
டாக்டர்
எஸ்.திருநாவுக்கரசு
(குழந்தை காது மூக்கு தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்)
அய்ம்புலன்களில் ஒன்றான காது என்பது ஒலியைக் கேட்க உதவும் உறுப்பு. இது ஒலி அலைகளை சேகரித்து காதுக் கால்வாய் வழியாக அனுப்புகிறது.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. மேலும், பிறருடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன.
பொதுவாகக் காதில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அதற்குண்டான தீர்வுகள் பற்றியும் கேள்வி பதில் வடிவில் தந்து இருக்கிறேன். அதைக் காணலாம்.
காதை சுத்தம் செய்வது எப்படி?
கேள்வி: காதை எப்படி சுத்தம் செய்வது?
பதில்: காது தானாக சுத்தம் செய்து கொள்ளும். மற்ற உறுப்பு களில் சுரக்கும் திரவங்கள் எப்படி தானாக வெளி யேறுகிறதோ அதேபோல காதிலும் செருமென் (WAX) சுரப்பியால் சுரக்கப்படும் திரவம் வெளியேறும்போது தானாகவே சுத்தம் செய்து கொள்ளும். தண்ணீர் உள்ளே சென்றாலோ காது சவ்வு (Ear Drum) தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே, அதுவும் WAXவுடன் சேர்ந்து வெளியே வந்து விடும்.
கேள்வி: காதில் இருக்கும் குரும்பி (WAX) யை எப்பொழுதுமே எடுக்க வேண்டியது இல்லையா?
பதில்: WAX தாமாக வெளியேறுவதில் பிரச்சினை ஏற்பட்டால், நெடு நாட்கள் உள்ளே சேர்ந்து காது அடைப்பை ஏற்படுத்தினாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ காது வலி அதனால் ஏற்பட்டாலோ அப்போது காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வாய் வழியே மருந்து
கேள்வி: காது வலி ஏற்பட்டால் காதில் மருந்து ஊற்றலாமா?
பதில்: பல காரணங்களால் காது வலி ஏற்படலாம். மிகவும் முக்கியமாக நடுக்காது பிரச்சினையால்தான் காது வலி வரும். குறிப்பாக குழந்தைகளுக்கு வெளியில் இருந்து மருந்து ஊற்றினால் காது சவ்வைத் தாண்டி மருந்து போக முடியாது. ஆகவே, உடலில் மற்ற இடங்களில் வலி வந்தால் எப்படி வாய் வழியாக மருந்து எடுத்து கொள்கிறோமோ அது போலவே காது வலிக்கும் வாய் வழியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: காதில் பட்ஸ் (Buds) உபயோகிக்கலாமா?
பதில்: காதை சுத்தம் செய்யத் தேவை இல்லை. குறிப்பாக சுத்தம் செய்வதாக நினைத்துக் கொண்டு Buds போடுவதால் சாதாரணமாக வெளியேறும் குரும்பியை தடுக்கத்தான் முடியும். ஆகவே, Buds போடுவது தேவையற்றது மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட.
விமானப் பயணம்
கேள்வி: விமானப் பயணத்தில் காது வலி எற்படாமல் தடுப்பது எப்படி?
பதில்: விமானப் பயணத்தின்போது மூக்கடைப்பு இருந்தால் நடுக்காதிற்குத் தேவையான காற்று (Ventilation) உள்ளே செல்லாமல் நடுக்காதில் குறைந்த அழுத்தம் (Negative Pressure) ஏற்படுவதனால் காது சவ்வு பாதிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம்.
அதைத் தடுப்பதற்கு விமானப் பயணத்தின்போது விமானம் பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் 30 நிமிடத்துக்கு முன்னதாக மூக்கில் (Decongestant) மருந்து போட்டுக் கொள்ளலாம்.
இது நடுக்காது பிரச்சினை என்பதனால் வெளிக் காதில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ள தேவை இல்லை. மாறாக சுவிங்கம் போட்டு மென்று கொண்டே இருக்கும்போது நடுக்காதிற்கு காற்று போவது அதிகமாகி பாதிப்பைக் குறைக்கும்.
இயர்போன்
கேள்வி: இயர்போன் போட்டுக் கொள்வது ஆபத்தானதா?
பதில்: இயர்போன் போடுவதனால் சாதாரணமாக வெளியேறும் வாக்ஸ் தடைப்பட்டு காதில் தேங்குவதற்கு வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக அதிக சத்தத்தைக் கேட்பது காது கேட்கும் திறனைக் குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, சத்தம் 50 சதவீதத்திற்குக் கீழாகவும், ஒரு நாளைக்கு 4, 5 மணி நேரத்துக்கு மிகாமலும் இருப்பது நல்லது.
கேள்வி: காது சவ்வு அறுபட்டால் சரியாகுமா?
பதில்: வெடிச் சத்தம் அதிகமாகக் கேட்டாலோ, காதில் அடிபட்டாலோ, காது சவ்வு கிழிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், 90 சதவீதம் தானாகவே மூடிக் கொள்ளும். அதனால் காதில் மருந்து ஊற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். காதில் சீழ் வடிந்தாலோ அல்லது காது கேட்கும் தன்மை குறைபாட்டுடன் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
