ஹிஸார், நவ.9- அரியானா மாநிலத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் வெளியே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
அரியானா மாநிலம் ஹிஸார் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்குமார் (வயது 57). அரியானா காவல்துறையின் துணைஆய்வாளராகப் (எஸ்.அய்.) பணியாற்றி வந்தார். ஜனவரியில் ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் 7.11.2025 அன்று இரவு சுமார் 11 மணியளவில், அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.
ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த கும்பல் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தது.
ரமேஷ் குமாரை அவரின் வீட்டின் வெளியே வைத்து செங்கல் மற்றும் தடிகளால் அந்த கும்பல் தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரமேஷ் குமரை தாக்கியவர்கள் அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் ஸ்கூட்டரையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
உயிரிழந்த ரமேஷ் குமாருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
