புனே, நவ.7- மகாராட்டிராவில் புனே நகரில் பன்னாட்டு அய்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த அய்டி ஊழியருக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மகள்கள் உள்ளனர்.
2018 ஆம் ஆண்டு, ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அய்டி ஊழியரின் மனைவிக்கு ஒருவர் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நபர் 3 பேர் அடங்கிய Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மிக மோசடி கும்பலிடம் இணையரை அறிமுகப்படுத்தி உள்ளார். சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்றும் அந்த கும்பல் இணையரை நம்பவைத்துள்ளது.
நோய்களைக் குணப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்கள் தொடர்ந்து இணையரிடம் பணம் பெற்று வந்துள்ளனர். பின்னர், பிரிட்டனில் உள்ள இணையரின் வீடு மற்றும் புனே அருகே சொந்தமாக உள்ள விவசாய நிலங்கள் உட்பட குடும்பத்தின் சொத்துக்கள் கேட்டைத் தருவதாக அவர்களை நம்ப வைத்தனர்.
இந்தக் கும்பல் குடும்பத்தினரை இவற்றை விற்க வற்புறுத்தியது. விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை, அது கேட்டைத் தரும் என்று கூறி, புத்திசாலித்தனமாக கும்பல் வசப்படுத்தியுள்ளது.
இதன் பின்னரும் பூஜைகளுக்காகக் கேட்ட பெரும் தொகையைச் செலுத்த உறவினர்களிடமிருந்து அய்டி ஊழியர் கடன் வாங்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14கோடியை அந்த கும்பல் இணையரிடமிருந்து ஏமாற்றி பறித்துள்ளது.
பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைகளின் உடல்நிலை மாறாமல் இருந்ததால், இணையர்களுக்கு சந்தேகம் வந்த நிலையில் தற்போது அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் ஒரு சாமியார் உட்பட அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.
வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்…
தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை, நவ.7 வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால், குடியரசு நாள் விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களில் மூவருக்கும், சீருடை பணியாளர்கள் உள்பட அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை என கூறப்பட்டு உள்ளது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும்.
இப்பதக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2026 குடியரசு நாளன்று வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர், 2025 என்றும் கூறப்பட்டுள்ளது.
