சென்னை, நவ.16– இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் கைப்பேசி பயன்படுத்துகிறார்கள். இதில் 95 கோடி பேர் ஸ்மார்ட் போன் வைத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு கைப்பேசியில் மோசடி மற்றும் வணிக நோக்கில் தவறான அழைப்புகள் அதிகமாக வருகிறது. இதனால் ஏற்படும் மோசடியை தடுக்க நடவடிக்கையாக தெரியாத எண்ணில் இருந்து கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும் வகையில் புதிய வசதியை தொலை தொடர்பு அமைச்சகம் கொண்டுவரப்போகிறது.
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து கைப்பேசிக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, கைப்பேசியில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாக போகிறது.
இந்த வசதி ‘4ஜி’ அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு கைப்பேசி எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இந்த முடிவினை டிராய் எடுத்துள்ளதாம்.
எனவே தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு அச்சமின்றி எடுத்து பேச முடியும். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த பேசி வருகின்றன.
விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பானையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டியது கட்டாயம் ஆகும்.
