தமிழ்த் திரையுலகில் சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமையை முன்னிறுத்தி முற்போக்குக் கருத்துகளைத் தன் படைப்புகள் மூலம் தொடர்ந்து பேசி வந்த இயக்குநர் வி.சேகர் உடல்நலக் குறைவால் (14.11.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பொதுவுடைமை, பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தக் கூடியவர். 1990-களில் பெரியார் திடலுடன் நெருக்கமாக இருந்தவர்; நம்மால் பாராட்டப்பட்டவர். அவரது முதல் படமான ‘நீங்களும் ஹீரோதான்’ படம், திரைத் துறைக்கு உள்ளேயே இருந்து, ரசிகர் மன்றங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கலகக் குரல்; இன்றைக்கும் அப் படம் பொருந்திப் போவதைப் பார்க்க முடியும்.
திருவள்ளுவர் கலைக் கூடத்தின் மூலம் பல்வேறு பயனுறு படைப்புகளை வழங்கிய பெருமைக்குரியவர். திராவிட இயக்க உணர்வாளர்; தனித் தமிழ்ப் பற்றாளர்; எப்போதும் நம் மீது கொள்கைப் பாசத்துடன் இருக்கக் கூடியவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகில் இருக்கும் முற்போக்காளர் வட்டத்தில் ஏற்பட்டுள்ள தனிப்பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
16.11.2025 தலைவர்,
சென்னை திராவிடர் கழகம்
