மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றத் திட்டம் வணிக மாநாட்டில் ஜெர்மனி அமைச்சர் தகவல்

சென்னை, நவ. 12– செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் ஜெர்மனியின் சாக்சனி மாநில அரசு சார்பில் ‘தமிழ்நாடு – சாக்சனி இடையிலான வணிக மாநாடு – 2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சாக்சனி மாநிலத்தின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் டிர்க் பான்டர், ஜெர்மனி துணைத் தூதர் மைக்கேல் ஹேஸ்பெர், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை செயலர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வணிக மாநாடு

இந்த உயர்மட்ட மாநாடு தமிழ்நாடு மற்றும் சாக்சனி இடையிலான தொழில்துறை, புதுமை, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் எம்எஸ்எம்இ கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு நடைபெற்றது.

ஜெர்மனியைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் தமிழ்நாடு அரசு செயலர் அதுல் ஆனந்த் பேசும்போது, “மரபுசாரா எரிசக்தி, காற்றாலை மின்சாரம், உள்ளிட்ட வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தொழில் துறைக்கு வானமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 11 சதவீத பொருளாதார இலக்கை எட்டியுள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

ஜெர்மனியை முந்தும் இந்தியா

தொடர்ந்து ஜெர்மன் அமைச்சர் டிர்க் பான்டர் பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் சாக்சனியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் மூன்றாவது உயர்மட்டக்குழு இதுவாகும். இந்த பயணத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களை மேலும் ஆராய்வதற்கு ஆவலாக இருக்கிறோம். எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ஒத்துழைப்பு, வணிக வாய்ப்புகள் மற்றும் திறமையான பணியாளர்களைக் கண்டறிவது. அந்த வகையில் முதல்கட்டமாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை நேற்று முன்தினம் (நவ.10) சந்தித்துப் பேசினோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமின்றி தொடர்ந்து தமிழ்நாட்டுடனான எங்களது உறவை வலுப்படுத்த திட்டமிட்டு, நுண் மின்னணுவியல் (மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ்), செமிகண்டக்டர்கள் துறைகளிலும், திறன் பணியாளர்களிலும் கவனம் செலுத்தவுள்ளோம். இதையொட்டி மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சென்னை அய்அய்டியுடன் இணைந்து ஜெர்மனியின் டிரெஸ்டன் மற்றும் ஃப்ரைபெர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் பணியாற்றி வருகின்றன.

இந்தியா ஏற்கெனவே உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது, விரைவில் அது ஜெர்மனியை முந்திவிடும். இதை நாங்கள் வரவேற்கிறோம், ஏனெனில் நாம் ஒன்றாக வளர விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

வெடிகுண்டு புரளியை கிளப்புபவர்கள் யார்?

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் பேட்டி

சென்னை, நவ.12– சென்னையில் வெடிகுண்டு புரளியை கிளப்புபவர்கள் யார்? என்று காவல்துறை ஆணையர் அருண் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

வெடிகுண்டு புரளி

சென்னை ஆணையர் அருண் நேற்று (11.11.2025) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 7 மாதங்களில் சென்னையில் 342 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் இ-மெயில் மூலமாக வந்துள்ளன. மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக சோதனை நடத்தப்படுகிறது. உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீது அல்லது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு புரளியை கிளப்புபவர்கள் தனி நபராகவோ அல்லது 2 பேர் சேர்ந்தோ செயல்படலாம் என்று கருதுகிறோம்.

இ-மெயில் மூலம்…

‘டார்க்-வெப்’ மூலமாக இந்த இ-மெயில் கடிதங்கள் வருகின்றன. வெடிகுண்டு புரளியை கிளப்புபவர்கள் யார்? என்பதை எங்களால் ஓரளவு யூகிக்க முடிந்தாலும் தொழில் நுட்பரீதியாக அவர்கள் யார்? என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. புரளியை கிளப்புபவர்கள் இங்கிருந்தே செயல்படலாம் என்று கருதுகிறோம். இதற்கு மூளையாக செயல்படுபவர்கள் யார்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் மிரட்டல் கடிதங்கள் ஆங்கிலத்தில்தான் அனுப்பப்படுகிறது.

இந்தியா முழுவதும் இது போன்ற மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இது பற்றிய தகவல் ஒன்றிய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய ஏஜென்சிகளுக்கும், இது தொடர்பான உண்மையை கண்டறியும்படி தெரிவித்துள்ளோம்.

குற்றங்கள் குறைவு

சென்னை நகரில் கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த குற்றங்களை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கொலை குற்றங்கள் கடந்த ஆண்டு இதே நாளில் 102-ஆக இருந்தது. தற்போது 82-ஆக குறைந்துள்ளது. கடும் நடவடிக்கை எடுத்ததால் ‘டிஜிட்டல்’ கைது தொடர்பான புகார்களும் தற்போது குறைந்துவிட்டன. இதேபோல சங்கிலிப் பறிப்பு குற்றங்கள் கடந்த ஆண்டு 35-ஆக இருந்தது. தற்போது 21-ஆக குறைந்துள்ளது. கைப்பேசி பறிப்பு குற்றங்களும் 275லிருந்து 144-ஆக குறைந்துள்ளது.

முன்பெல்லாம் பெண்கள் புகார் கொடுக்க முன்வர மாட்டார்கள். இப்போது பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். வங்கிக் கடன் தொடர்பான மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, உளவுத் துறை துணை ஆணையர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு உதவி ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *