புதுடில்லி, நவ.4- இந்திய செய்தித்தாள்கள் சங்கத்தின் (அய்.என்.எஸ்.) பொதுச் செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் மாநிலத்தில் 2.11.2025 அன்று பல மணி நேரங்கள் கடுமையான காவல்துறையின் சோதனைகளால் வாகனங்கள் தடுத்து நிறுத்தி வைக் கப்பட்டது. அதனால் செய்தித்தாள் வினியோகத்தில் பெரும் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் மக்கள் தங்களின் தினசரி செய்தித்தாள்களை பெற முடியாத நிலையும் உண்டானது.
மாநிலத்தின் பாதுகாப்பிற்காக காவல்துறை நடவடிக் கைகள் அவசியமானதாக இருந்தாலும், அவை செய்தித்தாள் வினியோகத்தைத் தடுக்கக்கூடாது. ஏனென்றால், வாசகர்கள் தினசரி செய்திகளை அறிந்து கொள்வதற்கான உரிமை, பத்திரிகை சுதந்திரத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. மேலும் அது மக்களின் தகவல் அறியும் உரிமையின் அடிப்படை ஒன்றாகவும் உள்ளது. எனவே பஞ்சாப் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, மாநிலம் முழுவதும் செய்தித்தாள் வினியோக வாகனங்கள் தடையின்றி சீராகச் செல்லும் வகையில், அனைத்து அலுவலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற தடைகள் மீண்டும் ஏற்படாதபடி தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகையே அழிக்கப் போதுமான
அணு ஆயுதம் இருக்கிறது: டிரம்ப்
இந்த உலகத்தையே 150 முறை அழிக்க போதுமான அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்து அதிக அணு ஆயுதங்களை வைத்திருப்பது ரஷ்யாவும் சீனாவும் தான் என கூறிய அவர், இன்னும் 5 ஆண்டுகளில் தங்களுக்கு இணையாக அணு ஆயுதங்களை கொண்ட நாடாக சீனா முன்னேறிவிடும் என கூறியுள்ளார். மேலும் அணு ஆயுதக் குறைப்பு குறித்து ரஷ்யா சீனாவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
