புதுடில்லி, நவ.10 வாக்கு திருட்டு குறித்து நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம் சாட்டி இருந்தார்.
மக்களவை தேர்தல் மகாராட் டிரா, கருநாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக கூறி இருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் அரியானாவை போல மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல்காந்தி இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அவர் 8.11.2025 அன்று மத்தியபிரதேசம் சென்றார்.
இது தொடர்பாக அவர் நேற்று (9.11.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நான் அரியானா குறித்து ஒரு விளக்க காட்சியை வழங்கினேன். வாக்குத் திருட்டு நடப்பதை நான் தெளிவாக கண்டேன். 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 8 வாக்குகளில் ஒரு ஓட்டு திருடப் பட்டது. அதைத்தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்திய பிரதேசம், மகாராட்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக நான் நம்புகிறேன்.
பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணை யம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்குத் திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.
இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுப வித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.
வாக்குத் திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.அய்.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
