பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்கள் தமிழர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார் !
இப்போது மட்டுமல்ல தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவது பா.ஜ.க.வின் அற்பத்தனமான நடைமுறை என்பதை அனைவரும் அறிவார்கள் !
பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவந்த பிரதமர் மோடி அவர்கள் பீகார் மக்களுக்கு ஒன்றிய அரசு செய்த சாதனைகளை திட்டங்களை எடுத்துச் சொல்லாமல் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் தி.மு.க.வினர் துன்பம் இழைப்பதாக ஒரு பொய்யான செய்தியை கூறி தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்தச் செய்தியை அறிந்தவுடன் தமிழ் மக்கள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
தமிழர்கள் ஏற்கெனவே பா.ஜ.க.வால் இழிவு படுத்தப்பட்ட முன் நிகழ்வுகள்:
தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் இப்படிக் குறை கூறி மக்களைத் திசை திருப்பும் போக்கு இப்போது மட்டுமல்ல பா.ஜ.க.வினரால் முன்பே பலமுறை கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவருடைய தனிச் செயலாளராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.கே. பாண்டியன் என்பதால், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் ஆலயக் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று கூறியதுடன், ஒடிசாவை தமிழர்கள் ஆள்வதா என தமிழர்களை திருடர்கள் போல் கேவலப்படுத்தி ஒரு பொய்யான வதந்தியை கிளப்பிவிட்டவர்தான் பிரதமர் மோடி அவர்கள்.
தமிழ்நாடு முழுவதிலும் பல இலட்சக் கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் வந்து தங்கி கூலி வேலைகள் செய்து மாதந்தோறும் பல கோடி ரூபாயை வடமாநிலங்களில் உள்ள தத்தம் குடும்பங்களுக்கு அனுப்பிக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வருவதை இன்றும் காணலாம்.
2023ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு பயணம் செய்யப் புறப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதை மய்யப்படுத்தி தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள், அதனால் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பு கிறார்கள் என்று அபாண்டமான ஒரு பொய்ச் செய்தியை பரப்பினார்கள். செய்தி வெளிவந்தவுடன் முதலமைச்சர் அவர்களே நேரிடையாக தலையிட்டு வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப் படவில்லை. அவர்கள் எல்லாம் அமைதியாக வாழ்கிறார்கள் என்பதை தொழிலாளர்களைச் சந்தித்து அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் பொய்ச் செய்தியை மறுத்தார்கள்.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள், குறிப்பாக பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் அவர்கள் பாது காப்பற்ற சூழலில் இங்கு வாழ்வ தாகவும் அடிப்படையற்ற வதந்திகளை பரப்பிய வடமாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் காஷ்யப் எனும் யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
கரோனா காலத்தில் புலம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு உதவிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன. அவர்கள் சொந்த மாநிலங் களுக்குச் செல்ல விரும்பியவர்களுக்கு ஆங்காங்கே ரயில் நிலையங்களில் உதவி முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
கொல்கத்தாவில் நிகழ்ந்த மேம்பால விபத்தில் 26 பேர் உயிரிழந்தபோது, அதனைக் கடவுளின் செயல், மம்தா ஆட்சியில் இருக்கக் கூடாது என கடவுள் அனுப்பிய செய்தி என்று மக்களின் இறப்பையும் பிரதமர் மோடி கொச்சைப்படுத்திப் பேசினார்.
இந்தியா முழுக்கப் பணிக்காகப் புலம்பெயர்ந்து வாழும் மேற்கு வங்க முஸ்லீம்களை “பங்ளாதேசி” என பா.ஜ.க. வெறுப்பை விதைக்கிறது.
வன்முறையாளர்களை அவர்கள் அணிந்துள்ள ஆடையை வைத்தே அடை யாளம் காணலாம் எனவும் இஸ்லாமிய மக்களைக் குறிவைத்துப் பிரதமர் மோடி இழிவாகப் பேசியுள்ளார்.
இது ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருப்பவர் பின்பற்றும் நடைமுறையாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்த மாகச் சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் பேசிய வடமாநிலத்துப் பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று. சமூக ஊடகங்களில் ஒரு முறை அதிகம் பரவியது. அது,
“முடியாத எனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான். ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாகச் செய்ய முடிந்தது. இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம்” என்று அளித்த பேட்டியானது யாராலும் மறக்க முடியாதது.
தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்.”
பா.ஜ.க. சொல்லும் பாதக மொழிகளை, பிரித்தாளும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவும் ஏற்காது!
