புதுடில்லி, நவ.7 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது. 5.11.2025 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று (6.11.2025) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இடதுசாரி கூட்டணியிலிருந்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய குழு தலைவராக ஏ.அய்.எஸ்.ஏ. வேட்பாளர் அதிதி மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.எஸ்.எப். வேட்பாளர் சுனில் யாதவ் பொதுச் செயலாளர் பதவியையும், ஏ.அய்.எஸ்.ஏ. வேட்பாளர் டேனிஷ் அலி இணைச் செயலாளர் பதவியையும் வென்றார்.
எஸ்.எஃப்.அய். அமைப்பின் வேட்பாளர் கே. கோபிகா பாபு துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப் புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றுள்ளன.
எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப் பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.
