பாட்னா, நவ.9 பீகார் சட்டமன்றத் தேர்தல் – 2025, நவம்பர் 6 அன்று (முதல் கட்டம்) நடந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (11.11.2025) நடைபெறும் நிலையில், பல்வேறு முறைகேடுகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
வேறு மாநில பாஜக தலைவர்கள் பீகாரில் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச் சாவ டிக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு (VVPAT Slips) குப்பையில் போடப்பட்டது உள்ளிட்டவை செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்திகளாக உள்ளன.
பா.ஜ.க. பிரமுகர்களே
கள்ள ஓட்டுப் போட
பீகார் சென்ற அவலம்!
கள்ள ஓட்டுப் போட
பீகார் சென்ற அவலம்!
டில்லி மற்றும் பிற மாநிலங்களில் வசிப்பதாகக் கூறப்படும் பா.ஜ.க. தலைவர்கள் பீகாரில் வாக்களித்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான ராகேஷ் சின்ஹா மிகவும் முக்கியமானவர் ஆவார்!
அவர் பிப்ரவரி 2025 டில்லி தேர்தலில் வாக்களித்த பிறகு, ஏப்ரல் 28 அன்று பீகார் வாக்காளர் அட்டை பெற்று, நவம்பர் 6 முதல் கட்டத்தில் சிவான் (Siwan) இல் வாக்களித்தார். இதை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, பெருமையாகக் கூறினார். இதன்படி பா.ஜ.க. பீகாருக்கு பெரிய அளவில் வாக்காளர்களை அனுப்பியது உறுதியானது. மற்றொரு பா.ஜ.க. தலைவர் ராகவ் உள்ளிட்டோரும் டில்லியில் வாக்களித்துவிட்டு பீகாருக்குச் சென்றும் வாக்களித்தனர்
சாலையில் கொட்டிக்கிடந்த ஒப்புகைச்சீட்டு
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரம் ஒப்புகைச்சீட்டுகள் சிதறிக் கிடக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது இதுகுறித்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அலட்சியமாக செயல்பட்டதற்காக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரி (ஏஆர்ஓ) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி வாக்காளர்கள்
பீகாரின் பல்வேறு தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்கச் சென்ற போது ‘‘ஏற்கெனவே உங்கள் வாக்குப் பதிவாகி விட்டது’’ என்று கூறப்பட்டது. அவர்களை காவல்துறை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. மோஹி உத்தீன கர் வாக்குச்சாவடி பகுதிகளில் காவல்துறை யினர் சிறுபான்மையினரின் வீடுகளில் புகுந்து வாக்காளர்களைத் தாக்கினர். முங்கேர், மோகமா இடங்களில் வாக்குச்சாவடி சென்ற பொதுமக்கள் மீது கல் எறிதல், கொலை மிரட்டல் போன்றவை ஆளுங்கட்சி பிரமுகர்களால் நடத்தப்பட்டன.
வைசாலி மாவட்டத்தின் ஹஜிபூர் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. கேமராக்கள் அணைக்கப்பட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலான காட்சிப் பதிவு களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ராங் ரூமில் உள்ள சி.சி.டி.வி. திரை கள் அணைக்கப்பட்டதாகவும், இரவு நேரத்தில் ஒரு பிக்அப் வேன் உள்ளே நுழைந்து வெளியேறியதாகவும், இது இயந்திரங்களை மாற்றச் செய்த சூழ்ச்சி என்று மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். “பீகாரின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி” என்று ட்விட்டர் இல் பதிவிட்டனர்.
மற்றொரு காட்சிப் பதிவில், ஆர்.என். கல்லூரி வாக்கு எண்ணிக்கை மய்யத்தில் மக்னார் (129) தொகுதியின் சி.சி.டி.வி. திரை அணைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இரண்டு மூறை வாக்களித்தாரா?
பீகாரில் வாக்களித்து முடிந்த பிறகு ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் சவுத்திரி மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பவி சவுத்திரி முதலில் தன்னுடைய இடது கையில் வாக்களித்த அடையாளத்திற்கான மய்யை காட்டியுள்ளார். பின்னர் வலது கை விரல் அடையாளத்தையும் காட்டியுள்ளார்.
இதன் படி அவர் இரண்டு வாக்குகளைச் செலுத்தி உள்ளாரா? என்ற கேள்விக்கு மறுப்பு எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.
