வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

8 Min Read

சுயமரியாதைத் திருமணம் செய்தவர்களுடைய குழந்தைகள் எல்லாம், தாய் – தந்தைக்குப் பிறந்த சட்டப்படிக்கான குழந்தைகள் அல்ல என்று ஓர் அவமானத்தை உண்டாக்கினர்!
அந்த அவமானத்தைத் துடைத்த பெருமை, சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு உண்டு!

வேலூர், நவ.7- ‘விதவைக்கும், விதவனுக்கும்’ நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் சட்டப்படிக்கான குழந்தைகள் அல்ல. சூத்திரர்கள், கீழ்ஜாதிக்காரர்கள் வைப்பாட்டி என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி, சுயமரியாதைத் திருமணம் செய்தவர்களுடைய குழந்தைகள் எல்லாம், தாய் – தந்தைக்குப் பிறந்த சட்டப்படிக்கான குழந்தைகள் அல்ல என்று ஓர் அவமானத்தை உண்டாக்கிய நேரத்தில், அந்த அவமானத்தைத் துடைத்த பெருமை, சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு உண்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா

நினைவுச் சொற்பொழிவு

கடந்த 22.10.2025 அன்று வேலூர், வி.அய்டி பல்கலைக் கழக அண்ணா அரங்கத்தில் நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினை வுச் சொற்பொழிவு முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இவ்வளவு அருமையான விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருப்பது மிக மிகச் சிறப்பான தாகும்.

அய்யா- அண்ணாவைப்பற்றி
நாள் கணக்கில் பேசலாம்…

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோ ரைப்பற்றி எத்தனையோ நாள் கணக்கில் பேசலாம். அதற்காகத்தான் சில புத்தகங்களை இங்கே கொண்டு வந்திருக்கின்றோம்.

அதில் மிக முக்கியமாகச் சொல்லும்போது, ‘‘அய்யா வைப்பற்றி அண்ணா – அண்ணாவைப்பற்றி அய்யா’’ இவ்விரண்டையும் ஞாபகப்படுத்திவிட்டால் போதும்.

அண்ணாவினுடைய ஆட்சிதான் –
திராவிட இயக்க  ஆட்சிதான்!

ஓராண்டு கால ஆட்சி – நமக்கு கெட்ட வாய்ப்பு ஓராண்டு காலம்தான் அண்ணாவினுடைய ஆட்சி. ஆனால், இப்போது நடைபெறுவதும் அண்ணாவினுடைய ஆட்சிதான் – திராவிட இயக்க  ஆட்சிதான்; பெரியாருடைய ஆட்சிதான்.

என்ன சாதனை என்றால், நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம்.

சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தது அதனுடைய முன்னோட்டமான நீதிக்கட்சி என்கிற திராவிட இயக்கம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று ஏன் எதிர்மறையாக இருக்கவேண்டும்; அதற்குப் பதிலாக திராவிட இயக்கம், நாகரிகம், மொழி, தன்மையைப்பற்றி சொல்லவேண்டும் என்று மிக அழகாக இங்கே எடுத்துச் சொன்னார் நம்முடைய வேந்தர் அவர்கள்.

அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது சாதாரண மாற்றம் அல்ல.

அந்தப் பெரிய மாற்றத்திற்குத் துணை புரிந்த வர்கள், தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டவர்கள். இடையில், அவர்களுக்குள் கருத்து மாறுபாடு என்று எல்லோரும் நினைத்தனர்.

‘‘நான் அய்யாவைவிட்டுப் பிரிந்ததில்லை; என்னை விட்டு அய்யா பிரிந்ததில்லை’’ -மனதால்!

ஆனால், அண்ணா சொன்னார், ‘‘18 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்திருக்கிறோம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், நான் அய்யாவைவிட்டுப் பிரிந்ததில்லை; என்னை விட்டு அய்யா பிரிந்ததில்லை – மனதால்’’ என்று.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், எல்லோரும் ஆளுநரைச் சந்திப்பார்கள்.

ஆனால், அண்ணா அவர்கள், நாவலர், கலைஞர்,  ஆகியோர் திருச்சிக்குப் போனவுடன் அன்பில் தர்ம லிங்கம் அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சி பெரியார் மாளிகையில் இருந்த தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, ‘‘இந்தக் வெற்றிக் காணிக்கையை உங்களிடம் சமர்ப்பிப்பதற்காக வந்திருக்கின்றோம்’’ என்று அய்யாவிடம் சொன்னார் அண்ணா!

‘விடுதலை’யில் தந்தை பெரியார்
எழுதிய அறிக்கை!

அதைக் கேட்ட அய்யா அவர்கள், அடுத்த நாளே ‘விடுதலை’யில் ஓர் அறிக்கை எழுதினார்.

அந்த அறிக்கையில், ‘‘அண்ணா அவர்கள் வெற்றி பெற்ற வீரனாக வந்தார். நான் ஒரு மணப்பெண்ணைப் போல தலைகுனிந்து அவரை வரவேற்றேன்’’ என்றார்.

இதுபோன்று யாராவது சொல்வார்களா?

அண்ணாவிற்கும், அய்யாவிற்கும் வயது இடை வெளி என்பது 30 ஆண்டுகள்.

‘‘எங்களை வழிநடத்துங்கள்’’ என்றார் அண்ணா!

அண்ணா அவர்கள், அய்யாவைச் சந்தித்து, ‘‘எங்களை வழிநடத்துங்கள்’’ என்றார். அதுதான் அப்போது அவர்  சொன்ன முதல் வார்த்தை,

பிறகு அண்ணா அவர்கள் முதலமைச்சராக சட்டமன்றத்தில் இருக்கும்போது, தாம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த முனுஆதி அவர்கள் எழுந்து, ‘‘தியாகிகளுக்கு நீங்கள் மானியம் கொடுக்கிறீர்கள். அய்யா தந்தை பெரியார்  அவர்களுக்கு இந்த அரசு என்ன கொடுக்கப் போகிறது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

‘‘இந்த அரசே பெரியாருக்குக் காணிக்கை!’’

முதலமைச்சர் அண்ணா அவர்கள் எழுந்து, ‘‘இந்த அரசே பெரியாருக்குக் காணிக்கை’’ என்று சொன்னார்.

இத்தகவலை, இன்றைய இளைய தலைமுறை, வரலாற்றுத் தலைமுறை இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

காரணம், இளைய தலைமுறையினர் மின்மினி களைக் கண்டு ஏமாறக்கூடாது. உண்மைகளை உணரவேண்டும்.

அண்ணா சொன்னது வெறும் வார்த்தை அல்ல. எதை எதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கொள்கையாகச் சொன்னார்களோ, அதையெல்லாம் தன்னுடைய ஓராண்டு கால ஆட்சியிலேயே, எவ்வளவோ உடல் உபாதைகள் அவருக்கு இருந்தாலும்கூட, அதனையெல்லாம் நிறைவேற்றிச் சாதித்துக் காட்டினார்.

‘‘மறக்க முடியாத முப்பெரும் சாதனைகள்!’’

இதோ இந்தப் புத்தகம். ‘‘மறக்க முடியாத முப்பெரும் சாதனைகள்’’ என்ற தலைப்பில், அவற்றையெல்லாம் விளக்கி, அதை வரலாற்று ஆவணமாக்கி இருக்கிறோம்.

மூன்று பெரும் சாதனைகள்!

அண்ணாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடல் நலிவோடு இருக்கிறார்.

அதுவரையில் சென்னை ராஜ்ஜியம் என்ற பெயர்தான் இருந்தது. அதை மாற்ற வேண்டுமென்று தந்தை பெரியார் அவர்கள்தான், முதன்முதலில் அறிக்கை விட்டார்.

தமிழ்நாடு என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்?

சென்னை ராஜ்ஜியம் என்று இருந்தால், நமக்கு அவமானம், தலைகுனிவு. அதற்குப் பதிலாக  தமிழ்நாடு என்று மாற்றவேண்டும் என்று சொன்னார். தமிழ்நாடு என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்று கேட்டார்.

சிலர், தமிழ்நாடு என்று சொன்னால், அது பிரி வினையாகாதா? என்று கேட்டார்கள்.

அப்படியென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, நீங்கள் பிரி வினையை உண்டாக்குகிறீர்களா? என்று தந்தை பெரியார் கேட்டார்.

நாடாளுமன்றத்தில் அண்ணாவின் குரல்!

அண்ணா அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்போது, இன்றைக்கு எப்படி நம்முடைய திராவிட இயக்கப் போர் வாள் வைகோ அவர்கள், மிகப்பெரிய அளவிற்கு நம்முடைய உரிமைகளுக்காக கர்ஜனை செய்கிறாரோ, அந்த இடத்தில், பல சந்தர்ப்பங்களில் அண்ணா அவர்கள் இதுகுறித்துப் பேசினார்.

‘‘ஏன், நீங்கள் எங்கள் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கூடாது’’ என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அதை மறுத்துவிட்டார்கள்.

ஆனால், அதற்குப் பிறகு அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்தவுடன், அவருடைய முதல் அறிவிப்பு சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டம் வடிவம் கொடுத்ததுதான்.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட வடிவம் பெற்றபோது கவனமாக ஒன்றைச் சொன்னார். ‘‘இப்போது நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் மட்டுமல்ல, இதற்கு முன்பு நடந்த சுயமரியாதைத் திருமணங்கள் – இனிமேல் நடக்கவிருக்கும் சுயமரி யாதைத் திருமணங்கள் அனைத்தும் செல்லும்’’ என்று சொன்னார்.

மகளிர் திரண்டுள்ள
இந்தக் கூட்டமே சான்று!

இதை சாதாரணமாக நினைப்பார்கள். இங்கே ஏராளமான தாய்மார்கள் இருக்கிறீர்கள்.  மகளிருக்கு 33 சதவிகிதம் நாடாளுமன்றத்தில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், இங்கே மகளிருக்கு 33 சதவிகி தத்திற்கு மேலேயும் அமல்படுத்தியிருக்கிறார்கள் இந்தப் பல்கலைக் கழகத்தில், மகளிர் திரண்டுள்ள இந்தக் கூட்டமே அதற்குச் சான்றாகும்.

அன்றைக்கு என்ன நடந்தது என்று சொன்னால் நண்பர்களே,  சுயமரியாதைத் திருமணம்பற்றி நீதி மன்றத்தில் வழக்கு நடந்து, தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்புக்கும், இந்த மாவட்டத்திற்கும் சம்பந்தம் உண்டு. இந்தத் தகவல் நிறைய பேருக்குத் தெரியாது.

இந்த மாவட்டத்தில் இருந்த ஒரு கைம்பெண்தான், அந்தத் தீர்ப்பினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு வழக்காடி.

பக்கத்தில் உள்ள திருவண்ணாமலையில்தான் – நான் ஜாதியைச் சொல்லுகிறேன் என்று நீங்கள் எல்லோரும் நினைக்கவேண்டாம்; அடையாளத்திற்காக, உங்களுக்கெல்லாம் புரிவதற்காகச் சொல்கிறேன்.

அன்றைய காலகட்டத்தில், ரெட்டியார் சமுதாயத்தில்,  8 வயதிலேயே திருமணம் செய்துவிடுவார்கள். 9 வயதில் அந்த அம்மையாருடைய கணவர் இறந்துவிடுகிறார். கைம்பெண் கோலம் பூண்டால், வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துவிடுவார்கள். வெளியே வரக்கூடாது என்ற சூழ்நிலை.

அந்த அம்மையார், ‘குடிஅரசு’ பத்திரிகையை படிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல், ஒருவரிடம் காசு கொடுத்தனுப்பி, ‘குடிஅரசு’ இதழை வாங்கி வரச் சொல்லி, படிக்கத் தொடங்கியிருக்கிறார். இப்படி ஓர் இயக்கம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு, ஒரு கடிதத்தை, பெரியாருக்கு எழுதுகிறார். ‘‘நான், என்றைக்காவது ஒரு நாள் உங்களைச் சந்திக்க வருகிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.

சுயமரியாதைத் திருமணங்களை,
தங்கள் சொந்த செலவிலேயே
நடத்தி வைத்தார்கள்!

அன்றைய காலகட்டத்தில், அன்னை நாகம்மையார், பெரியார் ஆகியோர் சுயமரியாதைத் திருமணங்களை, தங்கள் சொந்த செலவிலேயே நடத்தி வைத்தவர்கள்.

அதேபோன்று, காரைக்குடியில், கோட்டையூர் நாட்டுக்கோட்டைக் நகரத்தார் சமுதாயத்தில் மனை வியை இழந்தவர்.

அந்த கைம்பெண்ணுக்கும், மனைவியை இழந்தவருக்கும் 1934 இல் சுயமரியாதைத் திரு மணத்தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்தார்.

அந்த கைம்பெண்ணின் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது.

அந்த இணையருக்கு, இரண்டு மகன், இரண்டு மகள்.  நான்கு பிள்ளைகள், முதல் மகனுக்குத் திருமணம் நடந்து முடிந்த பிறகு, நீதிமன்றத் தீர்ப்பு வருகிறது.

அவமானத்தைத் துடைத்த பெருமை, சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு உண்டு!

அத்தீர்ப்பில், ‘விதவைக்கும், விதவனுக்கும்’ நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் சட்டப்படிக்கான குழந்தைகள் அல்ல. சூத்திரர்கள், கீழ்ஜாதிக்காரர்கள் வைப்பாட்டி என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி, சுயமரியாதைத் திருமணம் செய்தவர்களுடைய குழந்தைகள் எல்லாம், தாய் – தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் அல்ல; சட்டப்படிக்கான குழந்தைகள் அல்ல என்று ஓர் அவமானத்தை உண்டாக்கிய நேரத்தில், அந்த அவமானத்தைத் துடைத்த பெருமை, சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு உண்டு.

தாய்மார்கள் நன்றாக கவனிக்கவேண்டும்; தோழர்கள் அனைவரும் கவனிக்கவேண்டும்.

பெரியார் என்ன செய்தார்? அண்ணா என்ன செய்தார்? திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேட்கின்றவர்களும் நன்றாகக் கவனிக்கவேண்டும்.

‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.

அழகு என்பது ஒப்பனையில் இல்லை. மானமும், அறிவும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *