வெயில் – மழை – வெள்ளம் – புயல் என்று இந்த மாநகரம் எந்தப் பேரிடரை எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டுவருவதில் உங்களுடைய பணிதான் மிக முக்கியமானதாக இருக்கிறது!

உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான், நம்முடைய சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது!

உங்களால்தான் நீர்நிலைகள் தூய்மையாக இருக்கிறது! உங்களால்தான் குழந்தைகள் நலமாக பள்ளிக்கு எல்லாம் சென்று வருகிறார்கள்!

நான் இந்தச் சென்னை மாநகருக்கு மேயராகப் பொறுப்பேற்ற போது, தலைவர் கலைஞர் எனக்கு என்ன அறிவுரை சொன்னார்கள் என்றால், “இது பதவி யல்ல; பொறுப்பு” என்று சொன்னார். அதேபோல், நான் உங்களுக்குச் சொல்கிறேன்… நீங்கள் செய்வதும் வேலை இல்லை; அது சேவை!

ஊரே உறங்கும்போது ஓய்வில்லாமல் உழைப்பவர்கள்!

சென்னையில் நைட் டிராவல் செய்பவர்களுக்குதான் தெரியும்… பகலெல்லாம் பிசியாக இருக்கின்ற இந்த சிட்டியில், ஊரே அடங்கிய பிறகு, ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் நீங்கள்தான்!

உங்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை உணர்வைப் பார்த்து – நான் மட்டுமல்ல; இந்த மாநகரமே நன்றி யுணர்ச்சியோடு உங்களை வணங்குகிறது! ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு எல்லாம் என்னுடைய இதயபூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்கி றேன்!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்தச் சென்னைக்கு மேயராகப் பொறுப்பேற்றபோது, தூய்மையான நகராக இந்த நகரை உயர்த்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தூய்மைப் பணிகளில், இயந்திரங்களைப் பயன்படுத்த நாங்கள் தொடங்கினோம்.

உங்கள் கோரிக்கைகளை ‘திராவிட மாடல்’ அரசு படிப்படியாக நிறைவேற்றும்!

தமிழ்நாடு

நாம் இன்று அடைந்திருக்கும்
மாற்றத்திற்கான முதல் படி!

குப்பைகளை, மக்கும் குப்பை – மக்காத குப்பை என்று பிரித்து வைத்து, அதை மேலாண்மை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எல்லாம் கொண்டு வந்தேன். அவையெல்லாம்தான் இன்றைக்கு நாம் அடைந்திருக்கின்ற மாற்றத்திற்கு முதல் படி!

இந்தச் மாநகரத்தை தூய்மையாகப் பாதுகாக்கின்ற உங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை! உங்களுடைய மாண்பு காக்கப்பட வேண்டும்! உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்! உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! இதுதான், சமூகநீதி!

இந்தச் சமூகநீதிப் பயணத்தில் உங்கள் சுயமரி யாதையைக் காத்து உங்கள் பசியைப் போக்கிடத்தான், இன்றைக்கு இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்!

சூடு குறையாமல் சுவையான உணவு!

இந்தத் திட்டத்தின்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு இடையில், உணவு வேளையில் சுவையும் – ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படும்.

தூய்மையான முறையில் சமைத்து, டிஃபன் பாக்ஸில் வைத்து, சூடு குறையாமல் இருப்பதற்கு வெப்பக் காப்புப் பையில் அது எடுத்துச் செல்லப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகாமையிலேயே உள்ளாட்சி அமைப்புக்குச் சொந்தமான கட்டடத்தில் உணவு பரிமாறப்படும்.

நம்முடைய நலனுக்காக உழைக்கின்ற மக்க ளுக்கு உணவு அளிப்பது அரசின் பொறுப்பு என்கின்ற உணர்வோடுதான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்து கிறோம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு தி.மு.க. அரசின் அடுக்கடுக்கான திட்டங்கள்!

இது இல்லாமல், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியா ளர்கள் நலனுக்காக நம்முடைய தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் முக்கியமான திட்டங்கள் நிறையச் செய்திருக்கிறோம். அதுபற்றி நான் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,

2006 – 2011 இல் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு அவ்வாரியம் வாயிலாக வழிவகை செய்தோம். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.

‘தாட்கோ’ நிறுவனம் மூலமாகவும், தூய்மைப் பணி யாளர்களின் வாரிசுகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் தொழில் முனைவோராகிட வழிவகை செய்யப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன.

நகர்ப்புறப் பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தைப் போக்குவதற்கு மூன்று சக்கர மிதிவண்டி வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு முதன்முறை யாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் துவங்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கக்கூடிய பணியில் ஈடுபட்டு, பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் வாரிசுகளுக்கு கருணைத் தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இப்போது நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி, மதுரையில் நான் தொடங்கி வைத்தேன்.

இந்தத் திட்டத்தில், நான் முதல்வன் திறன் பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், ஹெல்த் இன்சூரன்ஸ், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், தொடர் உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தடை யின்றி பெற ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இதற்காக, 50 கோடி ரூபாய் – அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் நடைபெறும் அனைத்துப் பணிகளும், முழுமையாக இயந்திரமயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகளை ‘திராவிட மாடல்’ அரசு படிப்படியாக நிறைவேற்றும்!

இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இவ்வளவு செய்திருந்தாலும், உங்களுக்கான தேவைகள் இன்னும் நிறைய இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும்!

நான் நிச்சயமாகச் சொல்கிறேன்… அதையெல்லாம் நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு படிப்படியாகச் செய்யும் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

இரவு பகல் பார்க்காமல் நீங்கள் உழைக்கிறீர்கள்… ஆனால், உங்களுக்கென்று தனியாக ஓய்வறை இல்லை என்று பலரும் கவலைப்படுவதாக என்னிடம் சொன்னார்கள்… பலபேர் என்னிடத்தில் சொன்னார்கள். அதனால், இந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்…

சென்னையில் 200 வார்டுகளிலும்
அனைத்து வசதிகளுடன் ஓய்வறை!

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக தனிச் சிறப்போடு, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு அவைகள் கொண்டு வரப்படும்!

அதுமட்டுமல்ல, இன்றைக்குத் தொடங்கப்பட்டி ருக்கின்ற இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டம் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அனைத்து மாநக ராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!

நான் ஏற்கெனவே சொன்னது போல, உங்களுடைய மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்!

சென்னை ‘கிளீன் சிட்டி’
எனப் பெயர் பெற துணை நிற்பீர்!

என்னைப் பொறுத்தவரைக்கும், வெளி மாநிலங்க ளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்கள் சென்னை தான் இந்தியாவிலேயே – “கிளீன் சிட்டி”, தமிழ்நாடுதான் “கிளீன் ஸ்டேட்” என்று சொல்ல வேண்டும்! அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும்! இந்த நிலையை நாம் உடனே அடைந்துவிட முடியாது. நன்றாகத் தெரியும். ஏனென்றால், இதற்கு பல நடைமுறைச் சிக்கல்களும், தடைகள் எல்லாம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை! இருந்தாலும், நான் உங்களைக் கேட்டுக் கொள்ள விரும்பு வது, இப்போது கூட சமீபத்தில்,ஜெர்மனி நாட்டிற்குச் சென்று வந்தேன். அதற்குப் பிறகு வெளியிட்ட ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ காட்சிப் பதிவில் நான் சொல்லியிருந்தேன். பொது இடங்களில் தூய்மையைப் பேணக் கூடிய “Self discipline” நம்முடைய மக்களுக்கு வரவேண்டும் என்று சொன்னேன்.

பொதுமக்கள் சிறிது யோசித்துப் பார்க்கவேண்டும். நாம் நடந்து செல்கின்ற பாதை, சிறிது தூய்மையற்று இருந்தாலே, முகச் சுளிப்போடு கடந்து போவோம். ஆனால், தூய்மைப் பணியாளர்களோ, நாம் அன்றாடம் தேவையில்லை என்று தூக்கி எறிகின்ற கழிவுகளை அப்புறப்படுத்துகிறார்கள். இவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்த்து, அதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்காமல், பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்களை எல்லாம் செய்வது நியாயமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிலரெல்லாம் வீட்டில் இருந்து, குப்பைத் தொட்டி வரைக்கும், எடுத்துக் கொண்டு வந்த குப்பையை, குப்பைத் தொட்டியில் போடாமல், அங்கிருந்து தூக்கி எறிவது, அப்படியே அருகாமையில் போடுவது, தூரத்தில் இருந்து தூக்கி வீசுவார்கள்… இந்தப் பழக்கத்தை எல்லாம் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்!

எதிர்காலத்தில், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பதுபோல, மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தை நூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்களாக முன்னேறி, குப்பைகளை ஒழுங்காகத் தரம் பிரித்துப் போட்டு, தூய்மைப் பணியாளர்களின் சுமை யினை பெருமளவில் குறைக்க வேண்டும்.

சமூகத்தில் ஒழுக்கம் மேம்பட வேண்டும்!

தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் செய்கின்ற பணியை மற்ற எந்தப் பணியையும் போன்ற பணியாக கருதப்படுகின்ற அளவுக்கு இவர்களுடைய கண்ணியமும், முறையான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அதற்கான முன்னெடுப்பு களை, திட்டங்களாக உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்… இதையெல்லாம் இவர்களுக்காக என்று சொல்லவில்லை…

பொதுவாகவே, ஒரு சமூகமாக நம்முடைய ஒழுக்கம் மேம்பட வேண்டும் என்ற அக்கறையுடன் சொல்கிறேன்! நம்மைப் பார்த்துத்தான் நம்முடைய பிள்ளைகள் நடந்து கொள்வார்கள்! நாம் Correct-ஆக நடந்து கொண்டால், அடுத்து வரக்கூடிய தலைமுறை இன்னும் Better-ஆக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சமூகமாக நாம் நகரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!
உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும்!

என்னுடைய கனவு – உங்களுடைய வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும்! உங்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டும்! உங்களுடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து, உயர்ந்த பொறுப்புகளில் உட்கார வேண்டும்!

கடந்த ஆண்டு, ஒரு செய்தி வந்தது… ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்… திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா என்ற ஒரு பெண் – தூய்மைப் பணியாளரின் மகள் – அவர் படித்து, குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று, நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்! இதுதான், நான் விரும்பக்கூடிய முன்னேற்றம்!

தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள்
பெரிய அதிகாரிகளாக வர வேண்டும்!

எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகளும் படித்து முன்னேறி, பெரிய அதிகாரிகளாக பொறுப்பிற்கு வர வேண்டும்! அவர்களுக்கு நான் பணி நியமன ஆணைகள் தரவேண்டும்! இதற்காகத்தான் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

சுய ஒழுக்கம் இல்லாமல், முழுமையான வளர்ச்சியோ, சமூக மேன்மையோ அடைவதற்கு சாத்தியமே கிடையாது! அரசு தன்னுடைய கடமையைச் செய்யும்! மக்களும் பொறுப்பாக இருந்து, பொது இடங்களிலும், நம்முடைய மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம்! அதற்காகத் தொடர்ந்து உழைப்போம்! தன்னலம் கருதாத தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றுவோம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *