இந்தியாவின் பெயரால் கிரிக்கெட் விளையாடும் BCCI அணிகளில் மகளிர் கிரிக்கெட் அணி இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று நவம்பர் 2 அன்று உலகக் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. அந்த அணியில் ஜெமிமா என்பவரும் இடம்பெற்றுள்ளார். அவருடைய ஆட்டம் காரணமாக மட்டுமே இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஆனால், அரையிறுதிப் போட்டியில் ஜெமிமா ஜொலித்ததும், அவர் மீது வன்மக் கணைகளை வீசினர் சங்கிகள்.
அரையிறுதியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஜெமிமா, இறுதிப் போட்டியில் குறைந்த 26 ரன் எடுத்து அவுட் ஆனார். “ஜெமிமா ஜொலிக்கவில்லை” என்று கார்டு போட்டுக் கொண்டாடியது ‘தினமலர்’.
என்ன காரணம்? அவர் தன் வெற்றிக்குக் கடவுள் காரணம் என்றார். அப்படியென்றால், பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்பார்கள். சங்கிகளுக்கும், அவர்களின் பத்திரிகையான தினமலருக்கும் என்ன வந்தது?
இது வரைக்கும் யாரும் இப்படிச் சொன்ன தில்லையா? “என் வெற்றிகளுக்கெல்லாம் கணேஷ் தான் காரணம்” என்று சொல்லவில்லையா சச்சின் டெண்டுல்கர்?
‘‘இந்திய அணிக்குக் கடவுள் தந்த பரிசு இவர்’’ என்று பும்ராவைப் புகழ்ந்தார் ஒருவர். ‘‘ஆர்.சி.பி. வெற்றி கடவுள் தந்தது’’ என்றார் அபினவ் முகுந்த். ‘‘கடவுள் தான் என்னை விபத்திலிருந்து காப்பாற்றினார்’’ என்றார் ரிஷப் பண்ட்.
இல்லை… அவர் கிரவுண்டுக்குள்ளேயே ஜெபிக் கிறார். கடவுளை அழைக்கிறார்.
வானத்தைப் பார்த்து, முணுமுணுத்தபடி ‘கடவுளுடன் காண்டாக்ட்’ ஏற்படுத்திக் கொண்டு பேட்டைப் பிடித்ததில்லையா கிருஷ்ணமாச்சாரி சிறீ காந்த்? அப்படியே டக் அவுட் ஆகியும் போக வில்லையா?
(ஏறத்தாழ 10% டக் அவுட்டுகள் டெஸ்ட்டிலும், ஒரு நாள் போட்டிகளிலும்!)
கடவுளை வழிபடலாம். ஆனால்…
அவர் முழுப் பெயர் ஜெமிமா ரோட்ரிக்ஸ்; ஜெமிமா கடவுள் நம்பிக்கையாளர் தான்; கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்.
அவர் பைபிள் வசனத்தை உச்சரித்ததும், ஏசுவைக் கும்பிட்டதும் தான் தவறு. யாரைக் கூப் பிட்டாலும் இவர் அடித்தால்தான் ரன். அது தான் பொறுக்கவில்லை சங்கிகளுக்கு! கடந்த ஆண்டு அவரது தந்தை ஜிம்கானா கிளப்பில் கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்துக்கு இடம் கேட்டார் என்று ஜெமிமாவை கிளப்பில் இருந்து விலக்கினர். அப்போதும், சங்கிகள் இணையம் எங்கும் வன்மத்தைக் கொட்டினர். ஆனாலும், அவர் கலங்கவில்லை. அதன் தொடர்ச்சி தான் இப்போது ‘தினமலர்’ வரை வன்மத்தைக் கொட்டுவதற்குக் காரணம்!
1983-ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாத கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் தம்மைக் கிண்டல் செய்துகொண்டிருந்த பார்ப்பனக் கும்பலைப் புறம்தள்ளி, அரையிறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி, இறுதியில் கோப்பையையும் கைப்பற்றக் காரணமாக இருந்தார். அந்த இறுதிப் போட்டியில் கபில்தேவும் தான் அதிகம் ரன் எடுக்கவில்லை.
அன்று முதல் இன்று வரை பார்ப்பனியமும், சங்கிகளும் ‘வன்ம’குடோன்களாகத் தான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திறமை அல்ல அவர்கள் கணக்கு! அவர் யார் என்பது தான்!
– குப்பைக் கோழியார்
