அரியலூர், நவ. 12- திருச்சியை அடுத்த அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6.5 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொல்லுயிர் படிவம் (Fossil) விஞ்ஞான உலகை மட்டுமல்லாமல், தமிழ்நாடு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டைனோசர் முட்டை
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ராட்சத உயிரினங்களின் தடயங்கள் இன்றும் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜிம்பாப்வேயில் 230 மில்லியன் ஆண்டுகள் பழைமையான “எம்பிரேசரஸ் ராத்தி” என்ற டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய நிலையில், அதே போல் தமிழ்நாட்டில் இந்த அரிய கண்டு பிடிப்பு நடந்துள்ளது.
தமிழ்நாட்டின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட் டங்கள் தொன்மையான கடல் உயிரினங்களின் படிவங்களுக் குப் பிரசித்தி பெற்ற பகுதி களாகும். சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அரியலூர் சுரங்கப் பகுதிகளில் அடிக்கடி கிடைத்து வருகின்றன. இதன்மூலம், இப்பகுதி ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டிருந்தது நிரூபணமா கிறது.
உறுதி செய்யப்பட்ட டைட்டனோசரஸ் முட்டை
1980 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன சுரங்கத்தில் முட்டை வடிவிலான பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது முட்டை வடிவிலான ஒரு பாறை என்று ஆரம்பத்தில் கருதப்பட்டாலும், 1996ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில் இது ஒரு டைனோசர் முட்டை என்று உறுதி செய்யப்பட்டது.
இது, தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய, மிகவும் பெரிய உருவம் கொண்ட “டைட்டனோச ரஸ்” (Titanosaurus) வகையைச் சேர்ந்த டைனோசரின் முட்டை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆற்றின் கரையில் வைக்கப்பட்டிருந்த இந்த முட்டை, காலப்போக்கில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் காரணமாகக் கடலடியில் புதைந்தது. இத்தனை நீண்ட காலத்தையும் கடந்து, எந்தவிதச் சிதைவும் இன்றிப் படிமமாக மாறியிருப்பது, உண்மையிலேயே வியப்பூட்டும் தகவலாகும்.
பொதுமக்கள் பார்வைக்கு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டெடுப்பு தற்போது வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அரிய டைனோசர் முட்டையை நேரில் கண்டு ரசித்து, பூமி மற்றும் டைனோசர்களின் வரலாற்றை அறிந்து வருகின்றனர்.
பூமி இன்னும் பல விந்தை களும் மறைந்துள்ள முடிச்சுகளும் நிறைந்தது என்பதை இந்த டைனோசர் முட்டை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்துகிறது
