புதுடில்லி, நவ.4- டிஜிட்டல் கைது குற்றங்கள் மூலம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், எனவே இந்த விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளது.
தானாக முன்வந்து விசாரணை
அரியானாவின் அம்பாலாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதியை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.105கோடியை பறித்துக்கொண்டனர்.இதுதொடர்பாக போலியான நீதிமன்றம் உத்தரவுகளையும் அந்த தம்பதிக்கு அனுப்பி அவர்களை நம்ப வைத்தனர்.
மோசடி ஆசாமிகளிடம் பெருமளவு பணத்தை பறிகொடுத்த அந்த வயதான பெண் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கவாய்க்கு கடிதம் எழுதினார். எனவே இந்த மோசடியை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கடந்த மாதம் விசாரணை நடத்தியது.
அப்போது, நாடு முழுவதும் இத்தகைய முறைகேடுகள் நடப்பது கண்டு கவலை வெளி யிட்டதுடன், இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் சி.பி.அய். பதிலளிக்க அறிவுறுத்தி இருந்தது.
சி.பி.அய்.யிடம் ஒப்படைக்க விருப்பம்
பின்னர் கடந்த 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டிஜிட்டல் கைது குற்றங்களின் அளவு மற்றும் நாடு தழுவிய பரவலை பரிசீலித்து, அனைத்து டிஜிட்டல் கைது வழக்குகளையும் சி.பி.அய்.யிடம் ஒப்படைக்க விரும்புவதாக நீதிபதிகள் கூறினர். மேலும் சி.பி.அய். விசாரணையின் முன்னேற்றத்தை கண்காணித்து, தேவையான உத்தரவுகள் பிறப்பிப்போம் என்றும் கூறினர்.
அத்துடன், டிஜிட்டல் கைது தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரத்தை அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பூயன், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அமர்வு முன்பு நேற்று (3.11.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடுமையான உத்தரவுகள்
அப்போது இந்த பிரச்சினையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் சி.பி.அய். தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு ஒருவரை நீதிபதிகள் நியமித்தனர்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மூலம் மூத்தகுடிமக்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நாம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றால் இந்த விவகாரம் பெரிதாகிவிடும். நீதிமன்ற உத்தரவுகள் மூலம் நமது விசாரணை அமைப்புகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு கையாள முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
பின்னர் வழக்கின் விசாரணையை வருகிற 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அப்போது நீதிமன்றத்திற்கு உதவுபவரின் பரிந்துரையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
