சென்னை, நவ.6 மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை, சில காரணங்களுக்காக தடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது.
சென்னை ஆவடியை சேர்ந்த சிவக் குமார் என்பவர், தெரு நாய்களுக்கான கருத்தடை மய்யம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் முன்பு நேற்று (5.11.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ரூ. 51 லட்சம் செலவில் அமைக்கப்படும் இந்த மய்யத்தில், நூற்றுக்கணக்கான நாய்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போதுமான கழிவுநீர் வசதிகள் செய்யப்படாமல் அமைக்கப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், “பாது காப்பான முறையில் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்த பின்னரே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப் பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்கள் நலனுக்கான சில திட்டங்களை நாம் அனுமதித்தே ஆக வேண்டும். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மய்யம் அமைக்கப்படுகிறது. மய்யத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகளை ஆக்கிரமிப்புகளாக கருத முடியாது” என தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
