புதுடில்லி, நவ.12– நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிக்கை பிறப்பித்துள்ளது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, கடந்த 2023 செப்., 20இல் மக்களவையிலும், 21இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, செப்., 28இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமானது.
ஆனால், ‘நாடு முழுதும் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்தான் நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை அமல்படுத்த முடியும்’ என, ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்’ என, காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் 10.11.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘புதிதாக தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யும் வரை காத்திருக்காமல், பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என, மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வலியுறுத்தல்
அப்போது பேசிய நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை கூட அரசியல் மற்றும் சமூக ரீதியில் சமதர்மத்தை வலியுறுத்துகிறது. ‘நம் தேசத்தில், 48 சதவீதமாக உள்ள பெண்கள் மிகப் பெரிய சிறுபான்மையின ராகத்தான் இருக்கின்றனர். இந்த மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க அறிவிக்கை பிறப்பிக்கிறோம்’ என, உத்தரவிட்டனர்.
