சென்னை, நவ.7- வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உள்பட 5 இடங்களில் சிறப்பு மய்யங்கள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மாநாடு
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இந்திய கேம் டெவலப்பர்ஸ் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 17-ஆவது இந்திய கேம் டெவலப்பர்ஸ் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று (6.11.2025) நடந்தது.
இந்த மாநாட்டுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் எல்காட் நிறுவனத்துக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அபரிமிதமான வளர்ச்சி
மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் புத்தொழிலை உருவாக்குவதில் அபரிமிதமான வளர்ச் சியை தமிழ்நாடு எட்டி உள்ளது. அனிமேஷன், காமிக்ஸ் போன்ற இணையதளம் விளையாட்டு துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இது தொடர்பான புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கொள்கை இணையதளம் விளையாட்டு தொழிலை எளிமையாக்குவது, திறனை வளர்ப்பது உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு மய்யங்கள்
வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றுக்காக சென்னையில் சிறப்பு மய்யம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும். இதே போன்று கோவை, மதுரை, திருச்சி,சேலம், நெல்லை ஆகிய இடங்களில் மண்டல அளவில் சிறப்பு மய்யங்கள் அமைக்கப்பட உள்ளது. இணைய தளம் விளையாட்டுத்துறையில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப் பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் தகவல் தொழில் நுட்பத் துறை முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், எல்காட் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
