கொல்கத்தா, நவ. 9– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பின ருமான கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கிலிருந்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் ரூ. 56 லட்சம் பணத்தை சைபர் குற்றவாளிகள் கொள்ளை யடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாகப் பயன் படுத்தப்படாமல் இருந்த சேமிப்புக் கணக்கு குறிவைத்து இந்தச் சைபர் மோசடி அரங்கேறியுள்ளது,
இது மேற்கு வங்க அரசியல் மற்றும் வங்கி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி 2001 முதல் 2006 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துவங்கப்பட்ட அவரது சேமிப்புக் கணக்கு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் செயலற்ற நிலையில் இருந்துள்ளது. இதை சைபர் குற்றவாளிகள் இலக்கு வைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, போலி பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி, அந்தக் கணக்கில் இணைக்கப்பட்டிருந்த கைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களையும் சைபர் குற்றவாளிகள் புதுப்பித் துள்ளனர்.
விவரங்களைப் புதுப்பித்த சில நாட்களுக்குள், இணைய வங்கி பரிவர்த்தனைகள் மூலம் கணக்கில் இருந்த மொத்தத் தொகையான ரூ. 56.39 லட்சத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். மேலும், நகை வாங்குதல் மற்றும் ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு பணத்தை முழுவதுமாகத் திருடியுள்ளனர்.
இந்த மோசடி குறித்து எஸ்.பி.அய். வங்கி நிர்வாகம் கொல்கத்தா காவல் துறையில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
