‘‘ஜாதி ஒழிப்புக்கான திராவிட இயக்கம், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்பது ஏன்?’’ ஜப்பான் முன்னணி நாளேட்டின் தெற்காசியச் செய்தியாளருக்குத் தமிழர் தலைவர் பேட்டி!

3 Min Read

சென்னை, நவ.8–  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, ஜப்பான் முன்னணி நாளேடான ‘தி அசாஹி ஷிம்புன்’ செய்தியாளர் அகிகோ சுசூகி நேர்காணல் செய்தார்.

நேர்காணல் விவரம் வருமாறு:

கரோனா நோய்க்கிருமி எப்படி ஒரு நாட்டில் உருவாகி உலகம் முழுவதும் பரவி மக்களை படாதபாடு படுத்தியதோ; அதுபோலத்தான் இந்தியாவில் உருவான ஜாதி எனும் கொடுமையான நோய்க்கிருமி இந்தியாவில் மட்டுமட்டுமல்ல, இங்கிருந்து புலம்பெயர்ந்தோரால் மற்ற நாடுகளுக்கும் பரவி அங்கிருக்கும் மக்களையும் பாதிப்படையச் செய்து வருகிறது.

திராவிடர் கழகம்

கரோனாவுக்கு எப்படி கோவி ஷீல்ட், கோவாக்சின் என்பன மருந்துகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு அந்நோயை குணமாக்கினார்களோ அதே போலத்தான் இந்தியாவில் தோன்றிய ஜாதி எனும் நோய்க்குத் தந்தை பெரியார் எனும் சமூக அறிவியல் அறிஞர் கண்டுபிடித்த சமூகநீதி எனும் மருந்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது.

மருந்து எப்படி உலக நாடுகளுக்கெல்லாம் தேடிச் சென்று அங்குள்ள மக்களுக்கு பயன்படுகிறதோ, அதுபோலவே, மருந்தைத் தேடி வந்து பெற்று மற்றவர்களுக்கு அளிப்பதும் நடந்து வருகிறது என்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளரிடம் குறிப்பிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

கடந்த 5.11.2025,  அன்று காலை 11 மணியளவில், ஜப்பான் நாட்டின் முன்னணி தேசிய செய்தித் தாளான ‘தி அசாஹி ஷிம்புன்’ (‘The Asahi Shimbun’) ஏட்டின், தெற்கு ஆசிய முதன்மை செய்தித் தொடர்பாளரான அகிகோ சுசூகி (Akiko Suzuki) சென்னை பெரியார் திடலுக்கு வந்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சுமார் ஒரு மணி நேரமாக நேர்காணல் செய்தார். உடன் அச் செய்தித்தாளின் டில்லி செய்தியாளர் அவினாஷ் அகர்வால் இருந்தார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் பொறுப்பாளராக இருக்கும் அன்பு.தனசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தியாவில் ஜாதி எப்பொழுது ஒழியும்?

அந்த நேர்காணலில் இந்தியாவில் ஜாதி எப்படி இயங்குகிறது? அதனால் மக்களின் சுயமரியாதை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது? தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் அந்தப் பிரச்சினைகளை எப்படி சரி செய்திருக்கிறது? இன்னமும் முழுமையான தீர்வுக்காக திராவிடர் இயக்கம் சமூக அளவிலும், அரசியல் களத்திலும் எப்படியெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறது? திராவிடர் இயக்கம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் கேட்கிறது? ஜாதிவாரிக் கணக்கெடுப்பு – ஜாதி ஒழிப்புக்கு எவ்வகையில் பயன்படும்? இந்தியாவில் ஜாதி எப்போது ஜாதி ஒழியும்? போன்ற ஆழமான கேள்விகளுக்கு, உரிய பதில்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார்.

ஜப்பான் மொழியில் வெளிவந்த
தந்தை பெரியார்பற்றிய நூல்கள்!

முன்னதாகப் பெரியார் பற்றி ஜப்பான் மொழியில் வெளிவந்திருக்கும் இரண்டு புத்தகங்களையும் கழகத் தலைவர் ‘தி அசாஹி ஷிம்புன்’ தெற்கு ஆசிய முதன்மை செய்தித் தொடர்பாளரான அகிகோ சுசூகி அவர்களுக்குக் கொடுத்தார். அவர், “ஓ… ஜப்பானிய மொழியில் பெரியாரா?’’ (Ooo… Periyar in jappan language?!) என்று வியந்து அந்தப் புத்தகங்களைப் பார்வையிட்டார். ஜப்பான் மொழியில் மட்டுமல்ல; ஜப்பான் நாட்டிலும் பெரியார் வேலை செய்கிறார் என்பதைச் சொல்லி, “ஜப்பானில் பெரியார்” புத்தகத்தையும் அவருக்குப் பரிசளித்து, ஜப்பானில் கடந்த ஆண்டும், பல ஆண்டுகளுக்கு முன்பும் தான் பயணித்தபோது நடந்த நிகழ்வுகளையும் எடுத்துச் சொன்னார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

நேர்காணல் முடிந்ததும் கழகத் தலைவர் ஆசிரியர் அகிகோ சுசூகி, அவினாஷ் ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். இருவரும் கழகத் தலைவருடன் தனித்தனியாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இறுதியில் ஜப்பான் நாட்டின் வழக்கப்படி கழகத் தலைவருக்கும் உடனிருந்த மற்றவர்களுக்கும் மரியாதை செலுத்தி, விடைபெற்றுச் சென்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர், சிங்கப்பூருக்குச் செல்வதற்கான பரபரப்பான சூழலிலும், 5 நிமிடங்கள் – இரு கேள்விகள் என்று தொடங்கிய நேர்காணல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகச் சென்றது.

‘‘பெரியார் உலக மயம்’’ – வெறும் சொல் அல்ல!

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “பெரியார் உலக மயம்! உலகம் பெரியார் மயம்!” என்ற சொற்றொடரை  அடிக்கடிப் பயன்படுத்தி வருவது நமக்குத் தெரியும். ‘அது வெறும் சொல் அன்று; செயல்!’ என்பதற்கு ஜப்பானின் முன்னணி தேசிய நாளிதழ் ‘தி அசாஹி ஷிம்புன்’ நேர்காணலும் ஒரு சாட்சி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *