உலகளவில் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணியில் திகழ்பவர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகமும் ‘எல்சவீர்’ எனும் அறிவியல், கல்வியியல் பதிப்பக நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் வெளியிட்டுவருகின்றன. ‘டாப் 2% அறிவியலறிஞர்கள்’ எனும் இந்தப் புகழ் வாய்ந்த அங்கீகாரம் 22 அறிவியல் துறைகள், 174 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
தங்கள் துறைக்கு நீண்ட காலம் ஆற்றிய பங்களிப்பு, முந்தைய ஆண்டில் நிகழ்த்திய முக்கிய கண்டுபிடிப்புகள், பயனுள்ள வகையில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தலைசிறந்து விளங்கும் அறிவியலறிஞர்களின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 6,239 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான அய்அய்டிக்களில் இருந்து 755, என்அய்டிகளில் இருந்து 330, பெங்களூரு அய்அய்எஸ்சியில் இருந்து 117 ஆய்வாளர்கள் இதில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டு அறிவியலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. ராஜஸ்தான், ஆந்திரம், பீகார் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் இதில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை சவீதா மருத்துவ, பல் மருத்துவ – தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் எனும் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலிருந்து 111 பேர் அங்கீகாரம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டுமே 17 ஆராய்ச்சியாளர்கள் டாப் 2% அறிவியலறிஞர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதுதவிர கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் சிலரும் இந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சென்னை டிஜி வைஷ்ணவ கல்லூரி கணிதவியல் துறையின் இணைப் பேராசிரியர் இரா. சிவராமன் எண் கணித கோட்பாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்காகக் கவுரவிக்கப்பட்டிருக்கிறார். அறிவுலகில் தமிழ்நாட்டை நிமிர்ந்தெழ வைக்கும் இவர்கள் இளையோருக்கு புதிய திசைக்காட்டிகள்.
