தூத்துக்குடி, நவ.13 தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற குல சேகரன்பட்டினம் தசரா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாக்களில், பக்தர்களைக் கையாளும் பணியில் காவல்துறைக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அய்டெக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
இந்த அமைப்பை நிறுவி வழிகாட்டிய இரண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஏஅய் தொழில்நுட்பத்தில் இயங்கும் அய்டெக் கட்டுப்பாட்டு அறை
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா ஆகிய இரண்டிலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக ஏஅய் தொழில்நுட்பத்தில் இயங்கும் அய்டெக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
காணாமல் போன குழந்தைகளை மீட்க, ‘புராஜெக்ட் கார்டியன்’ எனும் செயலி பயன்படுத்தப்பட்டது. வாகனங்கள் நிறுத்தும் இடங்களைக் கண்காணித்தல், போக்குவரத்து நெரிசலை நேரடிக் கண்காணித்தல், மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வது போன்ற பணிகளுக்காக ‘காப்போட் ஏஅய்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
வாகனங்கள் மற்றும் நகை திருட்டுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. இதையொட்டி, இவ்விரு கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேற்று (12.11.2025) வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
