தந்தை பெரியார்– நீதிக்கட்சி– திராவிடர் இயக்கத்தால்தான்!

13 Min Read

உழைப்பை நம்பி வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரை என்றார்கள்! குற்றப்பரம்பரை என்பதற்குப் பதில் ‘சீர்மரபினர்’ என்று மாற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்!
அன்றைக்கு அரிவாளைத் தூக்கிய சமுதாயம் – இன்றைக்கு அறிவைத் தூக்குகிற, அறிவாயுதத்தைத் தூக்குகிற சமுதாயமாக மாறியது எப்படி?

Contents

பேரையூர்: வா.நேரு இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

பேரையூர், நவ.9 உழைப்பை நம்பி வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரை என்றார்கள்! குற்றம்பரம்பரை என்பதற்குப் பதில் ‘சீர்மரபினர்’ என்று மாற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்! அன்றைக்கு அரிவாளைத் தூக்கிய சமுதாயம் – இன்றைக்கு அறிவைத் தூக்குகிற, அறிவாயுதத்தைத் தூக்குகிற சமுதாயமாக மாறியது எப்படி? காரணம்,  தந்தை பெரியார் – நீதிக்கட்சி – திராவிடர் இயக்கம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

கடந்த 7.9.2025 அன்று பேரையூரில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு –நே.சொர்ணம் ஆகியோரின் செல்வி அறிவுமதி எம்.ஏ., பிஎச்.டி., அவர்களுக்கும், விஜயபார்த்திபன் – சாரதா ஆகியோரின் செல்வன் காந்தி பி.இ., அவர்களுக்கும் நடைபெற்ற மணவிழாவிற்குத் தலைமையேற்று நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மணமக்கள் அறிவுமதி – காந்தி

மிகுந்த மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் இந்தப் பேரையூரிலே நடைபெறக்கூடிய சிறப்பான வாழ்க்கை இணைநல ஏற்பு விழா! மதுரை திருவாளர்கள் வா.நேரு – சொர்ணம்  ஆகியோருடைய செல்வி, அறிவுமதி எம்.ஏ., பிஎச்.டி. அவர்களுக்கும், அதேபோல அருமை நண்பர்கள், முத்துலிங்காபுரம், விஜயபார்த்திபன் – சாரதா ஆகியோருடைய செல்வன் காந்தி பி.இ. அவர்களுக்கும், நடைபெறக்கூடிய, இந்த சிறப்பான வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய  உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரு குடும்பம் வேறு, எங்கள் குடும்பம் வேறல்ல; எல்லாம் ஒரே குடும்பம்தான்!

என்னுடைய வாழ்விணையரும் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். நேரு குடும்பம் வேறு, எங்கள் குடும்பம் வேறல்ல; எல்லாம் ஒரே குடும்பம்தான்! எனவே நேரு அவர்கள் குடும்பத்திலே அவர்கள் வரவேற்புரை சொன்னாலும், இந்த குடும்பத்தினுடைய தலைவர் என்ற உறவு எனக்கிருக்கிறது. ஆகவே, நான் பேசுவதற்கு முன்னாலே உங்களையெல்லாம் வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தோழர்களைச் சந்திப்பதுதான்
எனக்கு மாமருந்து!

இந்த மாதிரி பகுதிகளில் மணவிழாக்கள் இந்த முறையில் நடப்பது மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனக்கு ஓர் அறுவைச் சிகிச்சை நடந்து, மருத்துவர்கள் சுற்றுப்பயணம் போகக்கூடாது; இன்னும் நான்கு வாரம் கழித்துத்தான் போகவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், ‘‘இந்த நிகழ்ச்சிக்கு நான் ஒப்புக்கொண்டு விட்டேன்.  நான் ரொம்ப முக்கியமான உறவுக்காரன். கொள்கைக்காரர்கள்தான் எங்களுக்கு உறவுக்காரர்கள். ஆகவே, நான் போகவேண்டும்’’ என்று மருத்துவரிடம் சொன்னேன். ‘‘நீங்கள் கொடுக்கிற மருந்து வேலை செய்வதைவிட, தோழர்களையும், மக்களையும் பார்க்கும் போது அந்த மருந்துதான் எனக்கு அதிகமான உற்சாகம் தருகிறது. ஆகவே அந்த மருந்துதான் முக்கியமான மருந்து’’ என்று இங்கே வந்தோம். உங்களையெல்லாம் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தந்தை பெரியார் ஏற்படுத்திய
மிகப்பெரிய மாற்றம் என்ன?

100 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை பெரியார்; அவர் வழி வந்த பேரறிஞர் அண்ணா; கலைஞர்; இன்றைய முதலமைச்சர் – இப்படி வரிசையாக வந்த திராவிடர் இயக்கத்தவர்கள்; அதே போல கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் – இப்படி எல்லோரும் சேர்ந்து சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன? இந்த இயக்கத்தில் பார்த்தீர்கள் என்றால், மணமகள்
பிஎச்.டி. படித்திருக்கிறார். நம்முடைய நேரு அவர்கள் அவர் பொறியாளராகி ஆய்வு செய்து பிஎச்.டி. வாங்கியிருக்கார். அவர் பொறியாளரான பிறகு, அவ்வளவு நாள் கழித்து பிஎச்.டி. ஆனால், நம்முடைய மணப்பெண் அறிவுமதி. அந்த ஆய்வுப் பட்டத்தை இப்போதே வாங்கப்போகிறார். அதுதான் மிக முக்கியம். நல்ல எழுத்தாளர். நிறைய ஆய்வுள்ள புத்தகத்தை படித்திருக்கிறார். அருமையான வாழ்விணையர்கள். இந்தக் குடும்பத்து உறவுகளுக்குத் தெரிந்தாலும், உங்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்ல வேண்டும். தந்தை பெரியார் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றம் என்ன? என்று சொன்னால் இரண்டு, மூன்று மாற்றங்கள்.

மிகப்பெரிய அளவில் சமூக மாற்றங்கள்!

முதல் மாற்றம்,   நூறு ஆண்டிற்கு முன்பு, சுய மரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தந்தை பெரியார்; திராவிட இயக்கம்; கல்வி வள்ளல் காமராசர், இவர்கள் எல்லாம் ஒரு பெரிய வாய்ப்பை உண்டாக்கவில்லை என்றால், இன்றைக்கு என்ன நிலை? எல்லாரும் படித்துள்ளனர்.  மணமகன் படித்தி ருக்கிறார். மிகப்பெரிய ஒரு மாற்றம்! சாதாரண மாற்றம் அல்ல. நான் நீண்ட நாளைக்குப் பிறகு இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன். இப்போது இருக்கிற இந்த மாற்றங்களைப் பார்த்தேன். ரொம்ப அதிசயமான மாற்றம் என்னவென்றால்,  பள்ளிக்கூடம்! வெறும் காடாகக் கிடந்த இடம் –  இப்ப மெட்ரிக் பள்ளி! அப்புறம் கல்லூரி! வரிசையாகப் பார்த்தால், தொழிற்சாலை. எல்லாம் சமூக மாற்றங்கள்!

இந்த இயக்கத்தினுடைய பெருமை!

இவையெல்லாம் தானாக நடந்தது இல்லை நண்பர்களே! அறிவு; அறிவு; அறிவு! இந்த இயக்கம் செய்ததினால்! தந்தை பெரியார் செய்ததினால்தான் இன்றைக்கு நம்முடைய  பிள்ளைகளெல்லாம் படித்திருக்கிறார்கள். பல ஆண்டுகள் ரொம்ப நெருக்கமாக நாங்கள் பழகியிருக்கின்றோம். அவருடைய குடும்பம் தெரியும், அவருடைய துணைவியாரைத் தெரியும். இந்த நிமிடம் வரையிலே, உண்மையைச் சொல்கிறேன். இந்த இயக்கத்தினுடைய பெருமை என்னவென்று  சொன்னால், நேரு என்ன ஜாதின்னு எங்களுக்குத் தெரியாது!   எங்களுக்கு ஜாதி எல்லாம் கிடையாது!  இவர் சீர்மரபினர்! அதனால், சீர்மரபினர் தலைவர் இங்கே வந்திருக்கிறார் என்று சொன்ன உடனே, இப்போதுதான் கேட்டேன். நாங்கள் யாரையும் விசாரிக்க மாட்டோம். பாராட்டிச் சொல்வதற்காகக் கேட்டேன். அதைக் கேட்டவுடன், எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. காரணம் என்னவென்றால்,  தாய்மார்கள், பெரியோர்கள் எல்லாம் இங்கே நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். அவர்களுக்காகச் சொல்கிறேன். மணமக்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நிறையப் படித்தவர்கள்! உங்களுக்குத்தான் சொல்ல வேண்டும். அதுதான் மிக முக்கியம்.

‘‘சீர்மரபினர்” என்ற வார்த்தை
கலைஞர் உண்டாக்கிய வார்த்தை!

இந்த ‘‘சீர்மரபினர்” என்ற வார்த்தை கலைஞர் உண்டாக்கிய வார்த்தை! மரியாதையான வார்த்தை! அதற்கு முன்பு அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்; இங்கே சொன்னார்கள்,  யார் யார் என்று. அதற்கும் முன்பு அதற்கு என்ன பெயர்? இங்கிருக்கும் பெரியவர்களுக்குத் தெரியும். இளைய தலைமுறையினருக்கு ஒரு வேளை தெரியாமல் இருக்கலாம். இன்றைக்கு அழகான பெயர், ‘‘சீர்மரபினர்!” முன்பு இதற்குப் பெயர், “குற்றப்பரம்பரையினர்” இதற்கு முன்பு CT. வெள்ளைக்காரன் வைத்த பெயர் CT.

உழைப்பை நம்பி வாழக்கூடிய
ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரை என்றார்கள்!

CT என்றால், Criminal Tribes. நாம் என்ன குற்றம் செய்தோம்? இந்த நாட்டில் பிறந்தோம். அதுதான் ஒரேயொரு குற்றம். வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்யாதவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிற மாதிரி நம்முடைய ஒரு சமுதாயத்தையே பழிவாங்கி, இந்த ஜாதி; வர்ண தர்மம்; மனுதர்மம்; பார்ப்பனர்களுடைய சூழ்ச்சி – இதெல்லாம் சொன்னால் உங்களுக்கு விளங்காது. ஏன் இதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள்; இளைஞர்கள் சிலர் நினைப்பார்கள். ஆனால், நமக்கு என்ன சூழ்நிலை தெரியுங்களா? நம்மையெல்லாம் குற்றப்பரம்பரை என்று சொன்னார்கள். தந்தை பெரியார் தான் கேட்டார், வேலை செய்தே களைப்புறுகின்றவர்கள்; மண்வெட்டி வேலை செய்து கூலி வாங்குகிறவர்கள்; நாம் உழைக்கிற சமுதாயம்; நாளெல்லாம் வேலை செய்துவிட்டு, அதன் பலனை அனுபவிக்காமல் பாடுபடுகிற ஒரு சமுதாயம் – உழைப்பை நம்பி வாழக்கூடிய ஒரு சமு தாயத்தை குற்றப்பரம்பரை என்றார்கள். உழைப்பே தெரியாதவர்களை உயர் ஜாதி அய்யர் என்றார்கள். தந்தை பெரியார் சொன்னார், “நியாயமாக அவன் தான் குற்றப்பரம்பரை. நாங்கள் இல்லை அய்யா” என்று தெளிவாகச் சொன்னார். இது சாதாரணமானது இல்லை நண்பர்களே! இந்த நிலை எப்படி மாறியது?

குற்றப்பரம்பரையிலிருந்த நம்மை எந்தக் கடவுளும் வெளியில் கொண்டு வரவில்லை!

நம் நாட்டில் ஆண்டுதோறும் கடவுளை வணங்கு கிறீர்கள்; இருக்கிற கடவுள்கள் போதாதென்று குலதெய்வம் வைத்திருக்கிறீர்கள்; குலதெய்வமும் போதாதென்று கேரளாவுக்குப் போகிறீர்கள்; கேரளாவும் போதாதென்று திருப்பதி போகிறீர்கள். இவ்வளவு கடவுகள் இருக்கின்றன. இவ்வளவு கடவுள்கள் இருந்தும் குற்றப்பரம்பரையிலிருந்த நம்மை எந்தக் கடவுளும் வெளியில் கொண்டு வரவில்லை. தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் – தேவர் திருமகனின் பங்கும் இதில் உண்டு. அதுதான் மிகமுக்கியம்! இப்படி பல வகைகளிலே இந்த குற்றப் பரம்பரை என்பதை மாற்றி சீர்மரபினர் என்று முத்தமிழறிஞர் கலைஞர்  அருமையாக பெயர் வைத்தார். நாம் சீர் மரபினர்! அதுதான் மிக முக்கியம்!

மண்டல் கமிஷன் வந்ததால்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு!

இன்னொரு சம்பவத்தை உங்களுக்கு சொல்றேன். மண்டல் கமிஷன் வந்ததால்தான் இன்றைக்கு இட ஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு! எல்லோரும்  படித்திருக்கிறார்கள்! படித்த எல்லோரும் இங்கே நிறைய வந்திருக்கிறோம்! பார்க்கிறோம்! பெருமையாக இருக்கிறது! இந்த சமூகத்தில் நிறைய பேர் படிச்சிருக்காங்க. ஆண்கள் படித்தால்கூட பெண்களைப் படிக்க விடவே… மாட்டாங்க. பெண்கள் படிப்பதா? படிக்க விடவில்லை. அதுகூட பரவாயில்லை. மதத்தின் அடிப்படையில் பெண்களைக் கொச்சைப்படுத்தினார்கள் என்பதற்கு உதாரணம், ஒரு பழமொழி கிராமத்துல – உங்களுக்கெல்லாம் தெரியும் – ‘‘வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.’’ இது எல்லாருக்கும் தெரிந்த பழமொழி. ஆனால்,  ‘‘பொம்பளை சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சு’’ இதற்கு என்ன அர்த்தம்? பெண்களை நோயாளியாகவே இருக்கச் சொல்றான். சிரிக்கிறதுக்குக் கூட பெண்களுக்கு உரிமை இல்லை. வாழ்வது அப்புறம் இருக்கட்டும். அப்படி இருந்த ஒரு சமுதாயத்தை மாற்றிக்காட்டிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!

அதனாலதான் லண்டனில் நம்முடைய முதலமைச்சர் போய் பெரியார் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் திறக்கிறார்! ‘பெரியார்’ உலகமயமாகிறார்! இன்னைக்கு எவ்வளவு பெரிய மாற்றம்? சாதாரணம் இல்லை! இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? தாய்மார்கள் சிந்திக்கணும். இன்றைக்கு நேரு பிஎச்.டி., அவருடைய துணைவியார், பணியாற்றுகிறார். நாம் பெரிய அளவில வந்திருக்கிறோம். ஒரு சம்பவம் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன்

மாலை நேரத்தில், காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அங்கேயே படுத்திருக்கவேண்டும். எங்கே குற்றம் நடந்தாலும் நம்மாளைப் போய் அடிப்பான். ஒரு காலத்துல அவ்வளவு அநாகரீகமா இருந்தது. அது சட்டப்படி நடந்தது. அந்தச் சட்டத்தையே தூக்கி எறிந்த இயக்கம். அதற்காகப் பாடுபட்டோம். மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு எழுதியது. இந்த இயக்கத்தினாலே வளர்ந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான  பெருமதிப்பிற்குரிய – இந்த சமுதாயத்தைச் சார்ந்த, ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியனும் அந்த அமர்வில் ஒருவர்.

அப்போது நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் சொன்னாராம், ‘‘உங்கள் தீர்ப்போடு நான் இணைய வில்லை. நான் தனியாக விவரமாக எழுத வேண்டும்’’ என்று.

மற்ற நீதிபதிகள் ஏன்? என்று கேட்டார்களாம்.

அதற்கு நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், “இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியாது அதன் அவசியம் என்னவென்று. கொள்கை அளவில் நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்; மாறுபாடு செய்யவில்லை; ஆனால், அதனால் பலன் அடைந்தவன் நான். அத னால்தான், நான்  தீர்ப்பினைத்  தனியாக எழுதவேண்டும். உங்களோடு சேர்ந்து எழுத மாட்டேன்’’ என்று சொல்லிவிட்டு, அத்தீர்ப்பில் பெரியார், அம்பேத்கர் என்று குறிப்பிட்டு எழுதினார்.

தந்தை பெரியார்,
நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம்!

பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதிகளைப் பார்த்து, ‘‘உங்களுடன் சமமாக அமர்ந்துகொண்டு நான் இந்தத் தீர்ப்பு எழுதுகிறேன். ஆனால், என்னுடைய மூதாதையர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மாலை நேரமானால், காவல் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டும்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘இன்றைக்கு நான் எந்தப் பெரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியையும் அழைத்துக் கூண்டில் நிறுத்துவேன். பதில் சொல் என்று கேட்பேன். இந்த நிலையை உண்டாக்கியவர் தந்தை பெரியார்! உண்டாக்கியது நீதிக்கட்சி! உண்டாக்கியது திராவிடர் இயக்கம்! அதைப் பாராட்ட வேண்டும். அதனால் தான் நான் தனியாக எழுதுகிறேன்’’ என்று சொன்னார்.

அரிவாளைத் தூக்குகிற சமுதாயம் அறிவாயுதத்தைத் தூக்குகிற சமுதாயமாக மாற்றிய இயக்கம்!

அதனால் நம் பிள்ளைகள் எல்லாம் பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதுதான் 100 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றம்! புரட்சி! ஒரு துளி ரத்தம் சிந்தாமல், எந்த விதமான வன்முறையும் இல்லாமல் – எல்லாம் அரிவாளைத் தூக்குகிற சமுதாயம்… இன்றைக்கு அறிவைத் தூக்குகிற; அறிவாயுதத்தைத் தூக்குகிற சமுதாயமாக, ஒரு சமுதாயத்தையே மாற்றிக் காட்டிய இயக்கம்தான் திராவிடர் இயக்கம்!

இந்த அரங்கத்தைப் பாருங்கள். தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இன்னமும் உங்களுக்கு 50 விழுக்காடு தரப்படவில்லை. ஆனால், இந்த அரங்கத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கிறீர்கள். அதுதான் மிக முக்கியம். பாராட்டப்பட வேண்டியது. இவ்வளவு பேர் வரும்போது, தாய்மார்கள் எல்லாரும் நாற்காலியில் ஜம்முனு அமர்ந்திருக்கிறீர்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இதுதான் வரவேற்கத் தகுந்தது. ஆண்கள் நிறைய பேர் நிற்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று ஆண்கள் நின்று, பெண்கள் நாற்காலியில் அமரும் துணிச்சல் பெண்களுக்கு இருந்ததா? நினைத்துப் பார்க்க முடியுமா? நம்ம பாட்டி இன்றைக்கு துணிச்சலாக அமர்ந்திருக்கிறார். முன்பெல்லாம், ‘அய்யோ ஆம்பிளைக்கு முன்னால் நான் எப்படி நாற்காலியில் உட்காருவது?’ என்று சொல்வார்கள். அப்போதும் நாற்காலி இருந்தது. ஆனால், உட்காருகிற தைரியம் இல்லை; வாய்ப்பில்லை; அதைக் கொடுத்தவர்தான் தந்தை பெரியார்!

‘‘ஆணுக்குப் பெண் சமம்’’ என்றார் பெரியார்! இந்த இயக்கம் என்ன செய்தது? இதைத்தான் செய்தது! பெரிய, பெரிய மாறுதல்! எனவே, இப்படிப்பட்ட ஒரு அற்புதமான மாறுதலை உருவாக்கி, நம்மைப் படிக்க வைத்து, சமூக நீதிக்காக அரும்பாடுபட்டு. எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து, நமக்கு இருந்த பெயரான ’குற்றப் பரம்பரை’ என்பதை மாற்றி, ‘‘நல்ல பரம்பரை”, ‘‘சீர் மரபினர்’’ அழகாக வார்த்தைகள் சொல்லி, இதை அத்தனையும் உருவாக்கி எல்லோருக்கும் வாய்ப்பு! ‘‘எல்லோருக்கும் எல்லாம்!” யாருக்கும் இல்லை என்று சொல்லவில்லை. பசியேப்பக்காரனுக்கு முன்னாடி பந்தியில் உட்கார வைங்க. புளியேப்பக்காரன் பின்னால் வரட்டும். இதுதான் சமூக நீதி!

எதைக் கொடுத்தாலும்
கல்வியைக் கொடுக்கக் கூடாது!

ஆகவே, அப்பேற்பட்ட சமூகநீதிக்காக பாடுபடக் கூடியவர் நேரு அவர்கள்! அவர் நல்ல எழுத்தாளர்! ரொம்ப ஆழமானவர். சீர்மரபினர் வாரியத்தை இன்றைய ஆட்சிதான் அமைத்திருக்கிறது. அதற்குத் தனியாக இரண்டு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால்தான், இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். ஏனென்றால், ‘‘நாங்களே நூற்றுக்கு நூறு சாப்பிட்டுகிட்டே இருந்தோம். நீ எப்படி வரலாம்’’ என்கிறார்கள். அவன் பசியேப்பக்காரனாக இருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. அவன் புளியேப்பக்காரன். அவங்களை சாப்பிடக்கூடாதுன்னு சொல்கிறோம். சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்கு, பெண்களுக்கு,பஞ்சமனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது. அதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மத்தை சட்டமாக்குவதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள். அதைத் தடுக்கத்தான் நாம் போராடுகிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் வரையறுத்தார். சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! ஆனால்,  இது கூடாது. மனுதர்மம் தான் வேண்டும் என்கிறார்கள்.  பெண் என்றால், அடிமை. பெண்கள் கீழ்ஜாதி. ஆணுக்கு – பெண் சமம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றுவதுதான் இந்த இயக்கம்.

ஆகவே, அற்புதமான இந்த இயக்கத்திற்கு சிறந்த எழுத்தாளர் – அவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தினுடைய தலைவர்! அவருடைய பிள்ளை அறிவுமதி எழுதிய புத்தகத்தைப் படித்தோம்.

இல்லறத்திற்குப் பிறகு தொண்டறம்

எனவே, இந்த மணமக்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. இல்லறம்; துறவறம் என்று சொன்னார்கள். நாமதான் ”தொண்டறம்” என்று சொன்னோம்! மணமக்கள் எளிமையாக வாழுங்கள்! சிக்கனமாக வாழுங்கள்! சிறப்பாக வாழுங்கள்! எல்லோரும் இந்த மாதிரியான மணவிழாவை நடத்தினால் – நமக்கு யார் மீதும் கோபம் இல்லை; அய்யர் மீது கோபம் இல்லை; சடங்குகள் மீது கோபம் இல்லை. அதற்குப் பதிலாக நெருப்பை கொளுத்து; அது புகையாக எழுந்து, ‘‘மணப்பெண் கண்களைக் கசக்க’’ – இங்கே கண்களைக் கசக்கிற வேலையே இல்லை. இனிமையாக நடந்துகொண்டிருக்கிறது.

2016 ஆம் ஆண்டு ஜெர்மனியில் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தேன்!

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான மணமுறையாக தந்தை பெரியார் மாற்றி, இன்றைக்கு அகில உலக அளவில் இந்தக் கொள்கை பரவிக் கொண்டிருக்கிறது. நேற்று ஜெர்மனிக்கு போயிட்டு வந்தாரு நம்முடைய முதலமைச்சர்! அதே ஜெர்மனியில், 2016 ஆம் ஆண்டு கொலோன் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதைத் திருமணத்தை எனது தலைமையில் நடத்தி வைத்தேன்!  மணமக்கள் இரண்டு பேரும் இலங்கையைச் சார்ந்தவர்கள்! பேராசிரியர்  ‘உங்கள் தலைமையில் திருமணம் நடத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என்று எனக்கு கடிதம் எழுதினார்கள். ‘இங்கே வந்து ஒருநாள் கூடுதலாகத் தங்கியிருந்து திருமணத்தை நடத்தி வைத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

திருச்சி சிறுகனூரில் ‘‘பெரியார் உலகம்!’’

ஆகவே, இந்த மணமுறை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது! பெரியார் உலக மயம்! உலகம் பெரியார் மயம்! அதனால்தான் திருச்சி சிறுகனூரில் “பெரியார் உலகம்” என்று தனியே பல கோடி ரூபாய்க்கு ஒரு பெரிய வாய்ப்பை உண்டாக்கி வருகிறோம்!

உங்கள் எல்லோருக்கும் நன்றி செலுத்தி, ‘‘மணமக்கள்  செல்வர்கள் காந்தி அவர்களும், அறிவுமதி அவர்களும் மிகத்தெளிவான அளவுக்கு வாழ்க்கை இணையேற்பு விழாவை ஏற்று சிறப்பாக நடப்பார்கள். அந்த வகையிலே வாழ்த்துகளைச் சொல்லி, மணமக்கள் இப்போது உறுதிமொழி கூறி, வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை நடத்திக்கொள்கிறார்கள்” என்று கூறி மணமக்களுக்கு இணையேற்பு வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இணையேற்பு விழாவை நடத்தி சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *