புதுடில்லி, நவ.5- கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஜி20 நாடுகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜி20 நாடுகள்
சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் முதல் 20 பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 நாடுகள் உள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு உறுப்பினர் நாடுகள் கருப்பொருளை நிர்ணயித்து மாநாடு நடத்துவது வாடிக்கை. அந்தவகையில் இந்தாண் டுக்கான தலைமைத்துவத்தை தென் ஆப்பிரிக்கா ஏற்றுள்ளது.இந் தாண்டுக்கான கருப்பொருளாக ‘ஒற்றுமை, சமத்துவம், நிலைத்தன்மை உள்ளது.
இதனை மய்யமாக வைத்து ஜி20 கூட்டமைப்பின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் தலைமை யில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப் பிக்கப்பட்டது. இதில் உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை மையப்படுத்தி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
உலகளாவிய சமத்துவமின்மை
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உலகளாவிய சமத் துவமின்மை அவசர நிலையை எட் டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் காலநிலை முன்னேற்றத்துக்கு ஆபத்தாக தற்போதைய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
பிரபல இந்தியப் பொருளாதார மேதை ஜெயந்தி கோஷ் உள்ளிட்ட நிபுணர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அவர்கள், உலகளவில் உள்ள பெரும் பணக்காரர்களிடம் மட்டும் உலகின் மொத்த சொத்து மதிப்பின் 41 சதவீதத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதகுலத்தின் மொத்த தொகையில் கீழ் பாதி மக்கள், அதாவது 50 சதவீத மக்களிடம் வெறும் 1 சதவீதம் அளவிலான சொத்து மட்டுமே உள்ளதாக கண்டறி யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்காரர்கள்
மக்கள்தொகை பெருக்கம் கொண்ட நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் தனிநபர் வருமானம் உயர்ந்ததால் உலக நாடுகளுக்கு இடையேயான செல்வ சமமின்மை ஓர் அளவுக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வருமானம் கொண்ட நாடுகளின் பங்கை ஓரளவு குறைத்தது. அந்த அறிக்கையில் 2000 முதல் 2023-ஆம் ஆண்டு காலத்தில், உலகளவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகரித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவில் முதல் 1 சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு 2000-2023 காலத்தில் 62 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் இது 54 சதவீதமாகும்
பன்னாட்டுக் குழுவின் அறிக்கை
அரசியல் மனவலிமையால் இந்த நிலையை மாற்றலாம் என அறிக்கை தீர்வளித்துள்ளது. மேலும் அந்த அறிக்கை, பன்னாட்டு சமத்துவமின்மை குழு ஒன்றை உருவாக்க பரிந்துரைக்கிறது. இந்த குழு உலகளாவிய சமத்துவமின்மையின் போக்குகளை கண்காணித்து அரசு களுக்கான கொள்கை ஆலோசனைகளை வழங்கும். மேலும் அந்த அறிக்கையில், அதிகமான சமத்துவமின்மை கொண்ட நாடுகள்,சமமான நாடுகளை விட 7 மடங்கு அதிகமான அளவில் ஜனநாயக வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய வறுமை குறைப்பு செயல்முறை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய உலக மக்கள் தொகையில் 230 கோடி பேர் உணவு பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள். 130 கோடி மக்கள் மருத்துவ வசதியின்மையால் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
