‘‘மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மோகன் பாகவத் பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக உலகத்திற்கு தலைமை ஏற்று இந்தியா வழி நடத்திய போது எங்கும் மோதல் நடக்கவில்லை. உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும் சுயநலனே காரணம். இது அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இந்தியா முன்னேறாது. பிரிந்து போகும் எனக்கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது, பிரிட்டன் தான் பிரிவினையின் முனையில் நிற்கிறது. நாம் பிரிய மாட்டோம். நாம் முன்னேறிச் செல்வோம். ஒரு முறை நாம் பிரிக்கப்பட்டோம். ஆனால், நாம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
(ஆர்.எஸ்.எஸ்.வார இதழான ‘விஜயபாரதம்‘’ 3.10.2025 பக்கம் 4)
(1) மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியா உலகத்திற்கே தலைமையேற்று வழி நடத்தியதா? இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததா? அதுவும் மூவாயிரம் ஆண்டு காலமாக இருந்து வந்திருக்கிறதா?
முதலில் ஒரு கேள்வி, இந்தியா ஒரு நாடா? இவர்கள் நம்பும் புராணக் கருத்துகள்படியே பார்த்தாலும்கூட 56 தேசங்களாகத் தானே இருந்தது.
‘வெள்ளைக்காரன் துப்பாக்கி முனையில் ஒன்று சேர்த்ததுதான் இந்தியா’ என்பது பால பாடம் படிக்கும் சிறுவர்களுக்கும் தெரிந்த செய்தியே!
(2) இரண்டாவதாக, இந்தியா உலகத்திற்கே தலைமை தாங்கி வழி நடத்தியது என்பதற்கு ஆதாரம் உண்டா? 3000 ஆண்டு காலமாக உலகத்தையே இந்தியா தலைமை தாங்கி ஆட்சி நடத்தியது என்று கூற வருகிறாரா?
அறிவியல் வளர்ந்த காலத்திலும் இப்படியெல்லாம் ‘துணிச்சலாக’ ஆர்.எஸ்.எஸால்தான் புளுக முடியும்.
இந்தியாவில் கடந்த 3000 ஆண்டு காலமாக மோதலே நடக்கவில்லையாம்.
தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும்கூட இரண்டு உலகப் போர்கள் நடந்த விவரம் நன்றாகவே தெரியுமே!
உலகத்திற்குப் போவானேன்? ஆர்.எஸ்.எஸால் இந்தியாவில் ஏற்பட்ட மதக் கலவரங்கள் கொஞ்சமா நஞ்சமா!
பல்வேறு ஆணையங்கள் (கமிஷன்கள்) ஆர்.எஸ்.எஸின் தூண்டுதலால் ஏற்பட்ட கலவரங்களைப் பற்றி ஆதாரப் பூர்வமாக எடுத்துக் கூறியுள்ளனவே!
ஜெகன்மோகன் ரெட்டி கமிஷன், மதன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர நரேன் கமிஷன், ஜஸ்டீஸ் வேணுகோபால் கமிஷன் என்று நீண்டு கொண்டே போகுமே! அத்தனைக் கமிஷன்களும் ஆர்.எஸ்.எஸால் நாட்டில் நடைபெற்ற கலவரங்களை ஆதாரப்பூர்வமாக பட்டியலிடவில்லையா?
நம் காலத்தில் நம் கண் முன்பாகவே அயோத்தியில் 4.50 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பிஜேபி உள்ளிட்ட இந்து மதவாத வெறிக்கும்பல் ஒரு பட்டப் பகலில் இடித்துத் துவம்சம் செய்யவில்லையா?
(3) ஹிந்து மதம் என்ற பெயரே கூட வெள்ளைக்காரன் சூட்டியது தானே – இதனைக் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டு பதிவு செய்துள்ளாரே! இந்த இலட்சணத்தில் மூவாயிரம் ஆண்டு காலம் பற்றி எல்லாம் பேசுவது அறிவுடைமையாகாது என்பதையும், கடந்து பொய்களை உதிர்த்து மக்களை ஏமாற்றி, தங்களின் பார்ப்பன ஆதிபத்தியத்தைப் பலப்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகம் இதில் பதுங்கி இருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது.
(4) மதக் காரணங்களுக்காக ரத்தம் சிந்தப்பட்டதுதான் உலகில் அதிகம் என்று வரலாற்றின் பக்கங்கள் எல்லாம் பறைசாற்றுகின்றன.
(5) மற்ற மதங்களில் நடைபெற்ற மோதல்கள் இருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் தூக்கிப் பிடிக்கும் ஹிந்து மதத்தில் இல்லாத மோதல்களா?
பிறப்பிலேயே உயர்வு – தாழ்வுக் கற்பிக்கும் வருணாசிரமம் என்பது என்ன? அது பெற்றெடுத்த ஜாதிகள் என்பவை எல்லாம் மனித சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாசக்கரங்களை நீட்டக் கூடியவையா?
ஹிந்து மதத்தில் ஜாதி மோதல்கள் நடக்கவேயில்லையா? ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதெல்லாம், இந்து மதத்தில் நாம் எல்லோரும் சரி சமம் என்ற ஒற்றுமையை இறுகக் கட்டுவதற்கான பாசக் கயிறா… அந்தப் பூணூல்?
இவர்கள் கூறும் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் நான்காம் வருணமாக ஆக்கப்பட்ட சூத்திரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டா?
ரூ.1,800 கோடியில் அயோத்தியில் ராமன் கோயில் கட்டினார்களே (தினமலர் 30.10.2025) – அந்த ராமன் சூத்திரனாகிய சம்பூகன் தவம் செய்தான் – அது வருண தர்மத்திற்கு எதிரானது என்று வாளால் தலையை வெட்டினானே – இதுதான் 3000 ஆண்டு காலமாக இந்தியா தலைமையேற்று வழி நடத்தியதன் லட்சணமா?
ஹிந்து மதத்துக்குள்ளேயே வடகலை பார்ப்பான், தென் கலைப் பார்ப்பான் என்று உத்தி பிரிந்து நின்று ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரத்திலே கட்டிப் புரண்டு அடித்துக் கொள்கிறார்களே – முதலில் அதைத் தடுத்து நிறுத்த முன் வருவாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்?
வாய் இருக்கிறது என்று கண்டதையும் பேச வேண்டாம் ஏடு இருக்கிறது என்று எதையும் திரித்துக் கிறுக்க வேண்டாம்!
இது பெரியார் சகாப்தம் – மனுதர்மத்தைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்தால் அது ‘பூமாரங்காகத் திருப்பித் தாக்கும்’ என்பதை மறக்க வேண்டாம்!
