டில்லி, நவ.12- வாழ்விணையரைத் தேர்வு செய்வது அரசமைப்புச் சட்டப்படி தனிநபர் உரிமை என டில்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
11 ஆண்டுகளாக காதலித்து வந்த வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “வெவ்வேறு ஜாதியை சேர்ந்த நாங்கள் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் இதற்கு எங்களது குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவர்களிடம் இருந்து அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆகவே டில்லி காவல் துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதி சஞ்சீவ் நருலா, “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 இன் படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமையாகும். திருமண வயது வந்தவர்களின் தேர்வை அவர்களின் குடும்பமோ, சமூகமோ தடுக்க முடியாது. இந்திய சமூகத்தில் ஜாதி தொடர்ந்து வலுவான சமூக செல்வாக்கை செலுத்தி வருகிறது. ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஜாதிய ரீதியிலான பாகுபாட்டை பலவீனப்படுத்துவதன் வழி சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
