பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டு முறை
இந்த முடிவு குறித்து ஊடகத் திடம் பேசிய துணை முதலமைச்சர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்றும் உறுதிப்படுத்தினார்.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி பயம் காரணமாக, தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடனே காங்கிரஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மாநில அரசின் இந்த பரிந்துரையை பரிசீலித்து, வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த முடிவானது, கருநாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளது.
வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது, தேர்தல் நடைமுறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவு என கருநாடக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளனர்.
