கொல்கத்தா, நவ.5 தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நேற்று (4.11.2025) வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று மட்டும் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி “SIR –- 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமைதியான, கண்ணுக்குத் தெரியாத மோசடிக்கான அரசியல் கருவி” என விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா கூறியதாவது:- மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, ஒரு உண்மையான வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜக அரசு அடியோடு ஆட்டம் காணும். இந்த அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும். பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மட்டும் எஸ்.அய்.ஆர். நடத்துகிறது. ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
அடுத்த ஆண்டு அசாமிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த பாரபட்சம்?. இது தெளிவான பாகுபாடு. ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
