மும்பை அருகிலுள்ள உல்லாஸ் நகரை சேர்ந்தவர் சுமித். மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுடன் சுமித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்தார். சுமித் உள்ளூர் ஹிந்துத்துவா அமைப்போடு தொடர்பு வைத்துள்ளார்.
முக்கியமாக லவ்ஜிகாத் அதாவது ஹிந்து பெண்களை இஸ்லாமியர்கள் காதலித்து அவர்களை மதமாற்றுகிறார்கள் என்ற ஹிந்துத்துவ அமைப்புகளின் போலி வதந்திகளை சுமித்தும் நம்பக் கூடியவர்!
இவரது பகுதியில் இஸ்லாமியர்களும் வசிக் கின்றனர். இவரது 12 வயது சகோதரி இஸ்லாமிய சிறுவர்களோடு அடிக்கடி விளையாடுவார். இதனை பலமுறை இவரது சகோதரர் சுமித் கண்டித் துள்ளார்.
இந்த நிலையில் நிகழ்வு நாள் அன்று சுமித் தன்னுடைய சகோதரியின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததைப் பார்த்தார். உடனே `எப்படி ரத்தக்கறை வந்தது?’ என்று சுமித் தன் சகோதரியிடம் கேட்டார். ஆனால், அவரின் சகோதரியால் சரியாக விளக்கம் கொடுக்க முடியவில்லை.
உடனே தன் சகோதரி யாரோ இஸ்லாமியரோடு பாலியல் உறவு வைத்துக்கொண்டதால் தான் ரத்தக்கறை படிந்திருப்பதாக சுமித் சந்தேகம் கொண்டார். இதனால், கோபத்தில் சுமித் தன் சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து, பிறகு உதைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்திருக்கிறார். கொதிக்கும் எண்ணெய்யை சிறுமியின் பிறப்புறுப்பில் ஊற்றி உள்ளார் – இதில் சிறுமி படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் அங்குள்ள மருத்துவ மனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்தச் சிறுமி இறந்துபோனார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
விசாரணையில், சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆடையில் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிறுமிக்கு அது என்னவென்று புரியவில்லை, மேலும் அதை எப்படி சொல்வது என்றும் தெரியவில்லை இது குறித்து சுமித் தன் சகோதரியிடம் கேட்டதற்கு அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. இதனால் மூளை முழுவதும் ஹிந்துத்துவ சிந்தனைகளைக்கொண்ட அந்த நபர் தனது தங்கை இஸ்லாமியரோடு தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டதால்தான் ரத்தக்கறை படிந் திருப்பதாகக் கருதினார். எனவேதான் சுமித் தன் சகோதரியின் வாயைப் பொத்தி, தீவைத்து காயப்படுத்தியிருக்கிறார்.
இதையடுத்து, சுமித் கைதுசெய்யப்பட்டார். காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஹிந்து மதவாதம் எந்த அளவு வெறியின் உச்சத்திற்குச் சென்று இருந்தால் இப்படி ஒரு வெறித்தனம் உச்சியைப் பிடித்துக் குலுக்கி கண் மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்குத் தாண்டவமாடி, ஓர் உயிரைப் பலி கொண்டிருக்கும்.
பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது முதல், நாட்டில் பரவலாக முசுலிம்கள் மீது அளவுக்கு மீறிய வெறுப்பும், வன்முறையும் தலைக்கொழுத்து ஆட ஆரம்பித்து விட்டது.
மதம், கடவுள் நம்பிக்கைகள் தனிப்பட்ட முறையில் இருந்து தொலைந்து போட்டும். அது பொது வெளிக்கு வந்தால் விலை மதிக்க முடியாத மனித உயிர்களைத்தான் விலையாகக் கொடுக்க நேரும் – எச்சரிக்கை!