மனித வாழ்வின் ஆயுள் நாளும் நீண்டு வருகிறது.
பெரிதும், அது ‘‘கடவுள் நம்பிக்கையால் – ஆண்டவன் அருளால் – கருணையினால்’’ என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) காலத்திலும்கூட நம்பப்படுகிறது. அது மூடநம்பிக்கை, அறிவியல் ஆதாரமற்றது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூறி, வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றும் வருகிறது!
‘‘இவருக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்’’ என்று பரிந்துரையும் செய்கின்றனர் மூத்தோர் பலர்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விற்கப்படும் ‘பக்தி லட்டு’ – கலப்படத்திற்கு ஆளான குற்றச்சாற்று வழக்குப் பெரிய பிரச்சினையாகி, வெடித்தது! அதை வைத்தே ஒரு நடிகர், துணை முதலமைச்சர் பத விக்கும் மேல் ஆனதற்கு அடிக்கட்டுமானம் கட்டும் வேலையில் ஈடுபட்டு, முதலமைச்சரையும், அவரது ஆட்சியினரையும் குழப்பி, திகைக்கச் செய்தனர் – ஆந்திர அரசியலில்!
எல்லாம் வல்லவரான, தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தன், ஏடு கொண்டலவாடு ஏனோ தனது லட்டில் ‘‘பிராடு’’ செய்தவர்களைக் கண்டு பிடித்து ‘லட்டில்’ கலப்படம் செய்தோருக்கு எந்தத் தண்டனையும் வழங்கவில்லையே!
By Act of God என்பது ஒரு தற்காப்பு வாதமாகச் சட்டத்திலும் உண்டு!
அதுமட்டுமா?
அடுத்து பிரசாதத்தில் கலப்படம் ஏற்பட்டதுபற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது!
முன்பு கணக்கு வழக்கில்லாத தங்கம்பற்றி கேள்வி மேல் கேள்வி – சந்தேக மேகங்கள் – பிறகு அவை கலைந்துபோகும்படி பல ஏற்பாடுகள்!
மக்களுக்கு மறதி அதிகம்! அதுவே மூலதனம் மூடநம்பிக்கை பரப்புவோருக்கு!
பக்தர், பக்தைகளுக்கு பக்தி போதை அதிகம்! இதனால், கூட்டத்திற்குக் குறைவில்லை; கோவில் வருமானத்திற்குப் பஞ்சமில்லை – ‘பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலை’ (‘The Richest God Thirupathi Elumalai’) என்ற விளம்பரம்! அதானி, அம்பானி, பில்கேட்ஸ், எலான் மஸ்க் போன்று கடவுள்களின் உச்ச முதலாளி இவரே!
மக்களின் மூடநம்பிக்கைதான் இவர் போட்ட மூலதனம்!
இவர் மட்டுமா?
ஆந்திராவுக்குப் போட்டியாக கேரளாவில் இருமுடி கட்டி, பதினெட்டு படிக்கட்டுகள் ஏறி, விரதமிருந்து தரிசனம் செய்யும் சபரிமலை வாழ் அய்யப்பன்!
தங்கத்தால் கதவு – கூரையெல்லாம் தங்கத்தால் வேய்ந்தது – அர்ச்சகர்கள் சிலரும் மற்றும் அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து ‘தங்கத் திருடர்கள்’ குற்றச்சாற்றுக்கு ஆளாகி, காவல்துறையால், சி.பி.அய்.யினால் கண்டறியப்பட்டுள்ளனர்! கைதாகி உள்ளனர்!
‘சாமியே சரணம்’ என்று சென்றவர்களுக்கு இச்செய்தி பெரும் அதிர்ச்சி. போலீசே சரணம் என்று அபேஸ் வீரர்கள் விசாரணைக் கூண்டில்!
‘‘கன்னிசாமிகள்’’, ‘‘குருஸ்வாமிகள்’’ எல்லாம் தொடர்ந்து இருமுடி கட்டிச் சென்று உண்டியலில் காசு செலுத்தித் திரும்புகின்றனர்!
அய்யப்பனும், குருவாயூரப்பனும் முழுக்க முழுக்க வாய் திறவா காட்சிப் பொருளாக்கப்பட்டு விட்டனர்!
‘எல்லாம் அவன் செயல்’ என்கிறார்கள் ‘தங்கத் திருடர்கள்!’
எவன் செயல்? இவன் செயலா? என்று கேட்டால், அவன் சொல்லும் தற்காப்பு (Defence) வாதம் இது வென்றால், எவன்தான் அவனைக் காப்பாற்ற முடியும்?
இதையெல்லாம் பார்த்த பகுத்தறிவுவாதி கேட்கிறார்.
இப்போது சொல்லுங்கள், அய்யப்பன் மெய்யப்பனா? அவன் செயலா? அல்லது மவுனித்து மகிழும் நிலையா?
பக்தி வந்தது; புத்தி பறிபோனதே!
அந்தோ! அந்தோ!!
