புதுடில்லி, நவ. 9– நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துவது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களாட்சியை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், இது ஒரு அர்த்தமுள்ள அமர்வாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில், பல்வேறு முக்கிய விவகா ரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மேற் கொள்ளும் தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கவும், அரசிடம் கேள்விகள் எழுப்பவும் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்தக் கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியல்
திருத்தம் குறித்து…
இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன. குறிப்பாக, தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியலில் மேற்கொண்டுவரும் தீவிர திருத்தப் பணிகளை இந்தக் கூட்டத் தொடரில் முக்கியப் பிரச்சினையாக எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மக்களாட்சியின் அடிப்படை அம்சமான வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத் தொடர் அரசியல் ரீதியாகவும், மக்கள் பிரச்சினைகள் அடிப்படையிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
