சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை (எஸ்.அய்.ஆர்.) விசிக எதிர்க்கிறது என நேற்று (2.11.2025) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எஸ்.அய்.ஆர்-அய் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் எஸ்.அய்ஆர் நடவடிக்கையை அறிவித்திருப்பது நீதியை மறுப்பதாகும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இது தொடர்பாக கருத்து கேட்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (2.11.2025) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
விசிக எதிர்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்பேசும்போது கூறியதாவது:
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்போது வாக்காளர் ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பது கட்டாயம் எனத் தெரிகிறது. அவர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் வரும்போது வாக்காளர் இல்லை என்றால் அவருடைய பெயர் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது கிராமப்புறங்களில் இருக்கிற கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், படிப்பறிவில்லாத ஏழை எளியவர்கள் முதலானவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும்.
பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.
பழங்குடி மக்கள், குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் (nomadic tribes) பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் பெரும்பாலும் நீர்நிலைப் புறம்போக்கில் குடிசை போட்டு வாழ்வதால் பட்டாவோ, தொகுப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணையோ அவர்களிடம் இருக்காது. பலருக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைப்பதில்லை. எனவே அவர்களின் பெரும்பாலோர் வாக்காளர் பட்டியலில் விடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒரு மாத கால
அவகாசம் போதாது
ஒவ்வொரு வாக்காளரும் 2002, 2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும். எனவே அதற்கான அலுவலர் ஒரு நாளில் 20 வாக்காளர்களைக் கூட பதிவு செய்ய முடியாது. அவ்வாறு கணக்கிட்டால் இந்தப் பதிவுப் பணிக்கு சில மாதங்கள் தேவைப்படும். எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு ஒரு மாத கால அவகாசம் போதாது.
பழைய பதிவை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், இப்போதைக்கு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து விடலாம் என்று சொல்லப் படுகிறது. அவ்வாறு கொடுத்தால் அவர்களுக்கு தாக்கீது வழங்கப்படும். தாக்கீது வழங்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி தான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் என்.ஆர்.சி தயாரிப்பதற்கான வழிமுறையாகும்.
தேர்தல் ஆணையம் வாக்காளரின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றது அல்ல. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் தான் அது வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வாக்காளரின் குடியுரிமையை அது தீர்மானிக்க முடியாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மூலம் தேர்தல் ஆணையம் செயல்படுத்த முற்படுகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் நடவடிக்கையை அறிவித்திருப்பது நீதியை மறுப்பதாகும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ்.அய்.ஆர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத் தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டு மெனக் கேட்டுக்கொள்கிறோம். இதனிடையில் எஸ்.அய்.ஆர் குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
