கதிகார், நவ.9– பீகாரின் கதிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று (18.11.2025) பேசினார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினார்.
அவர் பேசும்போது, ‘பிரதமர் மோடி ஒருபுறம் அகிம்சையை ஆதரிக்கும் வந்தே மாதரத்தை புகழ்கிறார். மறுபுறம் துப்பாக்கி பற்றி பேசுகிறார். இதுபோன்ற வார்த்தைகளை பேசும் அவர் தனது பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தை பாதுகாக்கவில்லை’ என குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தவறி விட்டதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை குறை கூறிய பிரியங்கா, மாறாக பொதுத்துறை நிறுவனங்களை தனது 2 கார்பரேட் நண்பர்களுக்கு பிரதமர் மோடி தாரை வார்ப்பதாகவும் சாடினார். ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக காந்தியார் போராடிய அதே போராட்டத்தில் காங்கிரஸ் தற்போது ஈடுபட்டு உள்ளதாகவும் பிரியங்கா கூறினார்.
