அமெரிக்காவின் நியூயார்க், சின்சினாட்டி நகர மேயர் தேர்தல்களிலும், வர்ஜீனியா துணை ஆளுநர் தேர்தலிலும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருப்பது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அடாவடித்தனமான அரசியல் நடைமுறைகளுக்கு அமெரிக்கப் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் முதல் மிகப் பெரிய அரசியல் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் குடியேற்ற அடாவடி:
கைவிலங்கிடப்பட்ட இந்தியர்கள்
டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவி ஏற்றது முதல், அவரது ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கான கொள்கையின் ஒரு பகுதியாக, குடியேற்றவாசிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக, வறுமை வேலைவாய்ப்பின்மை மற்றும் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காசென்று தங்கியுள்ள குடியேற்றவாசிகளை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்.

சட்டவிரோதக் குடியேறிகள் “வேற்று கிரகவாசிகள்” என்று கூறி அவர்களை நாடு கடத்தப் போவதாக டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிவித்தார். அவர் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, மெக்சிகோ எல்லையில் அவசரகாலத்தை அறிவித்து ராணுவ வீரர்களைக் குவித்தது மட்டுமின்றி, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் இந்தியர்களும் இலக்காயினர். சட்டவிரோதமாக தங்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட நிலையில், ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தப் படங்கள் மற்றும் செய்திகள், டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றவாசிகள் மீதான இரக்கமற்ற அணுகுமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டின.
சட்டப்பூர்வமான குடியேற்றவாசிகளையும் பாதிக்கும் வகையில் H1B விசா கட்டணத்தை உயர்த்துதல், H4 விசா வைத்திருப்பவர்களின் (H1B விசாதாரர்களின் துணைவர்கள்) தானியங்கி வேலை அனுமதியை (EAD) நீக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டது. இது, அமெரிக்காவில் வாழும் இந்திய அய்டி ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியது.
டிரம்ப்பின் இந்த கடுமையான நடவடிக்கைகள், இந்திய குடியேற்ற சமூகத்தினருக்கு எதிரான ஒரு விரோத மனப்பான்மையை உருவாக்கின.

டிரம்ப் நிர்வாகம் இந்தியர்களைக் கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதே காலகட்டத்தில், அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் மற்றும் மாகாணங்களில் இந்திய வம்சாவளி இஸ்லாமியர்கள் முக்கிய அரசியல் பதவிகளை வென்றிருப்பது, ஒரு வலிமையான அரசியல் பதிலடியைக் குறிக்கிறது.
நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி நியூயார்க் மேயர் பதவியை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி மேயர், முதல் தெற்காசியர், முதல் முஸ்லிம், மற்றும் இந்த நூற்றாண்டின் மிக இளைய மேயர் சின்சினாட்டி நகர மேயர் இந்தியவம்சாவளி அஃப்தாப் புரேவல் (43) இரண்டாவது முறையாகத் தொடர்ச்சியாக வெற்றி.
வர்ஜீனியா துணை ஆளுநர் கஜாலா ஹாஷ்மி (61) வர்ஜீனியா துணை ஆளுநர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி, அதிலும் ஓர் இஸ்லாமியர்.
இந்த வெற்றிகள் வெறுமனே தனிப்பட்ட சாதனைகள் அல்ல. இவை, குடியேற்றவாசிகள் மற்றும் சிறுபான்மையினரை ஒதுக்கிவைக்க நினைக்கும் டிரம்ப்பின் அரசியலை மக்கள் நிராகரித்ததன் அடையாளமாகக் கருதப்படுகின்றன.
ஸோரான் மம்தானியின்
முற்போக்கு அரசியல் பயணம்
நியூயார்க் மேயராகப் பதவியேற்க உள்ள ஸோரான் மம்தானியின் (Zohran Mamdani) அரசியல் பயணம், டிரம்ப்பின் தேசியவாத அரசியலுக்கு எதிரான ஒரு முற்போக்கு சித்தாந்தத்தின் வெற்றிப் பிரகடனமாகத் திகழ்கிறது.
பின்னணி மற்றும் தொடக்கம்: இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் அறிஞர் மஹ்மூத் மம்தானிக்கு உகாண்டாவில் பிறந்த ஸோரான் மம்தானி, குடியுரிமைக்கு முற்பட்ட தன் வாழ்நாளில், சட்டத்தைப் படித்த பிறகு, குயின்ஸ் பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடியேற்றவாசிகளுக்குக் குடியேற்றத் தடுப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இதுவே அவரை அரசியலில் ஈடுபடத் தூண்டியது.
கட்டணமில்லா பேருந்து சேவை, குழந்தைகளுக்கு உணவுத்திட்டம் அரசே நடத்தும் அங்காடிகள் சமூக நீதிக் குரல்:
2020ஆம் ஆண்டு நியூயார்க் மாநில சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, அவர் முற்போக்கு ஜனநாயகவாதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன உரிமைகளுக்கு வலுவான ஆதரவளித்தல் மற்றும் பணக்காரர்களுக்கு வரி விதித்தல் போன்ற சமூக நீதிக் கொள்கைகளுக்காகப் போராடினார்.
தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தில், தொழிலாளர் பிரச்சினைகள், இலவச குழந்தை பராமரிப்பு, வாடகை நிறுத்தம், இலவச பேருந்து சேவைகள் மற்றும் அரசு நடத்தும் மளிகைக் கடைகள் போன்ற முற்போக்குத் திட்டங்களுக்கு அவர் முன்னுரிமை அளித்தார்.
2009ஆம் ஆண்டே ஹிந்திப் படங்களில்
கேலிக் கிண்டலுக்கு ஆளான நியூயார்க் மேயர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நியூயார்க் நகர மேயர் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தில் இனம் என்ற பகுதியில் தன்னை பழங்குடி இந்திய ஆப்பிரிக்க இனம் என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது தந்தை ஒடுக்கப்பட்ட சமுகத்தில் இருந்து வந்தவர் என்பதால் பழங்குடி என்றும், பெற்றோர் இந்தியர் என்பதால் இந்தியர் என்றும், தான் பிறந்த நாடு உகாண்டா என்பதால் ஆப்பிரிக்க என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க கல்லூரி விண்ணப்பங்களில் ஆப்ரிக்கர், ஆசியர், அமெரிக்கர், அமெரிக்கப் பழங்குடி, அய்ரோப்பியர், லத்தீன் அமெரிக்கர், ஆதரவற்றவர் என்ற பிரிவின் கீழ் அதற்கான தகுதி வாய்ந்தவர்கள் அதை நிரப்புவார்கள்.
ஆனால் முதல்முதலாக மம்தானி தன்னை பழங்குடி, இந்தியர், ஆப்பிரிக்கர் என்று குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
நேர்காணலில் நான் உகாண்டாவில் பிறந்தேன். “அய் வாஸ் பார்ன் இன் உகாண்டா, மை பேரன்ஸ் பிரம் இந்தியா” என்று கூறினார்.
அவரது விண்ணப்பம் பொதுவெளியில் பகிரப்பட்டு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் இவரது இந்த பதிவை வைத்து அமிர்கான் நடித்த ‘3 இடியட்’ என்ற படத்தில், “அய் வாஸ் பார்ன் இன் உகாண்டா, ஸ்டடி இன் பாண்டிச்சேரி’ என்று ஒரு வசனம் பேசுவதுபோல் இருக்கும்.
2025ஆம் ஆண்டு அவரது மேயர் பிரச்சாரத்தின் போதும் அவரது பல்கலைக்கழக விண்ணப்பம் மீண்டும் சமூகவலைதளத்தில் வெளியானது.
சமூக மாற்றத்திற்கான ஆணை: அவர் பெற்ற அமோக வெற்றி (20 லட்சம் வாக்குகளில் 10.36 லட்சத்துக்கும் மேல்), நியூயார்க் நகரில் முற்போக்கு அரசியலின் மறுவரவாகக் கருதப்படுகிறது. இது, டிரம்ப்பின் வெறுப்பு அரசியலை சோர்வுற்ற மக்கள், மம்தானி முன்வைத்த உள்ளடக்கிய மற்றும் சமூக நலன் சார்ந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவாகும்.
விமர்சனம் மற்றும் தொகுப்பு
இந்திய வம்சாவளியினரின் இந்த வெற்றிகள் டிரம்ப்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற குறுகிய தேசியவாதக் கொள்கை, அமெரிக்காவின் பலதரப்பட்ட சமுதாயத்தில் நிரந்தரமாக வேரூன்ற முடியாது என்பதைக் காட்டுகிறது. ஒருபுறம், ஒரு அதிபர் இந்தியர்களைக் குற்றவாளிகள் போலக் கருதி நாடு கடத்த உத்தரவிடுகிறார்; மறுபுறம், அதே இந்திய சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உலகின் மிக முக்கியமான நகரங்களையும் மாகாணங்களையும் வழிநடத்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
டிரம்ப் இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியதற்கு, அமெரிக்க வாக்காளர்கள் அவரை அரசியல் ரீதியாகக் கைவிலங்கிட்டுள்ளனர் என்று சொல்லலாம். இந்த தேர்தல் முடிவுகள், டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக்கால நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களின் ஆதரவை இழந்து வருகிறார் என்பதன் தெளிவான சமிக்ஞை ஆகும்.
நியூயார்க் தேர்தல் பரப்புரையின்போது
தமிழில் பேசிய மம்தானி
மம்தானி தனது பரப்புரையை நமது ஊர் தேர்தல் பரப்புரை போன்றே வீட்டுக்கு வீடு சென்று ஆதரவைக் கோரினார். அவருக்கு ஆசிய மொழிகளில் தமிழ், குஜராத்தி, உருது போன்ற மொழிகளில் புலமை பெற்றவர்.
ஒருமுறை ‘நியூயார்க் டைம்ஸ்’ ஸ்கொயர் பகுதியில் தேநீர் விடுதி ஒன்றில் உரையாடும்போது அங்கு தமிழ் வாலிபர்கள் சிலர் இருந்தனர். அப்போது அவர் அவர்களிடம் தமிழில் தற்போதைய அமெரிக்க அரசியல் சூழல் குறித்து கேட்ட காணொலியை கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதேபோல் வட இந்திய இளைஞர்களிடம் உருது மற்றும் குஜராத்தில் உரையாற்றினார்.
ஸ்கோரான் மம்தானி போன்ற இளம் முற்போக்குத் தலைவர்களின் எழுச்சி, அமெரிக்க அரசியலின் எதிர்காலம், குடியேற்றவாசிகள் மற்றும் நிறச் சிறுபான்மையினரை உள்ளடக்கியதாகவும், சமூக நீதி மற்றும் பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
