சனாதனத்தால் யார் உரிமை இழப்புகளுக்கும், உடைமை இழப்புகளுக்கும், மனித அந்தஸ்து இழப்புகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்களோ, அவர்களெல்லாம் திராவிடர்கள்
சனாதனத்தை எதிர்க்கின்ற எந்தக் குரலும் திராவிடக் குரல்தான்!
சென்னை, மே 12 சனாதனத்தை எதிர்க்கின்ற எந்தக் குரலும் திராவிடக் குரல்தான்! நாம் திராவிடர் என்று யாரைச் சொல்லுகின்றோம் என்றால், சனாதனத்தால் யார் உரிமை இழப்புகளுக்கும், உடைமை இழப்புகளுக் கும், மனித அந்தஸ்து இழப்புகளுக்கும் ஆளாக்கப்படு கின்றார்களோ, அவர்களையெல்லாம் திராவிடர்கள் என்று கூறுகின்றோம் என்றார் பேராசிரியர்
அ.கருணானந்தன் அவர்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
ஏன்? எதற்காக?
கடந்த 11.4.2023 அன்று ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?’’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவில் இரண்டாம் நாள் கூட்டத்தில், பேராசிரியர்
அ.கருணானந்தன் தொடக்க உரையாற்றினார்.
அவரது தொடக்கவுரை வருமாறு:
நாம் ஏன் இத்தகைய விழாக்களை கொண்டாடவேண்டும்?
எல்லோருக்கும் வணக்கம்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
ஏன் இத்தகைய விழாக்களைக் கொண்டாட வேண்டும்?
போர் என்பதற்கும், போர்க் களங்கள் என்பதற்கும் உள்ள தொடர்பு!
இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக நாம் பார்ப்பது கிடையாது. பொதுவாக சொல்லவேண்டும் என்றால், போர் என்பதற்கும், போர்க் களங்கள் என்பதற்கும் உள்ள தொடர்பை நாம் அறிவோம்.
முதல் உலகப் போர் என்பது 1914 ஆம் ஆண்டிலிருந்து 1918 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது. வரலாற்றில் நூற்றுக்கணக்கான போர்க் களங்கள் நிகழ்ந்துள்ளன.
அதேபோல, இரண்டாம் உலகப் போர் 1939 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.
பற்பல போர்க் களங்கள், வெற்றிகள் – தோல்விகள் என மாறிக்கொண்டே வருகின்றன.
முடியாமல் இருக்கின்ற ஒரு போராட்டம் – சமூகநீதிப் போராட்டம்!
வைக்கம் போராட்டத்தில் நாம் ஒரு நீண்ட நெடிய சமூகநீதிப் போராட்டத்தின் – இன்னும் சொல்லப் போனால், இந்த உலகிலேயே மிகத் தொன்மையான, மிக நெடிய இனியும் முடியாமல் இருக்கின்ற ஒரு போராட்டம் – சமூகநீதிப் போராட்டம்.
மார்க்சின் வர்க்கப் போராட்டம் – வர்க்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் வருண போராட்டத்தில், வருண மாற்றம் நிகழ்வது கிடையாது.
ஒரு பெரும் போராட்டம் இங்கே 2600 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றது. பல போர்க் களங்கள் அதிலே இருக்கின்றன. அத்தகைய போர்க்களங்களில் ஒன்றாக நாம் இந்த வைக்கம் போராட்டத்தைப் பார்க்கின்றோம்.
நான் குறிப்பிடுவது என்னவென்றால், நாம் இனியும் போராடிக் கொண்டிருக்கின்றோம். எதிலிருந்து போராடு கின்றோம் என்றால், எதற்காக புத்தர் 2600 ஆண்டு களுக்கு முன்பு போராட்டக் குரலை எழுப்பினாரோ, அதே வருணக் கொடுமைக்கு எதிராக இனியும் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, இந்த ஒரு வைக்கம் நிகழ்வை – ஒரு வரலாற்றுப் புரிதலோடு நாம் பார்க்கவேண்டி இருக்கிறது; வரலாற்றுப் பின்னணியில் பார்க்கவேண்டி இருக்கிறது. வைக்கம் போராட்டத்தின் பல பரிமாணங்களைப்பற்றி மிகத் தெளிவான உரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றவிருக்கின்றார்கள்.
என்னைப் பொறுத்தவரையில், தொடக்க உரை என்கின்ற முறையில், அதனுடைய வரலாற்றுப் பின் னணியைப்பற்றி மட்டுமே உங்களோடு பேச விரும்பு கின்றேன், காலத்தின் அருமை கருதி.
வரலாற்றை இருட்டடிப்பு செய்துகொண்டிருக்கின்றார்கள்!
நண்பர்களே, இந்தப் போராட்டம் நடைபெற்றது – திருவிதாங்கூர் சமஸ்தானத்தில். இன்று வரலாற்றை மாற்றிச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கற்பனை யையே வரலாறாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு வரலாற்றை இருட்டடிப்பு செய்துகொண்டிருக் கின்றார்கள்.
நாளைக்குத் திராவிட இயக்கத்தால்தான் ஜாதிகள் தோன்றின, தீண்டாமை தோன்றியது என்றுகூட புத்தகங் களை எழுதிவிடுவார்கள்.
இன்று ஆங்கிலேயர் வந்து தீண்டாமையைக் கொண்டு வந்தார்கள் என்று புத்தகத்தில் எழுதுகின்ற துணிச்சல் வந்திருக்கிறது.
அந்த சூழலில், இதை நாம் ஒரு வரலாற்று உணர் வோடு பார்க்கவேண்டி இருக்கிறது; இது நடைபெற்ற இடம் என்பது – ஆங்கிலேயர்கள் நேரிடையாக ஆண்ட இடம் அல்ல.
சென்னை ராஜதானி ஆங்கிலேய கவர்னரால் நேரிடையாக ஆளப்பட்ட இடம். 560 சமஸ்தானங் களுக்குமேல் அன்றைக்கு இருந்தன என்று கூறினால், சில இஸ்லாமிய மன்னர்களால், நவாபுகளால் ஆளப் பட்டன. பல ஹிந்து மன்னர்களால் ஆளப்பட்டன. ஹிந்து என்று சொல்லுகின்றபொழுது, ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வரையறைக்குள் வருகின்ற ஹிந்து அரசர்கள். ராஜபுத்திர அரசர்களும் இருந்தார்கள்.
அந்த ஹிந்து அரசர்களில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மிக அதிகமான மக்கள் தொகைக் கொண்ட அரசாக இருந்தது திருவிதாங்கூர் அரசு.
அந்த அரசு, தன்னை எப்படி அழைத்துக்கொண்டது என்றால், மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன், இந்த ஆட்சியைத் தொடங்கியபொழுது, அவன் பார்ப்பனி யத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவன்.
இந்த அரசு அவனுடைய திறமையால் கிடைத்ததாக அவன் சொல்லவில்லை. அதன்படி இந்த பத்மனாப சுவாமியிடம் இருந்து வாங்கித் தரப்பட்ட அந்த ஆட்சி அனுமதியை – வாங்கித் தந்தவர்கள் நம்பூதிரிகள். ஆகவே, அவன் கடமைப்பட்டு இருப்பதாகச் சொன்னது நம்பூதிரிகளுக்கு.
அந்த அரசு எப்படி கூறப்பட்டது என்றால், ‘‘இது ஹிந்து சனாதன தர்ம ராஜ்ஜியம்” என்று கூறப்பட்ட அரசு. தர்ம ராஜ்ஜியம்.
ஒரு சனாதன நாட்டில்
எது நடக்கும் என்பதற்கு…
சனாதனம் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு சனாதன நாட்டில் எது நடக்கும் என்பதற்குத் திருவி தாங்கூர் சமஸ்தானத்தின் வரலாறு நமக்கு ஓர் உதாரணம்.
இன்று பெரியாரை சிறுமைப்படுத்துவதற்காகவும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதற்காகவும் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கைப்பற்றி மிகப் பொய்யான தகவல்களைத் தந்துகொண்டிருக் கின்றார்கள்.
இந்தப் பொய்மை என்பது இங்கே இருப்பவர்களாலும் பரப்பப்படுகின்றது; கேரளத்தில் பார்ப்பன உணர்வைக் கொண்ட சிலராலும் பரப்பப்படுகின்றது.
விஜயாலயன் ஜெயக்குமார் என்பவர் மிகப்பெரிய ஓர் ஆய்வு நூலை நாராயண குருவைப்பற்றி எழுதி யுள்ளார். அந்நூல் ஆங்கிலத்தில் சதானந்தன் என்பவ ரால் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நூலை நமது தோழர்கள் வாங்கிப் படிக்கவேண்டும்.
முதல் 100 பக்கங்களில் சனாதன ராஜ்ஜியம் என்பது எவ்வாறு நடத்தப்பட்டது என்பதைப்பற்றி விரிவாகக் கூறப்பட்டு இருக்கிறது.
என்னென்ன வரிகள்? என்னென்ன தடைகள்? யார் யாருக்கு எந்த அளவிற்கு அந்தத் தொலைவு என்பது அவரவர் ஜாதி அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது என்பதையெல்லாம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்; ஆதாரத்தோடு குறிப் பிட்டு இருக்கின்றார்கள்.
எதை அவர்ணர் சமைக்கவேண்டும்?
எதை சவர்ணர் சமைக்கவேண்டும்?
காலில் செருப்பு அணிய முடியாது என்பது ஒன்று; மார்பை மறைக்க முடியாது என்பது அடுத்தக் கட்டம். தோளில் துண்டை போட்டுக்கொள்ளக் கூடாது. சமைப் பதற்கு, எதை அவர்ணர் சமைக்கவேண்டும்? எதை சவர்ணர் சமைக்கவேண்டும்? என்பதான கட்டுப் பாடுகள்.
பாயாசம் என்பதை அவர்ணர் சமைத்தால், அது ஒரு குற்றமாகிறது. அந்தக் குற்றத்திற்குத் தண்டனையாக கொலைத் தண்டனையைக்கூட கொடுக்க முடியும் என்பது சனாதனம்.
பொன் நகைகளை, வெள்ளி நகைகளைக்கூட இந்த அவர்ணர்கள் அணியக்கூடாது – சனாதன ராஜ்ஜியம், கட்டுப்பாடு.
பெண்கள் மார்புகளை மறைக்கக் கூடாது என்றது சனாதனம்.
வேலாயுத பணிக்கர் என்பவர், ஈழவப் பெண்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக, துணிகளை அவர் விநியோகம் செய்து, நீங்கள் அணிந்துகொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்.
நீங்கள், பசுவை வீட்டில் வளர்க்கவேண்டும்; பாலைக் கறக்கவேண்டும்; ஆனால், குடிக்கக் கூடாது; நீங்கள் கறந்த பாலை, சவர்ணருக்குக் கொடுக்கவேண்டும்.
உணவுத் தடை – நடமாட்டத் தடை – கல்வித் தடை போன்றவையெல்லாம் இருந்த காலம் அது.
இன்று நமது ஆளுநர், சனாதனத்தைப்பற்றி மிக அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா – அந்த சனாதனத்தை அனுபவித்த நாட்டில் நடந்த நிகழ்ச்சி களைப் பார்த்தால், அதன் ஒரு பகுதியாகத்தான் வைக் கத்தில் இந்த நடமாட்டத் தடை இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நடமாட்ட உரிமைக்கான போராட்டம் என்பது மட்டுமல்ல, சனாதனத்தை ஒழிப்பதற்கான போராட்டம்!
ஆக, வைக்கம் போராட்டம் என்பது, நடமாட்ட உரிமைக்கான போராட்டம் என்பது மட்டுமல்ல, சனா தனத்தை ஒழிப்பதற்கான போராட்டங்களில் ஒன்றாகவும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
‘மிக அற்புதமான’ ஆளுநர் அவர்கள், சனாதனம் என்ற சொல்லைப் புதுப்பித்திருக்கின்றார்; அது நமக்குப் பயன்படுகின்றது.
இந்த நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; வைக்கம் போராட்டம் என்பது, கோவில் நுழைவுப் போராட்டமல்ல என்பது நமக்குத் தெரியும். கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடக் கூடிய உரிமை; அதற்கான போராட்டம்.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அல்லது கேரளப் பகுதியில், கோவில்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில். மன்னர்களது அரண்மனைகள் எவ்வளவு இருந்திருக்கின்றன; கோட்டைகள் எவ்வளவு இருந்திருக் கின்றன; நூற்றுக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அந்த அளவிற்கு ஏன் இந்த அரண்மனைகளும், கோட்டைகளும் இல்லாமல் போயின? வரலாற்றில் நாம் இதை சரியான முறையில் அணுகி, ஆய்ந்து புரிந்துகொண்டிருக்கின்றோமா?
கோவில் என்பது எத்தகைய ஒரு
சமூக இழிவிற்குப் பயன்பட்டது?
தோழர்களே, கோவில் என்பது எத்தகைய ஒரு சமூக இழிவிற்குப் பயன்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கோவிலை மய்யப்படுத்திய ஓர் அதிகார அமைப்பு.
சோழர்களின் அரண்மனையைக்கூட நம்மால் பார்க்க முடியவில்லை. கடாரங்கொண்டான் ராஜேந்திர சோழனுடைய அரண்மனை இன்று கண்ணுக்குத் தெரியவில்லை.
கோவில்கள் தலைமைச் செயலகங்களாகவே இருந்து வந்திருக்கின்றன!
ஆனால், தஞ்சை கோவில் இருக்கிறது; கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலை நீங்கள் பார்த்திருப் பீர்கள். கோவில் இருக்கிறது, கோட்டைகள் அழிகின்றன. கோவில் இருக்கிறது, அரண்மனைகள் காணாமல் போய்விடுகின்றன. ஏனென்றால், இந்தக் கோவில் கள்தான் பார்ப்பனிய ஆதிக்கத்தின் மய்யமாக இருந்தன. இன்னும் சொல்லப்போனால், கோவில்கள் தலைமைச் செயலகங்களாகவே இருந்து வந்திருக்கின்றன.
இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்தான் அரசு அமைப்புகள் செயல்பட்டன. நீதிமன்றங்கள், வரி வசூல் செய்கின்ற நிறுவனங்கள், அனைத்து அரசு அமைப்புகளும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தான் இருந்தன.
நடமாட்டத் தடை எதற்காக?
அதிகார மய்யங்களை நேரிடையாக நீங்கள் அணுகக் கூடாது என்பதற்காக நடமாட்டத் தடை.
ஆண்டவனை அணுகிவிடக் கூடாது என்பதுகூட அல்ல; அதிகார மய்யங்களை அணுகிவிடக் கூடாது என்பதற்கான தடைகள்.
எவ்வளவு வக்கிரமாக, இந்த ஆன்மிக அரசியலை அவர்கள் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
திருமலை நாயக்கன் கொல்லப்பட்டது மீனாட்சி கோவிலுக்குள். ஒரு நாயக்கன், திருமலை நாயக்கன் மகாலைக் கட்டிய மாபெரும் மன்னன். அவன் கொலையுண்டது மீனாட்சிக் கோவிலுக்குள். அந்தக் கொலைக்குக் காரணமானவன் அந்தப் புரோகிதன். பிரம்மஹத்தி தோஷத்திற்குப் பயந்து தண்டனை யிலிருந்து தப்பியவன்.
கோவிலுக்கும், மக்களுக்குமான இடைவெளி என்பதுதான் இங்கே சனாதனம் உருவாக்கிய ஒன்று.
ஆதிக்கப் பிரிவினர், சுரண்டல் பிரிவினர் இவர்கள்; சுரண்டப்படுகின்ற உழைக்கும் மக்கள்; அவர்கள்தான் இந்த சூத்திரர்கள், அவர்ணர்கள் என்று கூறப்படுகின்றவர்கள்.
சுரண்டப்படுகின்றவர்களுக்கும், சுரண்டுபவர் களுக்குமான போராட்டத்தில், இந்தியாவில் ஒரு விசித்திரமான நிலைமை இருக்கிறது.
புரோகிதத்தை மய்யமாகக் கொண்ட ஆட்சி; புரோகிதர்களை மய்யப்படுத்திய ஆட்சி!
ஆங்கிலத்தில், ‘சேஷர்டாட்டில்’ என்ற ஒரு சொல்லைப் பார்க்கலாம். புரோகித ஆட்சி – புரோகி தத்தை மய்யமாகக் கொண்ட ஆட்சி; புரோகிதர்களை மய்யப்படுத்திய ஆட்சி.
தியோக்கிரசி- தெய்வத்தை மய்யப்படுத்திய ஆட்சி; தெய்வத்தின் பெயரால் மற்றவர்கள் ஆள்வார்கள்.
புரோகிதத்தை மய்யப்படுத்திய ஆட்சியில், புரோகிதப் பணி செய்கின்றவர்கள் மட்டும்தான் அந்த ஆதிக்கத்தில் இருக்கின்றார்கள். கோவிலைக் கையகப்படுத்திக் கொண்டு, புரோகிதத்தை வைத்து ஆட்டுவிப்பவர்கள்.
பிறகு அது கிறிஸ்தவ திருச்சபையாகக் கூட மாறிற்று. அந்தப் பணியில் இருப்பவர்களுக்குத்தான் ஆதிக்கம். ஆனால், இந்தியாவில் சேஷர்டாட்டில்கூட அல்ல; புரோகிதத்தில் எவனாவது ஒருவன் புரோகிதனாக இருப்பான். ஆனால் 2000 ஆண்டிற்கு முன்னர் ஏதாவது ஒரு வழியில், அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்கே அனைத்தும் என்பது.
‘‘நீ மந்திரம் உச்சரிக்கத் தேவையில்லை; நீ யாகம் செய்யத் தேவையில்லை. பிறப்பால், பார்ப்பனன் என்றால், உனக்குக் கோத்திரம் தரப்படும். உனக்குக் கோத்திரம் இருந்தது என்றால், அனைத்தும் உனக்கும் கிடைக்கின்ற நிலைமை.”
இதற்கு என்ன ஒரு சொல்லைப் பயன்படுத்துவது?
இந்தக் கருத்தியலை எப்படிப் பயன்படுத்துவது? என்று குழம்பிப் போகின்றோம்.
சரியான வார்த்தையைச் சொன்னவர்
தந்தை பெரியார்!
முறையான கல்வி பெறாத பெரியார்தான், சரியான வார்த்தையைச் சொன்னார். ‘‘பிராமிணோகிரசி’’ என்று.
அதை ஒப்பிட முடியாது; எதனுடனும் ஒப்பிட முடியாது. இன்று நீதிமன்றத்தில் சுவாமிநாதன் போன்ற வர்கள் இருக்கிறார்கள். அவர் என்ன புரோகிதம் செய்பவரா? யாகம் செய்பவரா? பிறப்பால் பார்ப்பனர் என்கிற ஒரே ஒரு நிலையில், அவருடைய கருத்துகள் வெளிவருகின்றன.
இந்தப் பிறப்பின் அடிப்படையிலான சமூகக் கட்ட மைப்பை, சனாதனம் வலியுறுத்துகிறது. வருணமில்லாத சனாதனம் கிடையாது.
சனாதனத்தைப்பற்றி அனைத்து அடிப்படை விளக்க நூல்களிலும் கூறப்பட்டு இருப்பது – இது வேதம் சார்ந்தது; நான்கு ஸ்மிருதிகளின் அடிப்படையில் வருவது இந்த சனாதனம் என்று சொல்லுகின்றார்கள்.
அடிப்படை ஸ்மிருதிகளாக நான்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்
பராசுர ஸ்மிருதியும், மனுஸ்மிருதியும் இதில் அடக்கம். நமக்குத் தெரிந்து அதிக ஸ்மிருதிகள் இருக்கின்றன. அடிப்படை ஸ்மிருதிகளாக நான்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அனைத்துமே பிறப்பின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பை வலியுறுத்துபவை.
ஒரு பிரிவை, மனிதர்களே அல்ல; மனிதர்களுக்கு மேற்பட்ட, புனிதர்கள் என்று கூறிவிடுகின்றன.
தெய்வங்களை ஆட்டுவிப்பவர்களாக அவர்கள் தங்களைக் கூறிக் கொள்கிறார்கள். தெய்வங்களுக்குமேலே – தெய்வங்களை ஆட்டுவிப்பவர்கள்; தெய்வங்களை செயல்பட வைப்பவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, இவர்கள் இத்துணை காலம் இந்த வெகுமக்களையெல்லாம் இழிவுபடுத்தி வருகின்ற நிலைமையும் அதற்கான ஒரு வெளிப்படைதான் இந்த நடமாடத் தடை என்பது.
இந்த நடமாடத் தடை வைக்கத்தில் மட்டும்தானா இருந்தது? இந்தியாவில் பிற பகுதியில் கிடையாதா?
வைக்கத்தில், அது எதிர்ப்புக் குரலாக மாறியது; பல இடங்களில், எதிர்ப்புக் குரல் எழவில்லை; அல்லது இணக்கம் அங்கே இருந்தது. காந்தியார், இதை ஒரு ஹிந்துப் பிரச்சினையாகப் பார்த்தார்.
வைக்கம் போராட்டத்தைத் தனது போராட்டத் திட்டமாக எடுத்துக்கொள்ளவில்லை!
அகில இந்திய காங்கிரஸ் கட்சிகூட வைக்கம் போராட்டத்தைத் தனது போராட்டத் திட்டமாக எடுத்துக்கொள்ளவில்லை. திருவிதாங்கூர் காங்கிரஸ் உறுப்பினர்கள்தான் எடுத்துக் கொண்டார்களே தவிர, காந்தியார் ஆசி அளித்ததாகக் கூறிக் கொண்டார்களே தவிர, காந்தியாரது ‘யங் இந்தியா’விலே ஆதரித்து சில கட்டுரைகளை வந்ததாகக் கூறிக் கொள்கிறார்களே தவிர, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதனை தனது போராட்டத் திட்டமாக எடுத்துக்கொள்ளவில்லை.
தீண்டாமையும், தடைகளும் இங்கு மட்டுமா இருந்தன? இந்தியாவில் ஒரு சமஸ்தானம் மட்டுமா இருந்தது? பிற இடங்களில் வரவில்லையா? அங்கே ஒரு போராட்டக் குரல் எழுந்தது என்றால், அதற்குப் பின்னணி இருக்கிறது.
தோள்சீலைப் போராட்டத்திற்கு முன் வந்த ரவிக்கைப் போராட்டம் – தென்பகுதியில் நிகழ்ந்தது; இங்கே ஓர் எதிர்ப்பு உணர்ச்சி, மத அமைப்புகளிலும், மதத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளிலும் உருவாகி இருந்தது.
மனிதன் என்ற தகுதியைப் பெறுவதற்கு, மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உரிமை உண்டு என்கிற குரல் வருகிறது. அங்கே நாராயண குரு அதற்கான ஒரு வலிமையைச் சேர்த்தார்.
இங்கே வைகுந்தர் போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். ஓர் எதிர்ப்புக் குரல் இருந்தது.
சனாதனத்தை எதிர்க்கின்ற எந்தக் குரலும் திராவிடக் குரல்தான்!
சனாதனத்தை எதிர்க்கின்ற எந்தக் குரலும் திராவிடக் குரல்தான்! நாம் திராவிடர் என்று யாரைச் சொல்லுகின்றோம் என்றால், சனாதனத்தால் யார் உரிமை இழப்புகளுக்கு, உடைமை இழப்புகளுக்கும், மனித அந்தஸ்து இழப்புகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்களோ, அவர்களையெல்லாம் திராவிடர்கள் என்று கூறுகின்றோம்.
இதை கன்ஷிராம் வெகுமக்கள் என்று சொன்னார். சனாதனம் மறுப்பவர்கள் திராவிடர்கள்.
அந்தத் திராவிடத்தின் குரலாக நாம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றோம்.
நேற்றுகூட பல்ப் அவர்களைப் பற்றி ஆசிரியர் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்கள்.
பல்ப் அவர்கள் தனது கல்லூரி படிப்பினை திருவிதாங்கூர் சாம்ராஜ்ஜியத்தில் அவரால் பெற முடியவில்லை. அரசு கல்லூரியில் அவர்ணர் படிக்க முடியாது. அவர் படித்தது சென்னையில்.
படித்த பிறகு, அவருக்குப் பணி என்று வருகின்றபொழுது, வருண மறுப்பு அங்கே இருந்தது. அதனால் அவர் பணியில் சேர்ந்தது மைசூர் சமாஸ்தானத்தில்.
படிப்பினால் மட்டுமே ஒன்றைத் தீர்க்க முடியும் என்று கருதுவது அறியாமை!
படிப்பால் மட்டுமே சமூகக் கொடுமைகளைத் தீர்க்க முடியும் என்று சிலர் நம்மிடம் கூறி வருகின்றனர். படிப்புப் பெறவேண்டும் என்பது உண்மை. அறிவிற்காகப் படிக்கவேண்டும்; தகுதிக்காகப் படிக்கவேண்டும்; அதற்காகப் போராடவேண்டும் என்பதெல்லாம் உண்மை; அது திராவிடர் குரல்தான்.
ஆனால், படிப்பினால் மட்டுமே ஒன்றைத் தீர்க்க முடியும் என்று கருதுவது அறியாமை. சமூக உணர்வில்லாமல், மனித பொதுமைக்கான அந்த ஓர் உறுதி இல்லாமல், மனித அந்தஸ்தைப் பெற முடியாது.
காந்தியாருக்கு, சனாதனத்தில் நம்பிக்கை அதிகம்!
வைக்கம் போராட்டத்தில், நம்பூதிரியாரின் வீட்டில், காந்தியார் பேச வந்தார் என்று சொல்லுகின்றபொழுது, காந்தியார் கேட்ட கேள்வியும், அவருக்கு அளிக்கப்பட்ட பதில்களும் என்னவென்பதைப்பற்றி புரிந்துகொள்ளவேண்டும்.
காந்தியாருக்கு, சனாதனத்தில் நம்பிக்கை அதிகம். சனாதனப் பற்றாளர் அவர்.
அவர் சொல்கிறார், ‘‘தீண்டாமைக்கு ஏதேனும் சாஸ்திரங்களில் ஆதாரங்கள் உண்டா? சாஸ்திரங்கள் அதை ஒப்புக்கொள்கின்றதா?’’ என்று கேட்கின்றார்.
அப்பொழுது, நம்பூதிரியார் சொன்ன பதில், ‘‘அப்படி இருக்கவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. சம்பிரதாயம் என்ற ஒன்று இருக்கிறது; அந்த சம்பிரதாயத்தில் இது வருகின்றது” என்றார்.
இன்றைக்கும், சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் செல்வதற்குத் தடை என்று சொல்லுகின்றபொழுது, சம்பிரதாயத்தைச் சொல்லுகின்றார்களே தவிர, சாஸ்திரத்தை சொல்லமாட்டார்கள்.
ஆகவே, சம்பிரதாயத்தையும் அவர்கள் உருவாக்குவார்கள்; சாஸ்திரத்தையும் அவர்கள் உருவாக்குவார்கள். இரண்டையும், தங்களுக்குச் சாதகமாக மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
‘பிராமணர்’களைவிட, ‘பிராமண’ப் பாதுகாவலர்கள் என்று நினைக்கின்றவர்கள் மிக ஆபத்தானவர்கள்
இதை நம்புவதற்கும் சில ‘பிராமண’ அபிமானிகள் இருக்கின்றார்கள். சிலர் தங்களை ‘பிராமண’ப் பாதுகாவலர்கள் என்று நினைத்துக் கொள்கின்றார்கள். ‘பிராமணர்கள்’ பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள். ‘பிராமணர்’களைவிட, ‘பிராமண’ப் பாதுகாவலர்கள் என்று நினைக்கின்றவர்கள் மிக ஆபத்தானவர்கள்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவிற்கு வருகின்றபொழுது, இனியும் முடிவு பெறாத ஒரு போரைப்பற்றி கவலைப்பட்டு இதை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
எந்த அடிப்படையை நாம் தகர்க்க விரும்புகின்றோமோ, அந்த அடிப்படையை நினைவூட்டுவதற்காக இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
சனாதனத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கின்ற வரையில் நமது போராட்டம் தொடரும்!
நாம் மனிதப் பொதுமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்; சனாதனம் அதை மறுக்கின்றது.
சனாதனத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கின்ற வரையில் நமது போராட்டம் தொடரும்; வைக்கம் போன்ற நிகழ்வுகள் அதற்கு நமக்கு உந்துதல் தரும், ஊக்கம் தரும் என்று நம்புகின்றேன்
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு பேராசிரியர் அ.கருணானந்தன் தொடக்கவுரையாற்றினார்.