சென்னை, நவ.2 வடகிழக்குப் பருவமழையையொட்டி, குடிநீருடன் கழிவுநீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கூடுதல் இடங்களில் குடிநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக, மழைநீா் வடிகால்கள் மற்றும் கழிவு நீா்க் கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீா் பெருக்கெடுத்தது. இந்த நிலையில், குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் குடிநீர்க் குழாய்கள் அமைக்க குழி தோண்டும்போது, அவ்வழியாக கழிவுநீா் நேரடியாக குடிநீருடன் கலக்கும் அபாயம் உருவாகும். இதைத் தடுக்கும் வகையில், செப்டம்பா் மாத இறுதியுடன் புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆகையால், மழையின் போது குடிநீருடன் கழிவுநீா் கலக்கும் வாய்ப் புகள் மிகக் குறைவு.
வழக்கமாக மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் 300 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள்தோறும் 600 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுத்து தரப்பரிசோதனை செய்யப்படுகிறது.
அத்துடன், குடிநீருடன் கழிவுநீா் கலப்பு இருக்கும்பட்சத்தில் அவற்றை உடனடியாக சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
