50 ஆண்டுகள் வசித்தாலும்… வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

3 Min Read

புதுடில்லி, நவ.13- வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் வாடகை வீட்டில் அய்ந்து ஆண்டுகள் வசித்தாலும் சரி, அய்ம்பது ஆண்டுகள் வசித்தாலும் சரி, அதை ஒருபோதும் சொந்த வீடாக உரிமைகோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாடகை வீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து இருந்தாலும் அதை உரிமை கோர முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இது பல காலமாக இருந்த குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது..

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஒரு நபர், உரிமையாளரின் அனுமதி யுடன் மட்டுமே அந்தச் சொத்தில் (வீட்டில்) வசிக்கிறார்; எனவே, ‘அட்வெர்ஸ் பொசசன்’ (adverse possession) விதி இங்குப் பொருந்தாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜோதி ஷர்மா என்ற வீட்டு உரிமையாளர், தனது வீட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த விஷ்ணு கோயல் என்பவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். 30 ஆண்டுகளாக வாடகைக்கு இருக்கும் கோயல் இப்போது வீட்டைச் சொந்தம் கொண்டாடுவதாகவும் இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

பின்னணி

கோயல் தனது வாதத்தில், 1980கள் முதல் அவர் தொடர்ந்து அங்கு வசித்து வருவதாகவும், வாடகை செலுத்துவதை நிறுத்திய பிறகும் வீட்டு உரிமையாளர் தன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், அட்வெர்ஸ் பொசசன் விதியின் கீழ் தான் அந்தச் சொத்து தனக்கே சொந்தம் என வாதத்தை முன்வைத்தார்.

லிமிட்டேஷன் சட்டம், 1963இன் கீழ், ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து மற்றும் வெளிப்படையாக உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு இடத்தில் வசித்து அல்லது ஆக்கிரமித்திருந்தால், அந்த நபரே அந்தச் சொத்தின் உரிமையைக் கோர முடியும். இந்த சட்டத்தை மேற்கோள் காட்டியே கோயல் வீடு தனக்கே சொந்தம் என்ற வாதத்தை முன்வைத்தார்.

சட்டம் பொருந்தாது

இருப்பினும், இதைத் திட்ட வட்டமாக மறுத்த ஷர்மா, தொடக்கம் முதலே கோயல் வாடகை கொடுத்தே வசித்து வந்தார் என்றார். மேலும், தனது அனுமதி உடனேயே வசித்து வந்ததால் இந்த இடத்தில் ‘அட்வெர்ஸ் பொசசன்’ சட்டத்தின் கீழ் உரிமையாளராக மாற முடியாது என்று வாதிட்டார். இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் ஆரம்பித்து இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஒவ்வொரு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் கே. வினோத் சந்திரன் இதில் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கினர்.

உச்ச நீதிமன்றம்

வீட்டின் உரிமையாளரான ஷர்மாவுக்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. அதில் வாடகை என்பது சட்ட உறவு என்றும் உரிமையாளரின் சம்மதத்துடனேயே ஒருவர் வசிப்பதால், இது ‘அட்வெர்ஸ் பொசசன்’ கீழ் வராது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீண்ட காலம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார் என்பதாலேயே… அவர் அந்த வீட்டின் உரிமையாளராக மாற்ற முடியாது என்பதை நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.

பல்வந்த் சிங் Vs பஞ்சாப் மாநிலம் (1986) மற்றும் ரவீந்தர் கவுர் கிரேவால் Vs மன்ஜித் கவுர் (2019) போன்ற வழக்குகளிலும் ‘அட்வர்ஸ் பொசசன்’ கீழ் வர வேண்டும் என்றால் ஒருவர் உரிமையாளர் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட சொத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது வாடகை வீடு தொடர்பான விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான உரிமை கோரல் வழக்குகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *