அய்தராபாத், அக்.2 அய்.அய்.டி., ஜெ.இ.இ. நுழைவுத்தேர்விற்கு தேர்வு 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ளது. இதற்கு நவ.27-க்குள் இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி., அய்.அய்.அய்.டி., என்அய்டி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெ.இ.இ. மெயின் தேர்வுத் தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெ.இ.இ. மெயின் தேர்வு தாள்-2-ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன.
இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும்.அந்த வகையில் 2026- 2027ஆம் கல்வி ஆண்டில் மேற்கண்ட படிப்புகளின் சேர்க்கைக்கான முதலாவது ஜெ.இ.இ. மெயின் தேர்வு 2026-ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அய்அய்டி, அய்அய்அய்டி, என்அய்டி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி நவ.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மய்யத்தின் விவரம் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்படும். இத்தேர்வின் முடிவுகளை பிப்.12-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறும் 2-ஆவது ஜெ.இ.இ. மெயின் தேர்வுக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படு்ம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அய்.அய்.அய்.டி., என்அய்டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜெ.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதேநேரத்தில் அய்அய்டி-யில் சேர வேண்டுமானால் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டு்ம். ஜெஇஇ மெயின் தேர்வில் குறிப்பிட்ட தரவரிசைக்குள் இருப்பவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இழப்பீடு வெறும் நிவாரணம் அல்ல
உத்தரகண்ட் நீதிமன்றம் கருத்து
டேராடூன், நவ.2 உத்தரகண்டில் விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு நைனிடாலில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் 2024 நவம்பரில் ரூ.53.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் காப்பீட்டு நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் காப்பீட்டு நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதி அலோக் மெஹ்ரா பிறப்பித்த உத்தரவில், “மோட்டார் வாகனச் சட்டம் அன்பு, பாசம், குடும்ப ஆதரவை இழந்ததை ஈடு செய்கிறது. தீர்ப்பாயம் மிகவும் சரியாகவே தீர்ப்பு அளித்துள்ளது.
இழப்பீடு என்பது வெறும் நிதி நிவாரணம் மட்டுமல்ல, சமூக நீதியின் அடையாளம். மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில், நீதிமன்றங்கள் தாராளமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
அறிவியல் தகவல்
சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
சென்னை, நவ.2 எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று (2.10.2025) மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்ட்-டவுன் தொடங்கியது.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று அனுப்புகிறது
இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரூ.1,600 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ தூரம், அதிகபட்சம் 29,970 கி.மீ தொலைவு கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுண்ட்-டவுன் நேற்று மதியம் 3.56 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி இறுதிகட்ட பணிகளில்இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் தயாராகியுள்ள இந்த செயற்கைக்கோள் இந்திய கடற்படை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
