புதுடில்லி, நவ. 1– உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அவர் நியமிக்கப் பட்டுள்ளார். வரும் 24.11.2025 அன்று பதவி ஏற்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.சுவாய், 23.11.2025 அன்று தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதி பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதியை ஒன்றிய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அவர் மூத்த நீதிபதி சூர்யகாந்த் பெயரை பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டு. குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய சட்ட அமைச்சகத்தில் உள்ள நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். நாட்டின் 53-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் 24.11.2025 அன்று பதவி ஏற்கிறார். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்த அவர், 4.5.2019 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார். தனது 20 ஆண்டுகால நீதிபதி பதவிக்காலத்தில், 370ஆவது பிரிவு ரத்து, தேசத்துரோக சட்டம் நிறுத்திவைப்பு, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் வெளியீடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார்.
