ஜெய்ப்பூர், நவ. 10- ராஜஸ்தானில், கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
காணாமல் போன ஏ.டி.எம்.
பணம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களின் கைகளில் அதிக அளவில் பணம் புழங்குவது குறைந்து வருகிறது. தேவையான பயணத்தை சிறுகச்சிறுக ஏ.டி.எம். மய்யங்களில் சென்று எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் திருடர்கள், மக்களிடம் இருந்து திருடுவதைவிட ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து மொத்தமாக திருடும் நுட்பங்களை ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் புதுப்புது வழிகளில் ஏ.டி.எம். திருட்டுகள் அரங்கேறி வருகின்றன.
இதில் கொஞ்சம் பழைய ‘டெக் னிக்’காக இருந்தாலும், ஏ.டி.எம். எந்திரத்தை கூண்டோடு பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்துள்ளது. அங்கு ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ளது நெஹ்தாய் கிராமம். இங்கு ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மய்யம் இயங்கி வருகிறது. நேற்று (9.11.2025) காலையில் கிராமவாசிகள் ஏ.டி.எம். மய்யத்துக்கு சென்ற போது எந்திரம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கயிறுகட்டி இழுத்து பெயர்த்தனர்
காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் விரைந்து வந்து கண்காணிப்பு ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
அப்போது 8.11.2025 ன்று இரவில் ஒரு வாகனத்தில் திருடர்கள் வந்து இறங்குவதும், அவர்கள் கயிற்றால் கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை இழுப்பதும், பின்னர் எந்திரத்தை அங்கிருந்து தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.
ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து வங்கி நிர்வாகம் உடனடியாக தகவல் வெளியிடவில்லை. எத்தனை பேர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர் என்று தெரிய வில்லை. இருந்த போதிலும் திருடர்களை விரைந்து பிடிக்கும் வகையில், காவல் துறை யினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
