புதுடில்லி, நவ.10 உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஒருவரது உடலில் ரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கி, அவரின் உடல் உறுப்புகளைக் கொடையாக எடுக்கும் முயற்சியில் டில்லி மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே முதல்முறையாக டில்லியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ சாதனை!
ஒருவர் உயிரிழந்த பிறகு இரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கி, அவரது உடல் உறுப்புகளைக் கொடையாக எடுத்து டில்லி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கீதா சாவ்லா என்ற 55 வயது பெண்மணி, பக்கவாதத்தால் அவதி யடைந்து வந்தார். மருத்துவர்கள் அவருக்கு மோட்டார் நியூரான் நோய் இருப்பதாக (Motor Neuron Disease) கண்டறிந்தனர். இந்நிலையில் அவர் கடந்த வாரம் முதல் கடுமையான சுவாச பிரச்சினையால் அவதியடைந்த நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி டில்லி துவாரகா பகுதியில் உள்ள HCMCT மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நவம்பர் 6 ஆம் தேதி இரவு 8.43 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், கீதா சாவ்லாவின் விருப்பப்படி அவரது உடல் உறுப்பு களைக் கொடையாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். தொடர்ந்து அவரது இதயம் செயலிழந்து அய்ந்து நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜனேட்டரை (ECMO) பயன்படுத்தி நார்மோதெர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் (NRP) எனப்படும் அரிய மருத்துவ முறைபடி அவரது வயிற்று பகுதியில் இரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் மீண்டும் தொடங்கினர்.
இவ்வாறு செய்வதால் அவரது வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளை செயலிழக்கவிடாமல் செய்து அவற்றை பாதுகாப்பாக எடுத்து கொடையளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரி வித்தனர்.
கல்லீரல், சிறுநீரகங்கள் கொடை
‘‘ஒருவர் உயிரிழந்த பின்பும் மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் அவரது உடலில் இரத்த ஓட்டத்தைத் தொடங்கி, உறுப்புக் கொடைக்காக அவற்றை செயலாற்றலுடன் இருக்க வைக்கும் இந்த முயற்சி ஆசியாவிலேயே இப்போதுதான் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்’’ என்று மணிப்பால் மருத்துவமனையின் தலைவர் சிறீகாந்த் சிறீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.
பொதுவாக, இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் வரைதான் அவரது உறுப்புகள் கொடை யாகப் பெறப்படுகின்றன. ஆனால், மூளைச்சாவுக்கு பின் உடலின் இரத்த ஓட்டம் நின்றுவிட்டால் ஒருவரது இதயம் செயலிழந்துவிடும். இதனால் காலம் கருதி உறுப்புகளைக் கொடையாக அளிப்பதற்காக எடுக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் நார்மோதெர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் (NRP) முறைப்படி கல்லீரல், சிறுநீரகங்களை நீண்ட நேரம் செயழிக்காமல் பாதுகாப்பாக எடுத்துக் கொடையளிக்க முடியும்” என்றார்.
அனைத்து நடைமுறைகளுக்கு பின், கீதா சாவ்லாவின் கல்லீரல் 48 வயதுடைய ஆணுக்கும், அவரது சிறுநீரகங்கள் 63 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன. வழங்கப்பட்டன. கண்களின் கார்னியா, தோல் என பல உறுப்புகள் பல்வேறு நோயாளிகளுக்குக் கொடையாக வழங்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
