போபால், நவ.8 ம.பி.யில் காவல் பயிற்சி காவலர்களுக்கு, ராம் சரிதமானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடுதல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்தரவிட்டுள்ளார்.
ம.பி.யில் காவல்துறை காவலர் பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட சுமார் 4,000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ம.பி.யின் 8 பயிற்சிக் கல்லூரிகளில் 9 மாதங்களுக்கான இந்தப் பயிற்சியை கூடுதல் டிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், ‘‘கடவுள் ராமரின் நற்பண்புகள் மற்றும் அவரது 14 ஆண்டு கால வனவாசத்தை விவ ரிக்கும் ராம்சரிதமானஸை பயிற்சி காவலர்கள் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். இது ஒழுக்க உணர்வை ஏற்படுத்தும்’’ என்றார்.
பகவத் கீதை வகுப்பு
இந்நிலையில் பயிற்சி காவலர் களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த தற்போது அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ம.பி.யின் 8 காவலர் பயிற்சி கல்லூரிகளின் கண்காணிப்பாளர்களுக்கு அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அனைத்து பயிற்சி மய்யங்களிலும் பகவத் கீதை பாராயண அமர்வு நடத்த வேண்டும். பகவான் கிருஷ்ணரின் தற்போதைய புனித மாதத்தில் (அகஹன் கிருஷ்ணா) முடிந்தால் பகவத் கீதையின் ஓர் அத்தியாயமாவது படிக்க வேண்டும். தினசரி தியானப் பயிற்சிக்கு முன் இந்த அமர்வை நடத்தலாம்.
பகவத் கீதை நமது நித்திய வேதம். இதை தொடர்ந்து படிப்பது, நம் பயிற்சியாளர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ நிச்சயம் வழி காட்டும். மேலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
கூடுதல் டிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங், 1994-ம் ஆண்டு பேட்ச் அய்பிஎஸ் அதிகாரி ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் குவாலியர் சரக காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவர் இதேபோன்ற பிரச்சாரத்தை தொடங்கி, உள்ளூர் சிறைக் கைதிகள் மற்றும் பிறருக்கு பகவத் கீதை பிரதிகளை வழங்கினார்.
