மதுரை, நவ,10- தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2022ஆம் ஆண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை ஒன்றிய அரசு தடை செய்து உத்தர விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் வீட்டில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து 28.9.2022 அன்று அதிராமபட்டினம் பேருந்து நிலையம் முன்பாக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
நாங்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதிராமபட்டினம் காவல் துறையினர் எங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143, 341, 188, 290 மற்றும் 291 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
காவல்துறை சட்டத்தின் பிரிவு 30(2)இன்படி அதிராம பட்டினம் காவல் துறையினர் அரசியலமைப்பின் வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு குடிமகனுக்கு பேச்சு சுதந்திரத்தையும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்பாடுகளையும் வழங்குகிறது.
அந்த வகையில் எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக காவல் துறையினர் இது தொடர்பான புகார் குறித்து முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.
விசாரணை முடிவில், போராடியதற்காக வழக்கு பதிந்தால் எந்த ஒரு குடிமகனும் ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த வகையில் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
ஒன்றிய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Leave a Comment
