பாட்னா, நவ.16 பீகார் தேர்தல் முடிவுகள் 14.11.2025 அன்று அறிவிக்கப்பட்டு பாஜகவின் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது.
இந்நிலையில் மேனாள் ஒன்றிய இணை அமைச் சரும், பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை மற்றும் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்.கே.சிங் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.
இந்தச் சூழலில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட தாக கூறி பாஜக உயர்மட்ட குழு அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
முன்னதாக 2,400 மெகாவாட் பாகல்பூர் மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பீகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில்
ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,000 கோடி ஊழல் நடந்ததாக ஆர்.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பீகார் தேர்தலில் குற்றப்பிண்ணனி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பீகார் துணை முதலமைச்சரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தார்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தூதராகவும், ஒன்றிய உள்துறை செயலாளராகவும் பணியாற்றிய ஆர்.கே.சிங், 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பீகாரில் உள்ள அவுரா தொகுதியில் இருந்து மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றார்.
2017 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் ஒன்றிய மின்சார துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
