புதுடில்லி, நவ.5- செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் தாக்கம் மற்றும் செலவு குறைப்பு ஆகிய காரணங்களுக்காக அய்.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் பணிநீக்கம்
2020-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் உலகம் முழுவதும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் ஏற்பட்டது. இதனால் அய்.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை தனது ஊழியர்களை கொத்து கொத்தாக பணியிடை நீக்கம் செய்தனர் .
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் அசுரத்தனமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அது மிகவும் பிரபலமானதாக மாறிவிட்டது. சாதாரண கணக்குகள், புதிர்களை தீர்ப்பதில் இருந்து பெருநிறுவனங்களை தொடங்கி நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்துக்குமான யுக்திகளை தர வல்லதாக ஏ.அய். உருமாறிவிட்டது. இதனால் வணிகம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏ.அய். வளர்ச்சியடைந்துவிட்டது.
ஏ.அய்.யின் வளர்ச்சி
செலவுகளைக் குறைத்தல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றை ஏ.அய்.யே கவனித்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் ஏ.அய்.யை காரணம் காட்டி பெருநிறுவனங்கள் முதல் புத்தாக்க நிறுவனங்கள் வரை ஆட்குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த ஆண்டு இதுவரையில் உலகம் முழுவதும் ஏ.அய்.யை காரணம் காட்டி 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முன்னணி வணிக இணையத்தளமான ‘லே-ஆப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள 218 நிறுவனங்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 732 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
முன்னணி நிறுவனங்கள்
அதிகபட்சமாக முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்கள் 30 ஆயிரம் பேரை இதுவரை பணிநீக்கம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து பிரபல ‘சிப்’ தயாரிப்பு நிறுவனமான ‘இன்டெல் 24 ஆயிரம் பேரையும், உள்ளூர் அய்.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.) 20 ஆயிரம் பேரையும், அசெஞ்சர் 12 ஆயிரம் பேரையும், மைக்ரோசாப்ட் 9 ஆயிரம் பேரையும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ 600 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பட்டியல் மேலும் நீளும் எனப்படுகின்றன .
இதனால் மறைமுகமாக ஊழியர்களின் குடும்பங்கள், சிறு-குறு வியாபாரிகள் உள்பட லட்சக்க ணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களை குறைத்து ஏ.அய். தொழில்நுட்பம், கிளவுட் மற்றும் குவாண்டம் கம்யூட்டிங் போன்றவற்றில் கூடுதல் முதலீடு செய்யப்பட உள்ளதாக பெரு நிறுவனங்கள் தெரிவித்தன.
