மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
ழ்ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் என்று அனைத்து மக்களும் நம்பூதிரி பார்ப்பனர் கொடுமைக்கு ஆளான காலக்கட்டத்தில், அந்த மக்கள் போராடத் துவங்கினர். நம்பூதிரி பார்ப்பனர்கள் சிறுபான்மை மக்கள். நூற்றுக்கு மூன்று சதவீதத்திற்குக் குறைவானவர்கள். அவர்கள் மேலாண்மையை நிலைநாட்ட அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. அதற்கு அவர்களுக்குக் கை கொடுத்தவர்கள் “சூத்திர” நாயர்கள். நாயர்கள், நம்பூதிரி பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, கீழ் ஜாதி சூத்திரர்கள்தான். அவர்களுக்குப் பார்ப்பனர்கள் சில சலுகைகள் கொடுத்து சமூக, பொருளாதார அளவில் உயர்வு கொடுத்து, தங்கள் சொல்படி கேட்கும் அடிமைகளாகவே மாற்றி விட்டனர். கடவுள், புராணங்கள், குலவழக்கம், ஆசாரம், என்றெல்லாம் கூறி ஜாதியக் கட்டுப்பாடுகளை மக்கள் மீது திணித்தனர். பல நூற்றாண்டுகளாக இவற்றை நம்பிய மக்கள் இந்தக் கொடுமைகளை அனுபவித்தனர். மன்னர்களும் இவற்றை நம்பி, நம்பூதிரிகளின் கைப்பாவையாக மாறி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டுகொள்ளாமலே இருந்தனர். காலம்காலமாக கொடுமைகளை அனுபவித்த மக்கள் மெதுவாக விழிப்படையத் தொடங்கினர்.
அதன் விளைவாக ஆங்காங்கு கலவரங்கள் தொடங்கின. அவற்றை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே அடக்கி விடவேண்டும் என்று நம்பூதிரி – நாயர் கூட்டணி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. சிறு, சிறு சலசலப்பாகத் தொடங்கிய கைகலப்பு, பெரும் கலவரமாக மாறி, இந்தக் கலவரங்கள் காட்டுத் தீ போல் நாடு முழுவலும் பரவியது. கிறிஸ்துவ மிஷனரிகள் திருவாங்கூர் நாட்டில் பரவலாக விரிவடைந்த காலம் அது. திருவாங்கூர் “மெட்ராஸ் பிரசிடென்சி”யில் அடங்கியிருந்த ஒரு சிறு நாடு. மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் ஜெனரலுக்குக் கட்டுப்பட்டு வரி செலுத்தும் நாடு. மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரதிநிதி, திருவாங்கூரின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு நாட்டு நடப்புகளை கண்காணித்து, கவர்னர் ஜெனரலுக்குத் தகவல் அனுப்புவது வழமை. மக்களின் நலன் கருதி கவர்னர் ஜெனரல் தன் பிரதிநிதி மூலம் மன்னருக்கு ஆலோசனைகள் வழங்குவது வழக்கமான நடைமுறை, கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் முதலிலும், பிறகு விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சியில் “மெட்ராஸ் பிரசிடென்சி”யின் கவர்னர் ஜெனரல்கள் பணியாற்றினர். பல நேரங்களில் திருவாங்கூர் நாட்டில் நடந்த மனிதக் கொடுமைகளுக்கு ஆங்கிலேய நிர்வாகம் தலையிட்டு, அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உரிமைகளைப் பெற உதவியது.
ஸநாதனத்திலும், நம்பூதிரி பார்ப்பனர்களிலும் ஊறி இருந்த திருவாங்கூர் நிர்வாகம் அவ்வளவு எளிதில் ஆங்கிலேயர்களின் ஆலோசனைகளை ஏற்கவில்லை. அந்தக் காலக் கட்டங்களின் ஆலோசனைகளை மிகவும் அழுத்தமாகவும், பல நேரங்களில் மிரட்டியும் ஆங்கிலேய அரசு மக்களுக்கு நீதி வழங்க வேண்டி வந்தது. அப்படிப்பட்ட தலையீடுகளால்தான் அந்த நாட்டில் நிலவிய கொத்தடிமை முறை ஒழியக் காரணமாயிருந்தது. ஆமைகளாய், ஊமைகளாய் மனிதர்கள் என்பதையே மறந்து, மாக்களாய் வாழ்ந்த மக்களின் உரிமைகளை அவர்களுக்கு உணர்த்தி, அவர்களை விழிப்படையச் செய்து, விடுதலைக்கு வழிவகுத்தது ஆங்கிலேய அரசு! அதைப் போன்ற அடுத்த பெரும் போராட்டம் தோள் சீலைப் போராட்டம். பெண்கள் மானத்தைக் காக்கவென்று, உலகத்திலேயே நடந்த போராட்டம் இதுவாகத்தான் இருக்கும். 37 ஆண்டுகள் தங்கள் மார்புகளை மறைக்க பெண்களோடு, ஆண்களும் சேர்ந்து நடத்திய நீண்ட போராட்டம் இது. இதிலும் மெட்ராஸ் பிரசிடென்சியின் மிரட்டலுக்குப் பின்தான் திருவாங்கூர் அரசு பணிந்தது. நாகரிக உலகில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத கேவலமான போராட்டம் இந்த தோள் சீலைப் போராட்டம்.
திருவாங்கூர் நாட்டிற்கு, வடக்கே இருந்த, அடுத்த சமஸ்தானம் மைசூர். மாவீரன் திப்பு சுல்தான் ஆண்ட நாடு.
திருவாங்கூருக்கு வடக்கே, கொச்சி சமஸ்தானத்தின் மீது படையெடுத்து சில பகுதிகளை திப்பு சுல்தான் வென்றார். அந்த நாட்டிலும் பெண்கள் மேலாடை இன்றி இருப்பது திப்பு சுல்தானுக்கு பெரும் மன வருத்தத்தை உண்டாக்கியது. தன் பகுதிகளில் பெண்கள் கட்டாயம் மார்புகளை மறைக்கும் குப்பாயம் அணிய வேண்டும் என்று திப்பு சுல்தான் உத்தரவிட்டார். உடனே திப்பு சுல்தான் பெண்களை “மதமாற்றம்” செய்கிறார் என்று நம்பூதிரி பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து திப்பு சுல்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு நடக்கும் பாலியல் அக்கிரமங்களை கண்டித்து திப்பு சுல்தான் ஒரு கட்டளை பிறப்பித்தார் . உங்களுக்கிடையே ஒரு பெண், பத்து ஆண்களுடன் உறவு கொள்வதும், உங்கள் தாய், சகோதரிகள் ஆகியோரை இவ்விதம் நடப்பதற்குக் கட்டாயப்படுத்துவதும், அதை “பூர்வ ஆசாரம்” என்று கூறுவதாலும்; ஆண், பெண் விஷயத்தில் நிலத்தில் மேயும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களாகின்றீர்கள். இவ்விதமான பாவகரமான “துர் ஆசாரங்களை” விட்டொழித்து, சாதாரண மக்களைப் போல வாழ வேண்டும் என நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளை இடுகிறோம்” என்று அந்தக் கட்டளையின் வாசகம். இதன் மூலம் நம்பூதிரி பார்ப்பனர்கள் மற்ற சமூகங்கள் மீது (குறிப்பாக நாயர் சமூகம் மீது) செலுத்திய ஆதிக்கத்தைத் தகர்க்க முயன்றார். இது நம்பூதிரிகளுக்குக் கடுமையான எரிச்சிலை ஏற்படுத்தியது. கேரளப் பெண்களின் மானத்தைக் காக்க வேண்டி, திப்பு சுல்தான், மலபார் ஆங்கிலேய கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். “மலபார் பகுதியில் கீழ்ஜாதிப் பெண்கள் மேலாடையின்றி இருப்பதைப் பார்த்து நான் மிகவும் மனம் வருந்தினேன். அது நாகரிக பண்பாட்டிற்கு எதிரானதாகவும், வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. கைவிடப்படக் கூடாத சம்பிரதாயம் எனில் அவர்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, அதை மாற்றும் முயற்சிகளில், மதத் தத்துவங்களுக்குக் கேடு நேராமல், சமாதான முறையில் உபதேசம் செய்து, மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று எழுதினார். பெண்களை இழிவாக நடத்துவதையும், ஜாதியின் பேரால் அவர்கள் இழிவுபடுத்தப்படுவதையும் திப்பு சுல்தான் கடுமையாகக் கண்டித்தார். அவர் ஆட்சிக்கு வந்த கேரளப் பகுதிகளில் பெண்கள் கட்டாயம் மேலாடை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஒரே பெண், பல ஆண்களை மணக்கும் முறைக்கும் தடை விதித்தார். இந்தப் பழக்கம் குடகுப் பகுதிகளிலும் இருந்ததால் அங்கும் இந்தத் தடையை விரிவாக்கினார்.
கோயில்களில் இருந்த தேவதாசி முறைக்கும் தடை விதித்தார். இந்தியாவில் பல சமஸ்தானங்கள் இருந்தாலும் பெண்களின் மானத்தைக் காக்க, முற்போக்கான சட்டங்களை இயற்றியவர் மைசூர் சமஸ்தானத்து மன்னர் திப்பு சுல்தான்தான். கொதித்த திருவாங்கூர் நம்பூதிரி பார்ப்பனர்கள், திப்பு சுல்தான் அமைச்சர் பூர்ணய்யாவைத் தூண்டி விட்டனர். அந்தப் பார்ப்பானும் சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த மன்னர் திப்பு சுல்தான். ஆங்கிலேய எதிர்ப்புக்கு பிரெஞ்சுக்காரர்கள் திப்பு சுல்தானுக்கு உதவினர். அது ஆங்கிலேயரை மேலும் கடுப்பேற்றியது. அதனால் மைசூர் மேல் படையெடுத்தனர். அப்போது திப்பு சுல்தானின் தந்தை அய்தர் அலி ஆட்சி. திப்பு சுல்தான் தீவிரத் தலைமையில் நடந்த இந்தப் போரில் ஆங்கிலேயர் தோல்வி அடைந்தனர். மீண்டும் சிறிது காலத்தில் மீண்டும் போர். அதிலும் தப்பு சுல்தானே வென்றார். மூன்றாவதாக நடந்த ஆங்கிலோ – மைசூர் போரில் ஆங்கிலேயர்கள், அய்தரபாத் நிஜாம் படையின் துணையுடன் போரிட்டனர். அந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியுற்றார். ஆனால், ஆங்கிலேயருடன் சிறீரங்கப்பட்டிணத்தில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். மைசூர் நாட்டின் சில பகுதிகளை இந்த ஒப்பந்தத்தால் அவர் இழக்க வேண்டி வந்தது. மீண்டும் போர். 4ஆவது ஆங்கிலோ – மைசூர் போர்! சமயம் எப்போது வரும் என்று காத்திருந்த பார்ப்பனர்களுக்கு நல்வாய்ப்பாக இந்தப் போர் அமைந்தது. திப்பு சுல்தான் அமைச்சர் பார்ப்பனன் பூர்ணய்யா துரோகத்தால் ஆங்கிலேய படைகள் மைசூருக்குள் புகுந்தனர். இந்தப் போரில் பூர்ணய்யா என்ற பார்ப்பனன் துரோகத்தால் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். நம்பூதிரி பார்ப்பனர்கள் வெற்றிக் களிப்பில் மூழ்கினர்.
இப்படி தோள்சீலைப் போடுவதை யார், யார் ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் நம்பூதிரி –நாயர் கூட்டணியின் எதிரிகளாக ஆகினர். அவர்களால் பலம்வாய்ந்த எதிரிகளான ஆங்கிலேயர்களைத்தான் வெல்ல முடியவில்லை. ஆனாலும் தங்களால் இயன்ற அளவு தடை போட்டுக் கொண்டே வந்தனர். திருவாங்கூர் திவான்கள் அனைவருமே பார்ப்பனர்கள். தோள் சீலைப் போராட்டம் நடந்த காலக் கட்டங்களில் பெரும்பாலான ஆண்டுகள் திவானாக இருந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த மாதவராவ் என்ற மராட்டியப் பார்ப்பனர். தோள் சீலைப் போராட்டம் தீவிரமாக இருந்தபொழுது சில மன்னர்கள் ஆட்சியில் இருந்தனர்.
திருவாங்கூர் நாட்டை 1811ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் இராமவர்மா ஆட்சியில் அமர வைக்கப்பட்டார். அவர் குழந்தையாக இருந்ததால் அவருடைய அம்மா கவுரி லட்சுமி பாய் ஆட்சியாளராக அவர் 1815ஆம் ஆண்டு மறையும் வரை ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பின் அவர் தங்கை கவுரி பார்வதி பாய் ஆட்சிக்கு வந்தார். இவர் 1815 முதல் 1829 வரை திருவாங்கூர் நாட்டை ஆண்டார். இவர்தான் பெண்ணாகஇருந்தாலும் கீழ்ஜாதிப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற சட்டத்தை கடுமையாக்கியவர். அதை மீற முயன்ற பெண்களை கடுமையாகத் தண்டித்தவர். அவர் காலத்தில் திவானாகவும், ஆங்கில அரசின் பிரதிநிதியாக இருந்த கர்னல் தாமஸ் மன்றோவின் கடுமையான நடவடிக்கைகளால் வேறு வழியின்றி இந்த அரசி தன் கடுமையைக் குறைத்துக் கொண்டார். ஆங்கிலேய அரசு தோள் சீலைப் போராட்டத்தை ஒரு கடுமையான சமூக விழிப்பாட்டின் அறிகுறி என்று உணர்ந்ததால் இந்தக் காட்டுமிராண்டுத்தனத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டியது.
பார்ப்பன திவான்களின் தடங்கல்களையும், அரசை ஆண்டவர்களின் எதிர்ப்பையும், நம்பூதிரி – நாயர் கூட்டணி கொடுத்தத் தொல்லைகளையும் தாண்டி பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் 26.7.1859 ஆண்டு கீழ்ஜாதிப் பெண்களும் மார்பை மறைத்து மேலாடை அணியலாம் என்ற உரிமையைப் பெற்றனர். இந்த உத்தரவைப் பெற அவர்கள் 37 ஆண்டுகள் போராட வேண்டி இருந்ததுதான் இதில் பெரிய சோகம்.
(தொடருவேன்…)
